Published:Updated:

நெடுவாசல் மக்களிடம் மத்திய அரசு எதிர்பார்க்கும் தியாகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நெடுவாசல் மக்களிடம் மத்திய அரசு எதிர்பார்க்கும் தியாகம்!
நெடுவாசல் மக்களிடம் மத்திய அரசு எதிர்பார்க்கும் தியாகம்!

நெடுவாசல் மக்களிடம் மத்திய அரசு எதிர்பார்க்கும் தியாகம்!

பிரீமியம் ஸ்டோரி

நெடிய போராட்டம் நடத்தி நெடுவாசல் மக்கள் ஓய்ந்திருக்கும் வேளையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது மத்திய அரசு. ‘மக்கள் போராட்டத்தையும், மாநில அரசின் உணர்வுகளையும் புறக்கணித்துவிட்டு, இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுக்க முடியுமா? எனில், மத்திய அரசு யார் பக்கம் இருக்கிறது?’ என்ற கேள்விகள் பலர் மனதில் எழலாம்.

ஹைட்ரோகார்பன் விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

நெடுவாசல் மக்களிடம் மத்திய அரசு எதிர்பார்க்கும் தியாகம்!

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டில், உலகிலேயே மூன்றாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆனால், இதில் 80 சதவிகிதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். இப்படி அந்நிய நாடுகளை நாம் சார்ந்திருப்பது, இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சாபக்கேடாக இருக்கிறது. எனவே, ‘இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியில் 10 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்’ என இலக்கு நிர்ணயித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.

இதற்காக, ‘கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் கொள்கை’ (Discovered Small Fields policy), கடந்த 2016 மே மாதம் உருவாக்கப்பட்டது.

மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி), இந்தியா முழுக்க பல இடங்களில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்படிக் கண்டறியும் எல்லா இடங்களிலும் உடனே தோண்டி கச்சா எண்ணெயை, எரிவாயுவை  எடுக்க முடிவதில்லை. பெரிய அளவில் வளம் இருக்கும் இடங்களில் மட்டுமே இப்போது கவனம் செலுத்துகிறது ஓ.என்.ஜி.சி. மற்ற இடங்களை அப்படியே சும்மா வைத்திருக்கிறது. ஷங்கர் எப்படி லோ பட்ஜெட் படங்களை எடுக்க மாட்டாரோ, அப்படி ஓ.என்.ஜி.சி-யும் சிறிய வயல்களில் எண்ணெய் எடுக்காது.

இப்படி சும்மா இருக்கும் எண்ணெய் வயல்கள் ஏராளம். ‘‘இந்தியா,  தன்னிடம் இருக்கும் எண்ணெய் வளத்தில் வெறும் ஐந்து சதவிகிதத்தையும், எரிவாயு வளத்தில் வெறும் மூன்று சதவிகிதத்தையும் மட்டுமே எடுத்து வருகிறது’’ என்கிறார், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ‘ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை விரிவாக்கம் செய்து, இந்த எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்கலாம்’ என முடிவெடுக்கவில்லை அரசு.

இதற்கு முன்பு இருந்த எல்லா விதிகளையும் தூக்கிப்போட்டுவிட்டு, ஓ.என்.ஜி.சி கண்டறிந்த சிறிய எண்ணெய் வயல்கள் அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதற்காக உருவாக்கப்பட்டதுதான், ‘கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் கொள்கை’. அளவில் சிறியது, லாபம் வருமா எனத் தெரியாதது, வெகு தொலைவில் இருப்பது, தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதில் எடுக்க முடியாதது என நினைத்து சும்மா வைக்கப்பட்டிருந்த 34 எண்ணெய் வயல்கள் இப்போது தனியாருக்குத் தரப்பட்டுள்ளன.

லாபம் கிடைக்காத ஒரு விஷயத்தில் தனியார் நிறுவனங்கள் இறங்காது அல்லவா? அதனால், அவர்களுக்கு ஏற்றபடி விதிகள் தளர்த்தப்பட்டன. கச்சா எண்ணெய், எரிவாயு, மீத்தேன் என அனைத்துவிதமான ஹைட்ரோகார்பன் பொருள்களையும் எடுத்துக்கொள்ள ஒரே லைசென்ஸ் தரப்படும். ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இந்தத் துறையில் முன்அனுபவம் தேவையில்லை. நிறுவனங்கள், தங்கள் விருப்பம் போல விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம்.

நெடுவாசல் மக்களிடம் மத்திய அரசு எதிர்பார்க்கும் தியாகம்!

அரசுக்குத் தர வேண்டிய ராயல்டியும் குறைத்துக் கொள்ளப்படும். ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிக்காக வெளிநாடுகளிலிருந்து ஏதேனும் கருவிகள் வாங்க வேண்டியிருந்தால், அதற்கு சுங்க வரி கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வயல்களுக்கு அருகில் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களின் வயல்கள் இருந்தால், அங்கிருந்து தங்களுக்குத் தேவையான கருவிகளை வாங்கிக் கொள்ளலாம். மிக முக்கியமாக, இந்த எண்ணெய் வயல்கள் இருக்கும் பகுதிகளில், பெரும் பொருள் செலவில் ஆழமான புவியியல் ஆய்வு செய்து பல தகவல்களைத் திரட்டி வைத்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. இதை அப்படியே லட்டு மாதிரி தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துவிடும். அதனால், ஆய்வுக்காக என அவர்கள் பைசாகூட செலவிட வேண்டியதில்லை. அதுமட்டுமில்லை, மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து, இவர்களுக்கு வழிகாட்டவும் செய்யும்.

இந்த ஏலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பங்கேற்பதற்கு, மத்திய அரசு விடவில்லை. புதிது புதிதாக தனியார் நிறுவனங்கள் எண்ணெய் எடுக்கும் பணியில் இறங்க வேண்டும் என விரும்புகிறது அரசு. எனவே, தனியார் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்தது மத்திய அரசு. அதோடு, வெளிநாட்டு நிறுவனங் களையும் அழைத்தார்கள். ஏலம் ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரியில் 22 நிறுவனங்களுக்கு 31 எண்ணெய் வயல்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவற்றில் 15 நிறுவனங்கள், இந்தத் தொழிலில் எந்த அனுபவமும் இல்லாத புதிய நிறுவனங்கள். இந்த 31 வயல்களில் அசாமில் ஒன்பதும், மகாராஷ்டிராவில் ஆறும், குஜராத்தில் ஐந்தும் உள்ளன. ஆனால், கடும் எதிர்ப்பு எழுந்தது என்னவோ, நெடுவாசலிலும் காரைக்காலிலும்தான்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு லைசென்ஸ் பெற்றிருக்கும் ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனம், கர்நாடகாவின் தாவன்கரே பகுதியில் உள்ளது. பி.ஜே.பி-யின் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சித்தேஸ்வராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. அவர்கள் பாக்கு வியாபாரம் செய்பவர்கள். எண்ணெய் விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் அனுபவம் என்பது, அவர்களின் காருக்கு பெட்ரோல் போட்டதாக மட்டுமே இருக்கும்.

இவர்கள் நெடுவாசலில் என்ன எடுக்கப் போகிறார்கள்? யாருக்கும் தெரியாது. என்ன முறையைப் பயன்படுத்தி, ஹைட்ரோகார்பன் பொருள்களை பூமியின் ஆழத்திலிருந்து எடுப்பார்கள்? எது பொருந்துகிறதோ, அப்படிச் செய்யலாம் என அரசு அனுமதி கொடுத்துவிட்டது. ஆனால், ‘‘நிலங்களைப் பாதிக்கும் வகையிலான எந்தத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படாது’’ என்று சொல்கிறார், மத்திய ஹைட்ரோகார்பன் துறையின் டைரக்டர் ஜெனரல் அடானு சக்ரவர்த்தி.

இந்த எல்லா எண்ணெய் வயல்களிலும் அடுத்த 15 ஆண்டுகளில் எண்ணெய் மூலமாக தனியார் நிறுவனங்களுக்குச் சுமார் 62,129 கோடி ரூபாய் கிடைக்கும். எரிவாயு மூலமாக 16,044 கோடி ரூபாய் கிடைக்கும். மத்திய அரசுக்கு ராயல்டியாக 5,000 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 2,100 கோடி ரூபாயும் கிடைக்கும். ஒருவேளை கண்டறியப்பட்டதைவிட அதிக ஹைட்ரோகார்பன் வளம் இருந்தால், ஏலம் எடுத்த நிறுவனத்துக்கு ஜாக்பாட்தான்!

தனியார் நிறுவனங்களுக்காக இத்தனை தூரம் இறங்கிவந்து விதிகளை வளைத்திருக்கும் மத்திய அரசு, நெடுவாசல் மக்கள் பக்கம் எப்போதும் நிற்காது. எண்ணெய் வளத்தில் இந்தியா தன் காலில் நிற்பதற்காக எதையும் செய்யும் மத்திய அரசு. ‘‘ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலம் தியாகம் செய்யலாம்’’ என்று பி.ஜே.பி தலைவர் இல.கணேசன் சொல்லிவிட்டார். மத்திய அரசு அதைச் செயலில் காட்டுகிறது.

- தி.முருகன்

படம்: மா.அரவிந்த்

நெடுவாசலில் என்ன எடுப்பார்கள்?

நெடுவாசல் பகுதியில் ஓ.என்.ஜி.சி, கடந்த 1991 முதல் 2009 வரை, பூமிக்கு அடியில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தது. 13 இடங்களில் சோதனை அடிப்படையில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. இவற்றில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பது உறுதியாகி உள்ளது.

இப்படி சோதனை செய்வதற்கே தமிழக அரசிடமிருந்து ‘நிபந்தனைக்கு உட்பட்ட பெட்ரோலிய சுரங்க லைசென்ஸ்’ பெற வேண்டும். ஓ.என்.ஜி.சி இப்படிப் பெற்றிருக்கும் லைசென்ஸுக்கு 2019 வரை ஆயுள் இருக்கிறது. ஆனால், அந்த லைசென்ஸை வைத்துக்கொண்டு இங்கு தோண்டி எதையும் எடுத்து விற்க முடியாது. அதற்குத் தனியாக ‘பெட்ரோலிய சுரங்க லைசென்ஸ்’ பெற வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இதற்காக ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்து இருக்கிறது. ஆனால், தமிழக அரசு லைசென்ஸ் வழங்கவில்லை. இப்போது இங்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய அரசிடம் கான்ட்ராக்ட் பெற்றிருக்கும் ஜெம் லேபாரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், முறைப்படி லைசென்ஸ் பெற்றால்தான் இங்கு பணிகளைத் தொடங்க முடியும்.

நெடுவாசல் பகுதியில் 10.1 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. புதிய ஒப்பந்த விதிகளின்படி, எல்லாப் பொருள்களையும் எடுக்க ஒரே ஒப்பந்தம் இவர்களுக்குத் தரப்பட்டுவிட்டது. எனவே, கச்சா எண்ணெய், ஷேல் கேஸ், மீத்தேன் என நெடுவாசலில் எது இருந்தாலும், அவர்கள் தோண்டி எடுக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு