Published:Updated:

நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்!
நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்!

நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்!

பிரீமியம் ஸ்டோரி

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக சந்திக்கச் சென்ற திரைக்கலைஞர்களை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவமானப் படுத்தியதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை முறையிட வந்த நடிகர் களை உட்காரக்கூடச் சொல்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, அவர்களை உடனே அனுப்பியிருக்கிறார் அருண் ஜெட்லி.

‘விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என மாணவர்களுக்குப் பாடம் நடத்திவிட்டு, அந்த முதுகெலும்பை முறித்துப்போடும் வேலையை இரக்க மின்றி செய்கிறார்கள்  நம் ஆட்சியாளர்கள். விளைபொருள்களுக்கு கட்டுபடியாகாத விலை, இடுபொருள்களின் விலையேற்றம், மானியங்கள் வெட்டு, கடன் சுமை... என விவசாயிகள் மீது தொடர்ந்து மரண அடிகளாகவே விழுகின்றன. 

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள் தமிழக விவசாயிகள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் சார்பில் போராடும் இவர்களுக்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் முதல் பலரும் ஆதரவாக இருக்கிறார்கள். அங்கு போராடி வரும் வேறு மாநில விவசாயிகளும், தமிழக விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். 

நிர்வாணமாக நிற்பது மோடி அரசுதான்!

பச்சை கலர் வேட்டி துண்டு மட்டும் அணிந்து அரை நிர்வாணத்துடனே போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். உண்ணாவிரதப் போராட்டம், எலியைக் கடித்துப் போராட்டம், கழுத்தில் மண்டை ஓட்டுகளை அணிந்து போராட்டம், பட்டையடித்து கையில் சட்டி ஏந்தி போராட்டம், ஒருவரைச் சடலம் போலப் படுக்க வைத்து பாடைக் கட்டிப் போராட்டம், கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு போராட்டம் என ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகப் போராட்டம் நடத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்கள். ஆனால், ‘இத்தனை வருடங்களாகக் கவனிக்காத நாங்கள், இப்போதுதான் கவனிக்கப் போகிறோமா?’ என்ற தோரணையிலேயே அரசு இவர்களை அணுகுகிறது.

‘எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என அறிவித்திருக்கிறார்கள் இந்த விவசாயிகள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷால், இயக்குநர் பாண்டிராஜ் போன்றவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை மத்திய அமைச்சர்களிடமும் கொண்டு செல்லத் திட்டமிட்டனர்.

 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ‘விவசாயிகள் பிரச்னை’ என்றதும் எந்தவிதப் பதிலையும் அவர்கள் தரப்பில் இருந்து சொல்லவில்லை. அதன்பின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கிய அரசியல் புள்ளி மூலமும், டெல்லியில் உள்ள ஒரு சினிமா தொடர்பாளர் மூலமும் மீண்டும் தொடர்புகொண்டு, அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்.

 ‘ரொம்ப நேரம் பேச முடியாது. மனு மட்டும் கொடுங்க...’ எனத் தகவல் வந்திருக்கிறது. மூன்று நிமிடங்கள்கூட இவர்களிடம் பேசாத அமைச்சர் அருண்ஜெட்லி, கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவர்கள் கொடுத்த மனுவை அலட்சியமாக வாங்கிப் பார்த்துவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார். விவசாயிகளையும், விவசாயிகளுக்கு ஆதரவு தருபவர்களையும் இந்த லட்சணத்தில்தான் பி.ஜே.பி அரசு கையாள்கிறது.

இதுகுறித்து அந்த நடிகர்களிடம் கேட்கப்பட்டபோதும், அவர்கள் தரப்பிலிருந்து எந்தவிதப் பதிலையும் சொல்லவில்லை. ‘‘விவசாயிகள் பிரச்னை தீர்ந்தால், அதுவே போதும். எங்களை எப்படி டீல் செய்தார்கள் என்பது இந்தத் தருணத்தில் முக்கியமில்லை’’ என்பதே அவர்களின் பதிலாக வந்தது.

தமிழக பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், “அவங்க விவசாயிகள் பிரச்னை பற்றி மினிஸ்டர்கிட்ட பேசப்போறோம்னு முதல்ல சொல்லலை. அப்போ, அருண் ஜெட்லி மும்பை கிளம்பிட்டு இருந்திருக்கார். அவசரமாக அவரை நிறுத்தி, ‘மனு கொடுக்கணும்’னு சொல்லியிருக்காங்க. அது என்ன மனு என்றுகூட அருண் ஜெட்லிக்குத் தெரியாது. அதுதான் அந்த அவசரத்துல உட்காரச் சொல்லக்கூட நேரமில்லை. அருண் ஜெட்லி உள்பட பல அமைச்சர்கள் நேரடியாகவே தமிழக விவசாயிகளைச் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டிருக்காங்க. நடிகர்களும் அதைத்தான் திரும்பவும் மனுவாகக் கொடுத்திருக்காங்க. இது அவமரியாதைனு சொல்லுற அளவுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை” என்றார்.

அரைநிர்வாணத்துடன் நிற்பது விவசாயிகள் அல்ல. ஒரு கோவணம்கூட இல்லாமல் விவசாயிகள் முன் நிர்வாணமாக நின்றுகொண்டிருப்பது, மோடி தலைமையிலான மத்திய அரசுதான்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு