பிரீமியம் ஸ்டோரி

ருமுறை கலைஞர் அரங்கத்தில், கருணாநிதி தலைமையில் பரிசளிப்பு விழா. நல்ல ஏசி. அரங்கு சில்லென்று இருந்தது. மேடையில் எழுத்தாளர் அசோகமித்திரனும் இருந்தார். அந்த நேரத்தில் பொன்னாடை போர்த்தினார்கள். ‘‘குளிருக்கு இதமா இருக்கு... நன்றி’’ என்றார் அசோகமித்திரன். ஒரு விழாவில், சென்னையில் 99 வீடு கட்டி வாழ்ந்த நல்லம்ம செட்டி பற்றி நான் எழுதியிருந்த விஷயங்களைச் சொல்லிவிட்டு, ‘‘ஏன் 100 வீடு கட்டலைன்னு தெரியலை... கண்ணு படும்னு நினைச்சிருக்கலாம்’’ என்று அவர் சொன்னபோது சிரிப்பலை.

சோகம் இல்லாத நண்பர்!

மிகச் சுருக்கமாகக் கருத்தைச் சொல்லுவார். ஆழ்ந்த நகைச்சுவைதான் அவருடைய எழுத்தின் மிகப் பெரிய பலம். ‘தடம்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘உண்மைதான் மிகப் பெரிய நகைச்சுவையாக இருக்கிறது’’ என்றார். இன்னொரு விதமாக, ‘‘நகைச்சுவைதான் மிகப் பெரிய உண்மையாகவும் இருக்கிறது’’ என தனது கதைகள் மூலமாக அசோகமித்திரன் சொன்னார். எலி பிடிக்க மசால் வடை வாங்கப் போகிற ஒரு மைய வர்க்க ஆசாமியின் மனநிலைதான் அவருடைய ஒட்டுமொத்த சிறுகதைகளின் ஆதாரம்.

‘தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் பற்றிய கதை. ஏதோ கோயிலின் பெயரைச் சொல்லி அங்கு இரவு தங்கிவந்தால் அந்தப் பிரச்னை சரியாகிவிடும் எனக் கருத்து சொல்வார்கள். அந்த இரவில் கோயிலில் அவர் தூங்கும்போது சிறுநீர் கழித்துவிடுவார்...’ இப்படித்தான் வாழ்க்கையின் முரண்களை முன்வைத்தார்.

ஆங்கிலத்திலும் சரளமாக எழுதும் திறமை அவருக்கு இருந்தது. எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த அவருக்கு, அந்தத் திறமைதான் வாழ்க்கையை ஓட்டுவதற்குக் கைகொடுத்தது. எளிமையான வாழ்க்கைக்கு அவர் பழகியிருந்தார். ஏறத்தாழ இருபது ஆண்டு காலம் அவரைச் சைக்கிளோடுதான் பார்த்தேன். தி.நகரில் இருந்த நர்மதா பதிப்பகம், திருவல்லிக்கேணியில் இருந்த கணையாழி அலுவலகம் என அவர் சென்னையைக் குறுக்குவெட்டாக சைக்கிளில் வலம்வந்தவர். 80 வயதுக்குப் பிறகு கம்ப்யூட்டரில் கதை டைப் செய்ய பழகினார். மெயில் அனுப்பப் பழகினார். அவர் எதற்கும் தயாராக இருந்தார். ‘பிடித்த வாக்கியம் ஒன்று சொல்லுங்கள்’ என்றபோது, ‘‘போய் வருகிறேன்’’ என்றதில் இருந்தது அந்தத் தயார் நிலை. அவருடைய மறைவு இலக்கியத்துக்கு இழப்பு.

சமுதாயத்தைப் புரட்டிப்போடும் எந்தப் பிரயத்தனமும் அவருடைய கதைகளில் இருந்தது இல்லை. உண்மையை,  சம்பவத்தை அவர் எந்தப் பதற்றமும் இல்லாமல் நகைச்சுவையாகவும் நேர்மையாகவும் மக்கள் முன் வைப்பார். தேவை இல்லாமல் ஒரு வார்த்தைகூட அவரின் கதைகளில் இடம் பெற்றது இல்லை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒருமுறை, ‘அசோகமித்திரன் எழுத்துக்களைப் படிக்கும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது. எழுதி முடித்ததும் ஒரு வரிக்கு அடுத்த வரியை அடித்துவிடுவார் போல அத்தனை ரத்தினச் சுருக்கமாக இருக்கிறது’ என எழுதியிருந்தார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்தான் அவருடைய பாணி. சாதனையும்கூட!

‘ஆயிரம் பக்கங்களில் நாவல்கள் எழுதுகிறார்களே’ என்று கேட்டேன் ஒரு முறை. கண்களை விரித்துச் சிரித்தார்... பிறகு கண்களை சுருக்கிச் சிரித்தார். அந்தக் கேள்வியால் அவர் ஆச்சர்யப்பட்டாரா, முகம் சுளித்தாரா என்பதை நேரில் பார்த்த எனக்கும் புரியவில்லை. ஆனால், ‘‘பெரிய புஸ்தகத்தைத் தூக்கிவெச்சு படிக்கிறது சிரமம்... எனக்கு’’ என்றார்  சுருக்கமாக.

- தமிழ்மகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு