Published:Updated:

நியூட்ரினோ நிரந்தரத் தடை தமிழக அரசு கையில்!

நியூட்ரினோ நிரந்தரத் தடை தமிழக அரசு கையில்!
பிரீமியம் ஸ்டோரி
News
நியூட்ரினோ நிரந்தரத் தடை தமிழக அரசு கையில்!

நியூட்ரினோ நிரந்தரத் தடை தமிழக அரசு கையில்!

‘இந்தியாவின் அணு ஆராய்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும்’ என்று சொல்லப்பட்ட நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில், ‘இது நியூட்ரினோ திட்டத்துக்கான தடை அல்ல’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

 `புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் போன்ற துகள்கள் தவிர்த்து, பிரபஞ்சத்தில் வேறு சில துகள்களும் இருக்கலாம்’ என்று 1930-ல் அறிவியலாளர்கள் யூகித்தறிந்தனர். அவை பற்றி ஆய்வுகள் செய்வதன் மூலம் சூரியனும், பூமியும் தோன்றிய ரகசியங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி, உலகில் நடந்து வருகிறது. ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட சில இடங்களில் நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், கோலார் தங்கச் சுரங்கம் பகுதியில் 1970-ல் காஸ்மிக் கதிர்கள் குறித்த ஆய்வுகள் நடந்தன. அங்கு, ஆய்வைத் தொடர்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஆய்வகம் மூடப்பட்டது.

நியூட்ரினோ நிரந்தரத் தடை தமிழக அரசு கையில்!

அதன்பின் நியூட்ரினோ ஆய்வு, தமிழகத்தை நோக்கி வந்தது. 2009-ல் நீலகிரி மாவட்டம், சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முயற்சி நடந்தது. ஆனால், 2010-ல் அந்த வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால், இந்த முயற்சி தடைபட்டது. பிறகு, தேனி மாவட்டம் தேவாரம் அருகே ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முடிவானது. இந்தத் திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2011-ல் அனுமதி வழங்கியது.

இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல போராட்டங்களையும் நடத்தினர். ஆனாலும், அங்கு 2015-ல் ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அதேசமயம், எதிர்ப்பும் தொடர்ந்தது. இந்தத் திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார் வைகோ. அவரே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். ஒரு தரப்பினர் இந்தத் திட்டத்தை எதிர்த்தபோதிலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற சில அமைப்புகள் இந்தத் திட்டத்தை வரவேற்றதுடன், இதனால் பாதிப்புகள் இல்லை என அறிவியல் பூர்வமாக வாதிடவும் செய்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நியூட்ரினோ நிரந்தரத் தடை தமிழக அரசு கையில்!

 நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும், இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த அமர்வு, ‘நிபுணர் குழுவை அமைத்து, இந்தத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, நிபுணர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த நிலையில், ‘நியூட்ரினோ திட்டத்துக்குத் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்த ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்கிறோம்’ என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 இது குறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன், “ஒரு சாதாரண கட்டடத்துக்கு வழங்கப்படும் அனுமதியைப்போல, இந்தத் திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு, சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வறிக்கையை சலீம் அலி நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த நிறுவனம், இதுபோன்ற ஆய்வுகளைத் தயார் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்ல. நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு, பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, பல லட்சக்கணக்கான டன் பாறைகள் உடைக்கப்படும். அதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகளை இந்த நிறுவனம் ஆய்வு செய்யவில்லை. நியூட்ரினோ கற்றைகளை வைத்து ஆய்வுசெய்யும்போது, கதிர்வீச்சு அபாயங்கள் ஏற்படும். அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள், நீர் அடுக்குகள் பாதிக்கப்படாது என்பதற்கும் எந்தவித ஆய்வுகளும் இல்லை. `மதிகெட்டான் சோலை’ என்ற தேசியப் பூங்காவின் எல்லையிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில்தான் இந்தத் திட்டம் அமைகிறது. அதனால், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த அனுமதியை வாங்கவில்லை. இந்த வாதங்களை தீர்ப்பாயத்தில் எடுத்துவைத்தோம். அவற்றை ஏற்றுக்கொண்டுதான் தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது” என்றார்.

 இந்தத் திட்டத்துக்கான அனுமதியைத்தான் பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இதை, நியூட்ரினோ திட்டத்துக்கான தடை என்று எடுத்துக்கொள்ள முடியாது. முறையான சூழல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் இருக்காது என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழு, என்ன மாதிரியான அறிக்கையைத் தாக்கல் செய்யப்போகிறது என்பதையும் பொறுத்தே இந்தத் திட்டத்தின் எதிர்காலம் முடிவுசெய்யப்படும்.

- ஆ.பழனியப்பன்