Published:Updated:

கலெக்டர் போலி கையெழுத்து... தாதுமணல் கொள்ளை.. சரியும் வைகுண்டராஜனின் ராஜ்ஜியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலெக்டர் போலி கையெழுத்து... தாதுமணல் கொள்ளை.. சரியும் வைகுண்டராஜனின் ராஜ்ஜியம்!
கலெக்டர் போலி கையெழுத்து... தாதுமணல் கொள்ளை.. சரியும் வைகுண்டராஜனின் ராஜ்ஜியம்!

தடுக்கப் போராடும் தமிழக அரசு!

பிரீமியம் ஸ்டோரி

நான்கு வருடங்களுக்கு முன்பு கனிம மணல் ஆலைகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், குடோன்களுக்கு இப்போது சீல் வைத்து சாட்டையைச் சுழற்றி இருக்கிறது, தமிழக அரசு.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் கனிம மணல் கொட்டிக் கிடக்கிறது. இந்த மணலில் இருந்து கார்னெட், ரூட்டைல், இலுமினைட், சிர்கான், மோனோசைட் எனப் பிரித்தெடுக்கப்படும் அரிய கனிமங்களுக்கு சர்வதேசச் சந்தையில் பெரும் கிராக்கி. தாது மணல் ஆலைகள் போட்டி போட்டுக்கொண்டு, அனுமதியே பெறாமல் இயங்கி, கோடிக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்டதுதான் உச்சகட்டக் கொடுமை!

கலெக்டர் போலி கையெழுத்து... தாதுமணல் கொள்ளை.. சரியும் வைகுண்டராஜனின் ராஜ்ஜியம்!

‘விதிமுறைகளை மீறி தாது மணல் ஆலைகள் செயல்பட்டு, அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தி வருகின்றன’ எனத் தொடர்ந்து புகார் அளித்த போதிலும், அரசும் தாது மணல் மாஃபியாக்களும் கூட்டணிப் போட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் கனிம மணல் ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்த வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட... தாது மணலில் இருந்து கனிமங்களைப் பிரிக்கவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது. அத்துடன், முறைகேடுகள் பற்றி விசாரிக்க ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனாலும், முறைகேடாக கனிம ஆலைகளை இயக்கியதுடன், அவற்றை ஏற்றுமதியும் செய்துவந்தனர். இதனைக் கண்டுபிடித்த நெல்லை கலெக்டர் கருணாகரன், தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களுக்குக் கடிதம் அனுப்பினார். இதனால், கனிமங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை உருவானது.

கலெக்டர் போலி கையெழுத்து... தாதுமணல் கொள்ளை.. சரியும் வைகுண்டராஜனின் ராஜ்ஜியம்!

வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மட்டும், தடையை மீறி ஆலைகளை இயக்கியதாகவும், கனிமங்களைப் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் புகார் எழுந்தது. இதற்காக தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் பெயரில் போலியாக அனுமதிச் சான்று, தூத்துக்குடி துறைமுகத்துக்கும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதும் அம்பலமானது. இதனால் 420 மெட்ரிக் டன் கார்னெட் ஏற்றுமதி செய்ய இருந்ததை சுங்கத் துறை தடுத்து நிறுத்தியது. கலெக்டர் கையெழுத்தைப் போலியாக போட்டு ஆவணங்களைத் தயாரிக்க உதவிய தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி கிருஷ்ணமோகன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். முறைகேடாக ஏற்றுமதி செய்ய வி.வி.மினரல்ஸ் நிறுவனம் முயற்சி செய்ததால், தூத்துக் குடியில் உள்ள ஆலைகள், குடோன்களை சோதனை நடத்தியபோது 25 மெட்ரிக் டன் தாது மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்றுமதி செய்ய இயலாத வகையில் 19 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நெல்லை மாவட்டத்திலும் 15 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன.

நெல்லை கலெக்டர் கருணாகரனிடம் பேசினோம். ‘‘தாது மணல் எடுக்கத் தடை உள்ள நிலையில், ஆலைகள் தடையை மீறி செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆய்வு செய்தபோது, வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று கன்டெய்னர்களும், ஒரு லோடரும் பறிமுதல் செய்யப்பட்டன. தாது மணலை வி.வி.மினரல்ஸ் அள்ளுவது நிரூபண மானது. அபராதம் செலுத்த அவர்கள் முன் வந்தார்கள். ஆனால், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வி.வி.மினரல்ஸ், தொடர்ந்து கனிமங்களை ஏற்றுமதி

கலெக்டர் போலி கையெழுத்து... தாதுமணல் கொள்ளை.. சரியும் வைகுண்டராஜனின் ராஜ்ஜியம்!

செய்து வந்ததால், கேட் பாஸ், போக்குவரத்து அனுமதி ஆகியவை இருந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்குமாறு சுங்கத் துறையினருக்கும் துறைமுக அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினோம். இதனால் தூத்துக்குடி துறைமுகம் வழியாக கனிமங் களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அவர்கள் கேரளாவின் கொச்சி துறைமுகம் வழியாக ஏற்றுமதியைத் தொடர்ந்தனர். இதுபற்றி அறிந்ததும் அங்கும் கடிதம் கொடுத்து, ஏற்றுமதியைத் தடை செய்தோம். இதனால் என் மீது அவதூறுகளைப் பரப்பி நெருக்கடி கொடுத்தார்கள். தூத்துக்குடி கலெக்டரின் அனுமதிக் கடிதத்தையே போலியாக தயாரித்திருக்கிறார்கள். எனவேதான் கனிம குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அனுமதி பெறாமலேயே கனிம ஆலைகள் இயங்கியிருக்கின்றன. அந்த ஆலைகளுக்கான மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லியிருக்கிறோம். இயந்திரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் முழுமையாக அவர்கள் செயல்படுத்தவில்லை. ஆலைகளுக்கான கட்டடமும் எந்த அனுமதியும் பெறாமல் விதிமுறையை மீறி கட்டப்பட்டிருக்கிறது. அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இன்னும் தோண்டினால் எத்தனை கனிம பூதங்கள் கிளம்புமோ?

- ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு