Published:Updated:

“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்
“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்

“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்

பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தில் சமூகம், அரசியல் தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில், ‘இது தற்கொலையே’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இன்னொருபுறம், இளவரசன் மரணம் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு கமிஷன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ‘இளவரசன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றாலும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்’ என்று அடித்துச் சொல்கிறார், இளவரசன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் சம்பத்குமார்.

 இந்தச் சூழலில், தர்மபுரி நத்தம் காலனியில் உள்ள இளவரசனின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டில் ஒரே ஒரு குடும்பப் புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டு இருக்க, அதில் தன் அப்பாவின் தோளைப் பற்றியபடி இளவரசன் நிற்கிறார். இளவரசனின் அம்மா கிருஷ்ணவேணி, அந்தப் புகைப்படத்தை சில நிமிடங்கள் உற்றுப்பார்த்து விட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்...

 “அவன் தனியா இருக்கிற போட்டோவை மாட்டி, மாலை போட மனசு வரமாட்டேங்குது. அதான் கழட்டி வெச்சிட்டு, குடும்ப போட்டோவை மாட்டி வெச்சிட்டேன். ஆனாலும், இந்த போட்டோவை நிமிர்ந்துகூட  பாக்குறது கிடையாது. அதைப் பார்த்தா சோறு தண்ணி இறங்குமா, சொல்லுங்க?” என்று சொல்லி அமைதியாகிறார். போட்டோவில் இருக்கும் இளவரசனின் முகத்தில் நிலைகுத்தி நிற்கின்றன அவரின் கண்கள். பொலபொலவென்று கண்ணீர் கொட்டுகிறது.

“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்

  “இளவரசன் மரணம் தற்கொலை இல்லை என்று டாக்டர் சம்பத்குமார் சொல்லியிருக்கிறாரே?”

 “முதல்ல, அந்த டாக்டருக்கு எங்க வாழ்நாளுக்குமான நன்றியைச் சொல்லிக்கிறோம். உண்மையைச் சொல்றதுக்கு ஒரு சில பேராவது இருக்காங்களேனு மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஆரம்பத்துல இருந்து நாங்க அதைத்தான் சொல்லிக் கிட்டிருக்கோம். கேட்கத்தான் யாருமில்லை. கிட்டத்தட்ட ஒரு மாசம், திவ்யாவைப் பிரிஞ்சு என் மகன் இருந்திருக்கான். அப்பல் லாம் சாகாதவன், திடீர்னு ஏன் சாகணும்? காலையில எந்திருச்சு, குளிச்சிட்டு, அயர்ன் பண்ண சட்டையைப் போட்டுக்கிட்டு, வண்டியை எடுத்துக்கிட்டுப் போய் ரயில்ல விழுந்து அடிபட்டு சாவானா? தாங்கவே முடியாத துக்கத்துல இருக்கவனுக்கு வீட்ல தொங்க இடம் இல்லையா? அவன் எழுதுன கடிதத்தைத்தான் இப்போவரை போலீஸ் சொல்லிக் கிட்டே இருக்காங்க. அது, அவன் கையெழுத்தே இல்லை. இதை, ஆரம்பத்துல இருந்தே நாங்க சொல்றோம். ஆனா, யார்கிட்டயும் இதுக்குப் பதில் இல்லை. தன் மனைவியின் உயிருக்கும், மாமியார் உயிருக்கும் ஆபத்து இருக்குனு போலீஸ் ஸ்டேஷன்ல அவன் கைப்பட எழுதிக் கொடுத்த லெட்டர் இருக்குது. அதோட இதை ஒப்பிட்டுப் பார்த்தாவே உண்மை தெரிஞ்சிடும். என் மகன், நல்ல அழுத்தமான பையன். தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குக் கோழை இல்லை. இளவரசனை திவ்யா பிரிஞ்சப்போ... ‘என் மகன் வாழ்க்கைப் பாழாகிடுச்சே’னு அழுதேன். அதுக்கு அவன், ‘நான் அவளை நம்புனேன். ஆனா, அவ என்னைய விட்டுட்டுப் போயிட்டா. நீ என்னைய நம்பி இருக்கே. நீ கலங்காதே. உன்கூட கடைசி வரை நான் இருப்பேன்’னு சொன்னான். அவனா செத்துப் போறவன்? சொல்லுங்க. ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் சதி நடந்துக்கிட்டேதான் இருக்கு. உண்மைய சொன்னா, பிரச்னை வேற மாதிரி போயிடும்னு எல்லாரும் பயப்படுறாங்க. ஆனா, நிச்சயம் ஒருநாள் நீதி வெல்லும்.”

 “அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்த தரப்பில் இருந்து, உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்ததா? அல்லது, ஆதரவு எதுவும் வந்ததா? நீங்க கைவிடப்பட்டதா நினைக்கறீங்களா?”

 “அவங்ககிட்ட இருந்து எங்களுக்கு மிரட்டலும் வரலை, ஆதரவும் வரலை. அவங்களைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி, எல்லாரும் மனுஷத் தன்மையோட இருக்காங்களானு பாக்கணும். ஏன், ஆதிக்க சாதி வரைக்கும் போறீங்க. இங்கே உள்ள மக்களை எடுத்துக்கோங்க. இன்னைக்கு எத்தனை பேர் எங்களுக்காக நிக்கிறாங்க? இவுங்க கண்ணு முன்னாடி வளர்ந்த பையன்தானே இளவரசன். அவனால இவங்க பல கஷ்டங்களை அனுபவிச் சிருக்காங்க. அது உண்மைதான். ஆனாலும், அவனும் ஒரு உசுருதானே? அந்த உசுரும் வாழறதுக்கு ஆசைப்பட்டிருக்கும்தானே? தர்மபுரியில நீதிபதி விசாரணை நடத்தினார். அதைப் பத்தி, பேப்பர்ல விளம்பரம் குடுத்தாங்க. ஆனா, இங்கேயிருந்து ஒருத்தர்கூட போய் சாட்சி சொல்லலை. நம்ம மக்களே நமக்கு சப்போர்ட் பண்ணாதப்போ வர்ற வேதனை, அடக்குமுறையைவிட கொடுமையானது. நாங்க சொல்றத யாரும் ஏத்துக்க மாட்டேங்குறாங்க. ‘நீங்க பையனோட அம்மா, அப்பா. வேற யாராவது சாட்சி சொல்லுவாங்களா’னு கேக்குறாங்க. யார் வருவா சாட்சி சொல்ல? அந்த தண்டவாளத்து கிட்டதான் போய் கேக்கணும்.” 

“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்

“இளவரசன் இறந்த பிறகு, திவ்யா உங்களை என்றாவது பார்த்தாரா? இப்போது அவர் என்ன செய்கிறார்... எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“இளவரசனோட வாழ்ந்த ஒரு வருஷமும், திவ்யா எங்ககிட்ட பாசமாத்தான் இருந்துச்சு. திவ்யாவோட அம்மாகூட ரெண்டு முறை எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. அப்போ, ‘ஏதோ ஆனது ஆகிப்போச்சு. எனக்குப் பிடிச்சிருக்கு. என் பொண்ணைப் பத்திரமா பாத்துக்கோங்க’னு என்கிட்ட சொன்னாங்க. இளவரசன்கிட்டேயும், திவ்யாவோட அம்மா அடிக்கடி போன்ல பேசியிருக்காங்க. ஆனா, இளவரசன் இறந்த பிறகு அவங்க யாரும் திரும்பிப் பார்க்கலை. ‘திவ்யாவோட கையாலதான் இளவரசனோட இறுதிச்சடங்கு நடக்கணும்... அப்பத்தான் அவனோட ஆத்மா சாந்தி அடையும்’னு எவ்வளவோ சொல்லிப் பாத்தோம். ஆனா, அவுங்க ஆளுங்க திவ்யாவை விடவே இல்லை. இளவரசன் இறந்த பிறகு, திவ்யாவை ரெண்டு முறை பார்த்தேன். எங்க வீட்டு வழியா ஸ்கூட்டியில பாத்துக்கிட்டே போச்சு. வண்டியை நிறுத்தலை. எனக்குப் பாக்குறதுக்குச் சங்கடமா இருந்துச்சு. பார்வையைத் திருப்பிக் கிட்டேன். திவ்யாவோட அம்மா, தினமும் இந்த வழியாகத்தான் ஸ்கூட்டியில வேலைக்குப் போறாங்க. நான் அவங்களைப் பார்க்கவே கூடாதுனுதான் நெனப்பேன். ஆனா, சில நேரங்கள்ல என் கண்ணுல பட்டுடுவார். என்னைப் பார்த்துட்டா சிரிச்ச முகத்தோடு வண்டியை வேகமாக ஓட்டுவார். அது எனக்கு உறுத்தலா இருக்கும்.

 இளவரசன் இறந்த பிறகு, உலக நடப்புகளையும் செய்திகளையும் அதிகமாகப் பாக்குறேன். கெளசல்யாவை (உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி) நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. காதலிச்சவன் வெட்டுப்பட்டு இறந்த பிறகு... ‘அய்யோ! எனக்கு வேற வழி இல்லையே’னு பெத்தவங்க கால்ல போய் விழாம, கெத்தா நின்னு பெத்தவங்களுக்கு எதிரா சாட்சி சொல்லி, தன் காதல் கணவனைக் கொலை செஞ்சவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துருக்கு பாத்தீங்களா? அதுதான் உண்மையான காதல். கடைசிவரைக்கும் போராடணும். கெளசல்யாவுக்கு நான் தலைவணங்குறேன். கெளசல்யாவைப் பத்தி சொல்றதால, திவ்யாவை குறை சொல்றேன்னு நினைக்கக்கூடாது. திவ்யாவை நாங்க ஒருபோதும் பழிசொல்ல மாட்டோம். திவ்யாவோட சூழல் அப்படி.”

“ஒசந்த சாதிக்கார வயித்துல பொறந்திருந்தா... அவனை இந்த சமூகம் வாழவிட்டிருக்கும்!” - தர்மபுரி இளவரசன் தாய் உருக்கம்

“ஒரு தாயாகச் சொல்லுங்கள்... ‘நம்முடைய மகன் காதலிக்கவில்லை என்றால், இறந்திருக்க மாட்டான்’ என நீங்கள் நினைத்தது உண்டா?”

 “ஐயோ... ஒருநாளும் நான் அப்படி நினைச்சதே கிடையாது. ஒரு தாய் எப்படி மகனின் நியாயமான ஆசையைத் தப்புனு சொல்ல முடியும்? அப்படி நினைக்க அவன் ஒண்ணும் தீவிரவாதச் செயல்ல ஈடுபடலையே. காதல்ங்கிறது எல்லாருக்கும் வர்றதுதானே. அது என் மகனுக்கு மட்டும் வரக்கூடாதுனு நான் நினைப்பேனா? அதை நான் வெறுப்பேனா? என் வருத்தமெல்லாம், என் வயிற்றில் ஏன் பிறந்து தொலைஞ்சான் என்பதுதான். ஒசந்த சாதிக்காரி வயித்துல பொறந்திருந்தா, அவனை இந்தச் சமூகம் வாழவிட்டிருக்கும்ல? இந்த நெனப்புதான் அடிக்கடி வரும். இந்தத் தாழ்த்தப்பட்ட சாதிக்காரியோட வயித்துல பொறந்ததைத் தவிர, அவன் வேற எந்தப் பாவத்தையும் செய்யலையே.”

 அந்தத் தாய் பேசி முடிக்க... சுவற்றில் மாட்டப்பட்டிருந்த குடும்பப் புகைப்படம், வேகமாக வீசிய காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

- எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு