Published:Updated:

கும்பாபிஷேகம்... சசிகலாவுக்காக தேதியை மாற்றாத சங்கரமடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கும்பாபிஷேகம்... சசிகலாவுக்காக தேதியை மாற்றாத சங்கரமடம்!
கும்பாபிஷேகம்... சசிகலாவுக்காக தேதியை மாற்றாத சங்கரமடம்!

கும்பாபிஷேகம்... சசிகலாவுக்காக தேதியை மாற்றாத சங்கரமடம்!

பிரீமியம் ஸ்டோரி

வ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள் போல! ‘நாங்கள் சொல்லும் தேதியில் தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்’ என்று சொல்லி, காஞ்சி சங்கராச்சாரியாரையே திகைக்க வைத்திருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.

தஞ்சாவூர் மேல ராஜவீதியில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் கோயில், காஞ்சி காமகோடி பீடத்துக்கு உட்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் கும்பாபிஷேகம், கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. ‘‘இதை இந்தத் தேதியில் நடத்த விடாமல் தடுப்பதற்கு சசிகலா குடும்பத்தினர் பல முயற்சிகள் எடுத்தார்கள்” என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

கும்பாபிஷேகம்... சசிகலாவுக்காக தேதியை மாற்றாத சங்கரமடம்!

‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகம் முழுக்க, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அவை அனைத்தும் ரேவதி, ரோகிணி, புனர்பூசம், திருவோணம், அஸ்தம் என ஐந்து நட்சத்திரங்கள் வரும் தினங்களில் மட்டுமே நடத்தப்பட்டன. ‘அதேபோன்ற நெறிமுறைதான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் தொடர வேண்டும்’ என அறநிலையத் துறைக்கு சசிகலா தரப்பில் இருந்து உத்தரவு வந்தது. ஆனால் காஞ்சி மடத்திலோ, உத்திராட நட்சத்திரம் வரும் தினமான மார்ச் 23-ம் தேதி கும்பாபிஷேகம் என நாள் குறித்து பணியைத் தொடங்கியுள்ளார்கள். இதனை சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லை. ‘கும்பாபிஷேக தேதியை நாங்கள் சொல்லும் நட்சத்திரம் வரும் தினத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று அரசு அதிகாரிகள் வழியாக அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். ஆனால், காஞ்சி மடத்து தரப்பில், ‘நாங்கள் குறித்த தேதியில்தான் கும்பாபிஷேகத்தை நடத்துவோம்’ என உறுதியாக இருந்துள்ளார்கள். பிரச்னை முற்றுவது போலத் தெரிந்ததால், மத்திய அரசின் கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டுபோனார்கள். இது இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரிந்தபிறகே வற்புறுத்தல் நின்றது. ஆனாலும், சசிகலா தரப்பையும் பகைத்துக்கொள்ள விரும்பாத சங்கர மடத்தினர், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன் என அனைவருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பி அவர்களைக் குளிரச் செய்தார்கள்” என்று சொல்கிறார்கள் அவர்கள்.

கும்பாபிஷேகத்துக்குச் சில தினங்களுக்கு முன்னதாகவே தஞ்சாவூர் வந்தார் ஜெயேந்திரர். முன்பு போல் அவருக்கு உடல்நிலை சுகமாக இல்லாததால், எல்லாப் பணிகளையும் விஜயேந்திரர் கவனித்துக்கொண்டார்.

கோயில் அமைந்துள்ள மேல ராஜவீதி முழுவதும், தன்னுடைய ஆதரவாளர்களை ஃப்ளக்ஸ் போர்டு வைக்க உத்தரவிட்டிருந்தார் மகாதேவன். அவர்களும் மகாதேவன் படத்துடன் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் படங்களையும் போட்டு ஃப்ளெக்ஸ் வைத்திருந்தனர். கோயிலுக்குத்  தூரமாக வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் சங்கராச்சாரியார்களோடு ஜெயலலிதா படத்தையும் போட்டு ஃப்ளெக்ஸ் வைத்திருந்தவர்கள், கோயிலுக்கு அருகில் வைத்த ஃப்ளெக்ஸில், ஜெயலலிதா படம் இல்லை.

கும்பாபிஷேகம்... சசிகலாவுக்காக தேதியை மாற்றாத சங்கரமடம்!

இத்தனை தடபுடல் ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் செய்திருந்ததால், மகாதேவன் முன்னிலையில்தான் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், அவர் முதல் நாளே வந்து, கொஞ்சம் நேரம் இருந்து, ஜெயேந்திரரிடம் ஆசி வாங்கிவிட்டுச் சென்றுவிட்டார். ‘கும்பாபிஷேகத்துக்கு நான் வரமாட்டேன்’ என மகாதேவன் கூறிவிட்டுச் சென்றதால், அனைவரும் ரிலாக்ஸாகவே தங்கள் பணிகளைப் பார்த்தனர். கோயில் விமானத்தில் ஜெயேந்திரரால் ஏற முடியாது என்பதால், தற்காலிகமாக லிஃப்ட் வசதி செய்யபட்டிருந்தது. ஆனாலும் அவர் கோபுரத்துக்குச் செல்லாமல், கீழேயே நாற்காலி போட்டு அமர்ந்து கும்பாபிஷேகத்தைப் பார்வையிட்டார். விஜயேந்திரர், கோபுரத்தில் புனித நீர் ஊற்றினார்.

கும்பாபிஷேக தேதியை மாற்றச் சொல்லி சசிகலா குடும்பத்தினர் அடம் பிடித்தது ஏன்? ‘‘சசிகலா மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இப்போது ராசிப்படி அவருக்குப் பல பிரச்னைகள் உண்டாகி, கஷ்டங்களைக் கொடுக்கின்றன. அதனால்தான் பதவி வாய்ப்பு பறிபோய், சிறைத் தண்டனை எல்லாம் அனுபவித்து வருகிறார். இதிலிருந்து காத்துக்கொள்ள, அந்த ராசிக்குச் சாதகமான நட்சத்திரங்கள் வரும் தினத்தில் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தால் விடுபடலாம் என ஜோதிடர்கள் யோசனை சொல்லியிருக்கிறார்கள். எனவேதான் சசி தரப்பில் ஒரு தேதியைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குச் சங்கர மடத்தினர் சம்மதிக்காமல் தாங்கள் குறித்த தேதியிலேயே நடத்தியிருக் கிறார்கள்’’ என்றனர், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

- கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு