Published:Updated:

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

பிரீமியம் ஸ்டோரி

ள்தாள் ஒட்டி ஒட்டி வீங்கிப்போன ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாவட்டம் தவிர பிற 31 மாவட்டங்களிலும் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்றே ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர், சென்னையில் வழங்கப்பட உள்ளன.  ஸ்மார்ட் கார்டின் பயன்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் குறித்து, சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

“ஸ்மார்ட் கார்டில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றிருக்கும்?” 
 
“குடும்பத் தலைவரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி, ஸ்மார்ட் கார்டுக்கான கோடு நம்பர், கார்டின் வகை ஆகியவை கார்டின் முன்புறம் இருக்கும். கார்டின் பின்புறம் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், ரேஷன் கடையின் கோடு நம்பர், ஸ்மார்ட் கார்டின் QR கோடு ஆகியவை இடம்பெற்றிருக்கும்.”
 
“எத்தனை வகையான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்?”

“ஐந்து வகைகள் உள்ளன. முதல் வகை கார்டில், PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை கார்டுதாரர்கள் (Primary Householders). இவர்களுக்கு எல்லா வகையான பொருள்களும் வழங்கப்படும். இரண்டாவது வகை கார்டில், PHH AAY என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுதாரர்கள் (Primary Householders and Antyodaya Anna Yojana). இவர்களுக்கு 35 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும். மூன்றாவது வகை கார்டில், NPHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்கள் (Non Primary Householders).  இவர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும். நான்காவது வகை கார்டில், NPHH-S என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்கள், முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்கள் - சர்க்கரை (Non Primary Householders-S) என்ற வகை. இவர்களுக்கு சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மட்டும் வழங்கப்படும். ஐந்தாவது வகை கார்டில், NPHH-NC என்று இருக்கும். எந்தப் பொருளும் வாங்க விரும்பாத கார்டுதாரர்கள் (Non Primary Householders-Non Commodity) இவர்கள்.”

“எத்தனை குடும்ப அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன?”


“தமிழகம் முழுவதும் 1.87 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் 2.75 லட்சம் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. இவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்காது. இப்போது உள்ள ரேஷன் கார்டுகளை வைத்து இவர்கள் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஜூன் மாதத்துக்குள் ஆதார் அட்டை வாங்கி, ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

“ஸ்மார்ட் கார்டை வைத்து எப்படிப் பொருள்கள் கொடுக்கப்படும்?”

“ஸ்மார்ட் கார்டில் உள்ள QR கோடு, ரேஷன் கடையில் உள்ள பாயின்ட் ஆஃப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யப்பட்டு பில் போடப்படும். அதன் பின்னர் வாடிக்கையாளருக்கான பொருள்கள் வழங்கப்படும்.”
 
“ஸ்மார்ட் கார்டு வாங்கிய பிறகு முகவரி மாற்றம் செய்துகொள்ள முடியுமா?”

“முடியும். ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள், tnepds மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். அல்லது, உணவுப் பொருள் வழங்கல் துறையின் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் வழியே, ரேஷன் கடையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள மொபைல் எண்ணைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பின்னர், வாடிக்கையாளர்களின் விவரங்கள் தெரியும். அதில் முகவரி மாற்றம், ஆதார் எண்ணைக் கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், புகைப்படம் மாற்றுதல் ஆகியவற்றைச் செய்துகொள்ளலாம். முகவரி மாற்றம், பெயர் சேர்த்தலுக்குப் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை என உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். மாற்றங்களுக்கான கோரிக்கைகள், உரிய வட்டார உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அலுவலர்கள் நேரில் சென்று சரிபார்த்த பின்னர் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இதற்கு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும். 

“இணையதள வசதி இல்லாதவர்கள், மொபைல் போன் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?”

“தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில் சிறிய அளவு கட்டணம் செலுத்தி, திருத்தங்களுக்கான கோரிக்கைகளை மேற்கொள்ளலாம்.”

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

“முகவரி மாற்றம், பெயர் மாற்றம், உறுப்பினர் சேர்த்தல் ஆகியவற்றுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட கார்டு வழங்கப்படுமா?”

“ஆமாம். புதுப்பிக்கப்பட்ட கார்டு தயாரானதும், வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்குத் தகவல் வரும். அந்தத் தகவலை அரசின் இ-சேவை மையத்தில் காட்டி, புதுப்பிக்கப்பட்ட கார்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.”

“ஸ்மார்ட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறதா?”


“இல்லை. ஸ்மார்ட் கார்டை குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். வெளியூர் போகும்போது பொருள்கள் வாங்க விரும்பவில்லை என்றால், இணையதளத்தில் சென்று, கார்டை டி-ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். ஊர் திரும்பியதும், ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இணையதளத்திலும், ‘மொபைல் ஆப்’பிலும் இதைச் செய்யலாம். எனவே தவறுதலாக இன்னொருவர் உங்கள் பெயரில் பொருள்கள் வாங்குவதும் தடுக்கப்படும். ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துவதற்கு, ரேஷன் கடையில் உங்கள் பெயருக்குப் பில் போடுவதை உறுதி செய்வதற்கு என அத்தனை செயல்களுக்கும் வாடிக்கையாளர்களிடம் மொபைல் போன் இருக்க வேண்டியது அவசியம்.”

ஸ்மார்ட் கார்டு அமலாக்கத்தில் உள்ள பிரச்னைகள் என்ன? தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம். “ரேஷன் கடையில் வைக்கப்படும் பாயின்ட் ஆஃப் சேல் மிஷின்கள் தடையில்லாமல் இயங்க, ரேஷன் கடைகளுக்குச் சொந்த கட்டடங்களும், தடையில்லாத மின் வசதியும் தேவை. சிக்னல் கோளாறுகள் உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் மொபைல்களுக்குக் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வருவதில்லை என்ற புகார்கள் எழுகின்றன. இது கவனிக்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்கள் ஒதுக்கீட்டை சரியான எடையில் அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் விநியோகத்தில் 100 சதவிகிதம் நேர்மை இருக்கும்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி

படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு