Published:Updated:

மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா
மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

பிரீமியம் ஸ்டோரி

விடுமுறை நாட்களில் மாஞ்சா நூலோடு பட்டம் விடுவதற்கு, மைதானங்களுக்கு வந்துவிடுகிறார்கள் பலர். வெறும் ஐம்பது ரூபாய் செலவழித்தால் கிடைக்கும் மாஞ்சா நூல், அவர்களுக்குத் தருவது மகிழ்ச்சி; அறுந்து சென்றுவிட்டால், ஏதுமறியா வேறொருவருக்கு அது தருவது மரணம். இதில் வேதனை... தடை செய்யப்பட்ட அந்த நூலை விற்பவரோ, வாங்கி பட்டம் விடுபவரோ, அந்த மரணத்தின் வலியைத் துளியும் உணர்வதில்லை என்பதுதான்!  

சிவபிரகாஷின் குடும்பம் அந்த வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது. தன் தந்தை சந்திரசேகருடன் சென்னை, அனகாபுத்தூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார் சிவபிரகாஷ். திடீரென அவரது ஹெல்மெட் முன்னே பூச்சி போல் ஏதோ ஒன்று வந்து விழ, கையால் லேசாக அதைத் தட்டி விட்டிருக்கிறார். அது ஹெல்மெட்டில் பட்டு வழுக்கி, கழுத்துக்கு வந்து இறுக்கிய போதுதான் தெரிந்தது... அது மாஞ்சா நூல் என்று. இதில் கொடுமை என்னவென்றால், நூல் இறுக்கி கொஞ்ச நேரத்துக்கு அவர் கழுத்திலிருந்து ரத்தம் வந்ததே தெரியவில்லை. பில்லியனில் உட்கார்ந்திருந்த அப்பா சந்திரசேகர்தான் இதை உணர்ந்து, துடிதுடித்து ஆம்புலன்ஸுக்குச் சொல்லி, அது வருவதற்குள்... எல்லாமே முடிந்துவிட்டது. தனது கண் முன்னேயே தனது செல்ல மகன் துடிதுடிக்க இறந்ததைப் பார்க்கும் கொடுமை எந்தத் தந்தைக்கும் வரக்கூடாது.

மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

“காத்தாடி நூல்... காத்தாடி... சிவா...” என்று மனநிலை பாதித்தவர் போல புலம்புகிறார் சந்திரசேகர். அவர் மட்டுமல்ல... கொளத்தூரில் உள்ள சிவபிரகாஷின் மொத்தக் குடும்பமுமே இடிந்து போயிருக்கிறது. நாம் சிவபிரகாஷின் வீட்டுக்குச் சென்றபோது, “அப்பா எப்ப வருவாரு... நா கோச்சுக்கலைனு சொல்லுங்க அண்ணா!” என்று நடந்தது எதுவுமே தெரியாமல் வாசலையே பார்த்தபடி சொல்கிறாள், அவரின் ஐந்து வயது மகள் திவ்யலட்சுமி. இன்னொரு மகள் தனலட்சுமி, 7-ம் வகுப்பு படிக்கிறாள். ‘அப்பா இனி வரமாட்டார்’ என்பது புரிந்திருக்கிறது. அப்பா சிவபிரகாஷின் புகைப்படத்துக்கு முன்பு அழுதுகொண்டிருந்த அம்மா ராஜலட்சுமியை, “அழுவாதம்மா...” என்று தனலட்சுமி தேற்றுவதைப் பார்க்க பெரும் வேதனையாக இருந்தது.

கஷ்டப்பட்டுத்தான் பேசினார் ராஜலட்சுமி. “யார்கிட்டயும் அதிர்ந்துகூடப் பேசாத மனிதர். அவருக்குப் பொண்ணுங்கன்னா அவ்ளோ செல்லம். அவங்களுக்கு விளையாட்டுப் பொருள் வாங்கித் தரணும், எங்கேயாவது வெளியே கூட்டிட்டுப் போகணும்னுதான் சொல்லிட்டே இருப்பார். பொண்ணுங்களையும் சும்மா சொல்லக்கூடாது. அவர் நைட் எத்தனை மணிக்கு வந்தாலும், அவர்கூட விளையாடிட்டுத்தான் தூங்கவே போவாங்க! இப்பவும் டெய்லி நைட் ‘அப்பா எப்போம்மா வருவாரு’னு காத்திருக்கா சின்னவ. என்ன சொல்றதுன்னே தெரியலை!” என விசும்பி அழுகிறார்.

சிவபிரகாஷின் அம்மா மோகனசுந்தரி, “என் மகன் என்னை விட்டுப் போயிட்டான். அதைப் பார்த்த அவங்க அப்பா, இதுவரைக்கும் வாய்விட்டுக்கூட அழவில்லை. அவருக்கும் பைக்ல இருந்து விழுந்ததில் கை, காலெல்லாம் அடி. அவன் இறந்ததில் மனசு ரொம்ப பாதிச்சுடுச்சு. எங்களுக்கு மூணு பொண்ணுங்க. கடைசி பையன்தான் சிவபிரகாஷ். எல்லாரும் பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்த்த பையன். இப்படி பாதியிலேயே போய்ட்டான்.  நான் இவரைப் பார்ப்பேனா... பேரக் குழந்தைகளைக் கவனிப்பேனா... இல்லை, மருமகளுக்கு ஆறுதல் சொல்வேனா...  ஒண்ணுமே புரியலை தம்பி” என்று தவிக்கும் அவர் குரலில் வேதனை நிறைந்துள்ளது.

மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

சில விபத்துகளை ‘விதி விளையாடிவிட்டது’ என்று சொல்லலாம். ஆனால், பாதுகாப்பாக ஹெல்மெட் போட்டு பைக்கில் போகிறவர், மாஞ்சா நூல் அறுத்து இறப்பது, விதியின் விளையாட்டில்கூட சேர்த்துக்கொள்ள முடியாத ரகம். கழுத்தறுபட்டுக் கிடந்த நிலையில், போனை எடுத்து ஏதோ சொல்ல முயன்றிருக்கிறார் சிவபிரகாஷ். ஆனால், கழுத்து வழியாகப் பீறிட்ட ரத்தம், வார்த்தைகளையும் நினைவுகளையும் வர விடவில்லை. அப்படியே அப்பா மடியில் சரிந்தவர்... அங்கேயே இறந்துவிட்டார்.

இந்த மரணம் பற்றி காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்? சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் கேட்டோம். “அந்தக் கயிறு எந்த திசையில இருந்து வந்துச்சுனு தெரியலை. அந்தக் கயித்தை யாரு விட்டாங்கன்னும் கண்டுபிடிக்க முடியலை. இனிதான் விசாரிக்கணும். மாஞ்சா கயிற்றை விற்ற ரெண்டு பேரு மேல கேஸ் போட்டு இருக்கோம். நாங்களும் கண்காணிச்சுட்டேதான் இருக்கோம். அதையும் மீறித்தான் இப்படி நடக்குது. மக்கள்தான் உணரனும்” என்றார். 

மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

“நான் பி.எஸ்சி, பி.எட் படிச்சு இருக்கேன். ‘சென்னையில ஒருத்தர் மட்டும் வேலைக்குப் போய் சம்பாதிச்சு குடும்பம் நடத்தறது கஷ்டம். நானும் ஏதாவது வேலைக்குப் போறேன். வேலை வாங்கிக்கொடுங்க’னு கணவர்கிட்ட அடிக்கடி சொல்வேன். ‘உனக்கு நான் என்ன குறை வெச்சேன்? நீ வீட்டுல இருந்து நம்ம பொண்ணுங்களைக் கவனிச்சுக்கோ. ரெண்டு பேரையும் நல்லா படிக்க வை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்’னு சொல்வார். ஆனா, இப்படி நிரந்தரமா எங்களை கஷ்டத்துல தவிக்க விட்டுட்டுப் போயிட்டார். மாமனார், மாமியாருக்கும் 70 வயசுக்கு மேல ஆகிடுச்சு. என் கணவருடைய பொறுப்பை எல்லாம் இனி நான்தான் எடுத்துச் செய்யணும். அரசாங்கம் எனக்கு வேலை தந்து உதவணும். அதேமாதிரி, என் கணவர் இறந்து இதுவரைக்கும்  காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தாங்கனு தெரியலை. கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறாங்க. மாஞ்சா கயிற்றுல பட்டம் பறக்க விட்டவங்களையும், அந்த கயிற்றை வித்தவங்களையும் கைது செய்து, கடுமையா நடவடிக்கை எடுக்கணும். அவர் சாவுக்குக் காரணமா இருந்தவங்களைக் தண்டிக்கணும். என் கணவரே இந்த மாஞ்சா கயிறுக்குப் பலியான கடைசி உயிராக இருக்கட்டும்” என்றார் ராஜலட்சுமி கோபமாக.

ஆனால், சிவபிரகாஷ் மரணச் செய்தியின் ஈரம் உலர்வதற்குள், அடுத்த செய்தி. ‘மாஞ்சா கயிறு அறுத்து சென்னையைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணுக்குப் படுகாயம். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்’. 

மஞ்சள் கயிறை அறுத்த மாஞ்சா கயிறு! - மீண்டும் பலிவாங்கும் மாஞ்சா

யாரோ ஒரு சிவபிரகாஷ், யாரோ ஒரு பாரதிக்கு நேர்ந்த பாதிப்பு எனச் சமூகம் இதையும் கடந்து போய்க்கொண்டே இருக்குமா?

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ப.சரவணகுமார்

மாஞ்சா ஹிஸ்டரி!

றுதியான பருத்தி நூலே முன்பெல்லாம் பட்டங்கள் விட பயன்பட்டன. நைலான் கயிறு மெல்ல நுழைந்து அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டது. இந்த நைலான் நூல் மீன்பிடி வலைகளிலும், மிலிட்டரி சாதனங்களிலும் பயன்பாட்டில் உள்ளதுதான். முன்பு சீனாவிலிருந்து மட்டுமே இறக்குமதி ஆகிக்கொண்டிருந்த இது,  இப்போது இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது. நைலான் கயிற்றில் பொடியாக அரைக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள் பூசியும், தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் மற்றும் உலோகங்கள் பூசியும் மாஞ்சா கயிறு தயாரிக்கப் படுகிறது.  மாஞ்சா நூல் சுலபமாக மக்காது என்பதால், பல வருடங்கள் அப்படியே இருக்கும். மின் வயர்களில் இவை சுற்றிக் கொள்வதால், பல நேரங்களில் பவர் கட் ஆகிறது. மரம், மின்கம்பம், கூரையின் மேற்பகுதி போன்ற இடங்களில் சுற்றிக்கொள்ளும் இந்தக் கயிற்றினால், பறவைகளும், மிருகங்களும் கூட பாதிப்புகளுக்கு உள்ளாகி பலியாகின்றன. எதிர்பாராத விதமாக மனிதர்களையும் சில நேரங்களில் காவுவாங்குகிறது இந்த நூல்.

தமிழகம், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஆந்திரா, தெலங்கானா என பல மாநிலங்களில் மாஞ்சா நூலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாஞ்சா நூலில் பட்டம் விட்டால், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு