Published:Updated:

சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!
சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!

சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!

பிரீமியம் ஸ்டோரி

`சீமைக்கருவேல மரங்களை ஏலம் விடுவதில் கமிஷன் கேட்கிறார், தனக்கு வேண்டியவர்களுக்கு கான்ட்ராக்ட்களை வாரி வழங்குகிறார்’ எனச் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழிக்கு எதிரான குற்றச் சாட்டுகள் பரபரக்கின்றன.

‘சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்’ என்று தமிழகத்தின் 13 தென் மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கடந்த ஜனவரி 10-ம் தேதி உத்தரவிட்டது. அதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிட, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலையரசன், செல்வம், வைத்தியநாதன் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தனர். பூவந்தி, திருமாஞ்சோலை, படமாத்தூர், முத்துப்பட்டி, மானாமதுரை ஆகிய பகுதிகளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.

சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!

அதிகமான கண்மாய்களைக் கொண்டது சிவகங்கை மாவட்டம் என்பதால், ‘‘கண்மாய்களையே காணோமே’’ என்று கலெக்டர் மலர்விழியிடம், நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதற்கு ‘‘கண்மாய்களை கருவேல மரங்கள் மறைத்துள்ளன’’ என்று கலெக்டர் சொல்லியிருக்கிறார். ‘‘அப்படீன்னா, கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை ஏன் வெட்டவில்லை?’’ என்று நீதிபதிகள் கோபமாகக் கேட்டுள்ளனர். படமாத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் கருவேலமரங்கள் அகற்றப்படாமல் இருந்தன. அதைப் பார்த்த நீதிபதிகள், ‘‘இங்கே ஏன் இந்த மரங்களை அழிக்கவில்லை’’ என்று கேட்டுள்ளனர். ‘‘எல்லைப் பிரச்னையால் தாமதம் ஆகிறது’’ என்று கலெக்டர் சொன்ன பதிலைக் கேட்டு, ‘‘எல்லைப் பிரச்னை வருவதற்கு இது என்ன பாகிஸ்தான் பார்டரா?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கலெக்டர் மௌனமாகிவிட்டார்.

படமாத்தூரிலிருந்து சிவகங்கையை நோக்கி நீதிபதிகள் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கார்களில் வந்தனர். வரும் வழியில், நல்லாகுளம் அருகே வேம்பத்தூரைச் சேர்ந்த பசும்பொன்ராஜா என்பவர் காரை மறித்தார். நீதிபதி செல்வத்திடம், “அய்யா, நான் சீமைக்கருவேல மரங்களை அகற்ற முலைக்குளம் கிராமத்தில் டெண்டர் எடுத்துள்ளேன். கிராமத்துக்குப் பல லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். அதுதவிர, வருவாய்த் துறை அதிகாரிகளும் பணம் கேட்டு என்னை டார்ச்சர் செய்கிறார்கள். வெட்டிப் போட்ட மரங்களை எடுக்கவிடாமல் தடுக்கிறார்கள். இது சம்பந்தமாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று முறையிட்டார். அதற்கு, ‘‘மாவட்ட கலெக்டர் வந்துள்ளார். அவரிடம் புகார் கொடுங்கள்’ என்று நீதிபதி கூறினார்.

சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!

கலெக்டரிடம் பசும்பொன்ராஜா சென்றவுடன், ‘‘இவரை அரெஸ்ட் பண்ணுங்க’’ என்று போலீஸிடம் கலெக்டர் கூறியிருக்கிறார். அது, நீதிபதி காதில் விழுந்தது. ‘‘கைது செய்வதை விட்டுவிட்டு, அவருடைய குறையைச் சரிசெய்து கொடுங்கள்’’ என்று கலெக்டரிடம் நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.

கலெக்டர் மலர்விழி மீது பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். சிவகங்கை தி.மு.க நகரச் செயலாளர் துரைஆனந்த், “சீமைக்கருவேல மரங்களை அகற்றச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு போடுறதுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, டெண்டர் அட்வான்ஸ் பத்து லட்சம் ரூபாய் என முடிவு பண்ணிட்டாங்க. ‘கொஞ்சம் குறைச்சீங்கன்னா நல்லா இருக்கும்’னு கலெக்டர்கிட்ட சொன்னோம். உடனே, டெண்டரையே கேன்சல் பண்ணிட்டாங்க. கருப்பையா என்கிற ஒருத்தர்கிட்ட செக் வாங்கிட்டு, கலெக்டரே ஆள் வெச்சு வெட்டுனாங்க. ‘மாவட்ட நிர்வாகமே சீமைக்கருவேல மரங்களை அழிக்கிறாங்க’னு நாங்க நெனச்சோம். ராத்திரியோட ராத்திரியா எல்லா விறகையும் கடத்திட்டாங்க. பிறகுதான், இதில் கலெக்டர் கணவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. வருவாய் அதிகாரிகள், சிவகங்கை தாலுகா முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் போய், ‘கிராமத்துக்குனு ஒரு தொகையைத் தந்துருவாங்க. நாங்க சொல்ற ஆளுக்கு நீங்க கையெழுத்துப் போட்டு கொடுத்திருங்க’னு சொல்லி, கலெக்டரோடு சேர்ந்து இதைச் செய்தாங்க’’ என்றார்.

சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜெயராமன், ‘‘கொட்டகுடி பஞ்சாயத்து லிமிட்ல தேசிய நெடுஞ்சாலைக்கான வேலை நடக்குது. அனுமதியே இல்லாமல் மண்ணை அள்ளிவந்து ரோடு போடுறாங்க. கிட்டத்தட்ட ஒன்னரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணை அள்ளிட்டாங்க. இவங்கள நம்பி மாவட்டம் முழுவதும் கருவேலமரத்துக்குப் பணத்தைக் கொடுத்துட்டு வெட்ட முடியாம கான்ட்ராக்ட்காரங்க முழிச்சுட்டு இருக்காங்க’’ என்றார்.

சிவகங்கை சீமை... சீமைக் கருவேல சர்ச்சை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, “தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்க, 95 அரசுப் பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டன. அந்தப் பள்ளிகளில் நாப்கின் வெண்டிங் மெஷின்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இதில் கலெக்டர் சொன்ன நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது முறைகேடான உத்தரவு’’ என்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்பதற்காக கலெக்டர் மலர்விழியை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ‘‘என் கணவருக்கு பெட்ரோல் பங்க், விவசாயம் என தொழில்கள் இருக்கிறது. நான் எந்த கான்ட்ராக்டரிமும் கமிஷன் கேட்டது இல்லை. எனக்கு வேண்டாத சில அதிகாரிகள், இப்படி கிளப்பிவிடுகிறார்கள். என் அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமரா இருக்கிறது. அதை செக் பண்ணுங்கள். அதில் நான் பணம் வாங்கியது தெரியவந்தால், நான் வேலையையே விட்டுவிடுகிறேன்’’ என்றார் சூடாக.

- தெ.பாலமுருகன்
படங்கள்: சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு