Published:Updated:

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

ண்மை விருத்திக்கு முருங்கைக் காய் தொடங்கி சிட்டுக்குருவி லேகியம் வரை சாப்பிட்டுப் பார்த்த தமிழ்கூறும் நல்லுலகம் இப்போது, ‘வாத்துக்கறி சாப்பிட்டா ஆண்மை பெருகும்’ என பிசினஸ் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் படுத்துக்கிடந்த வாத்துக்கறி பிசினஸ், இப்போது நடக்கும் பரபர விற்பனையால்  ஹோட்டல்கள் செமத்தியாக கல்லா கட்டி வருகின்றன.

வேலாயுதம்பாளையத்தில் இறங்கி, சேலம் பைபாஸில் நடக்க ஆரம்பித்தால், சாலையில் இருபுறமும், ‘இங்கே இட்லியுடன் சுடச்சுட வாத்துக் கறி கிடைக்கும்’ என்ற விளம்பரப் பலகைகளுடன் ஹோட்டல்கள் வரவேற்கின்றன. ஒவ்வொரு ஹோட்டலின் பக்கவாட்டிலும், வேலியமைத்து உயிருள்ள வாத்துகளை உலவவிட்டிருக்கிறார்கள்.

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்த நாம், ‘‘அண்ணே... என்ன சமாசாரம்... இம்புட்டுக் கூட்டம்?’’ என்று ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் விசாரித்தோம். “ஒண்ணுமில்லை தம்பி... வாத்துக்கறி சாப்பிட்டா துவண்டுபோன ஆண்மை பலம் மறுபடியும் கிடைக்கும். அதுக்குத்தான் இம்புட்டுக் கூட்டம். நீங்களும் அரசல்புரசலா கேள்விப்பட்டுதானே வந்திருக்கீங்க... தெரியாத மாதிரி கேட்கறீங்க?’’ என்றார் அலட்டிக்கொள்ளாமல்.

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

“வாத்துக்கறி சாப்பிட்டால், எப்படி ஆண்மை பலம் அதிகரிக்கும்?” என்ற நமது கேள்விக்கு, கிசுகிசுப்புக் குரலில் அவர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“எங்க முதலாளி அந்த ரகசியத்தை வெளியில் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்கார். நீங்க அசலூர்காரரா தெரியிறீங்க. அதனால, நம்பிச் சொல்றேன்.

உண்மையில் வாத்துக்கறியில அப்படி ஒரு பவர் இருக்கானு எங்களுக்கும் தெரியாது. ஆனா, வாத்துக்கறி வேகும்போதே, அதுல வெள்ளையா ஒரு பவுடரை முதலாளி தூவுவார். வயாக்ரா பவுடரா... இல்ல, முருங்கைக்காய் பவுடரான்னு தெரியல. அந்தப் பவுடர்தான் ஆண்மையை விருத்தி செய்யக் காரணமா இருக்கணும்” என்று ரகசியம் உடைத்தார்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்த நம்மை ஓரங்கட்டிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர் ஒருவர்,

“எல்லாம் அப்பட்டமான பித்தலாட்டம். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை வாத்துக்கறி கிலோ அறுபது ரூபாய் இருந்துச்சு. ஒன்றிரெண்டு வாத்துக்கறி ஹோட்டல்கள் மட்டுமே இருந்துச்சு. அதுலயும் சரக்கு அடிக்கிறவங்க வந்து சைட் டிஷ்ஷுக்கு மட்டுமே கொஞ்சமா வாத்துக்கறியை வாங்கிட்டுப் போவாங்க. அதனால, வாத்துக்கறி ஹோட்டல்கள் டல்லடிச்சது. திடீர்னு ‘வாத்துக்கறி சாப்பிட்டா ஆண்மைக்கு நல்லது’னு புரளியைக் கிளப்பிவிட்டுட்டாங்க. இது சேலம் - பெங்களூர் போற சாலையில் உள்ள பகுதி என்பதால், லாரி டிரைவர்களும் இந்தப் பொய்யை நம்பி வந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியே கூட்டம் பெருகி, வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், வாங்கப்பாளையம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கறி ஹோட்டல்கள் பெருகிவிட்டன. கல்லாவும் நிறையுது. முன்பு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மட்டுமே இந்த வாத்துக்கறி ஹோட்டல்கள் இயங்கின. இப்போ, ஏழு நாட்களும் இரவும் பகலுமா வியாபாரம் பிஸியாகிவிட்டது” என்று உண்மை நிலவரத்தைப் புட்டுவைத்தார்.

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

அடுத்ததாக, வாத்துக்கறி மாஸ்டர் ஒருவரது வாயைக் கிளறினோம்.

“சேவல் வாத்து, வெட வாத்து, பொட்ட வாத்து, மணி வாத்து, மயில் வாத்து... இப்படி பல வகை வாத்துக்கள் இருக்கு. மணி வாத்தும் மயில் வாத்தும்தான் ஆண்மைக்கு நல்லது. ஆனால், இந்த வாத்துக்கள் ஆந்திராவுலதான் கிடைக்கும். அங்கிருந்து லோடு லோடா வாங்கி வந்து, அதுல ஆண்மை பலத்துக்குன்னே ஸ்பெஷல் பொடி ஒண்ணு சேர்த்து கறி தயாரிக்கிறோம். சாப்பிட வருபவர்களிடம் சாதா கறியா, ஸ்பெஷல் கறியான்னு கேட்போம். ஆண்மை விருத்திக்கு வந்தவங்க, ‘ஸ்பெஷல்’னு சிரிச்சுக்கிட்டே கேட்பாங்க. இந்த ஸ்பெஷல் வாத்துக்கறியைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குச் சாப்பிட ணும். அப்பதான் ஆண்மை பவர் கிடைக்கும். சமைக்காத கறி கேட்டு வர்றவங்களுக்கு ஒரு முழு வாத்து முன்னூறு ரூபாய்க்குக் கொடுக்கிறோம். ‘அந்த’ ஸ்பெஷல் பொடிக்குத் தனிக்காசு” என்றபடி நமுட்டு சிரிப்புச் சிரித்தார்.

வாத்துக்கறியை சாப்பிட்டுவிட்டு சப்புக் கொட்டியபடியே வந்த லாரி டிரைவர் சரவணனிடம் பேசினோம்.

“எனக்கு மேட்டூர் பக்கம் ஊர். வாத்துக்கறி டேஸ்ட் ரொம்பப் பிடிக்கும். இந்தப் பக்கமா லாரி ஓட்டிட்டு வரும்போது பசியை அடக்கிக்கிட்டு வந்து, சாப்பிட்டுவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவேன். ஆனா, எங்க லாரி டிரைவர்கள் சிலர் ‘அந்த’ நம்பிக்கையில் சாப்பிட வருவதா சொல்றாங்க” என்றார்.

வாத்துக்கறி ஹோட்டல் முதலாளி குபேரனிடம் பேசினோம்.

“வாத்துக்கறி சாப்பிட்டா நெஞ்சு சளி, இருமல், ஆஸ்துமா குணமாகும்னு சொல்வாங்க. நாங்க கறிமேல டேஸ்ட்டுக்காக மிளகுத்தூளை மட்டுமே தூவுவோம். மற்றபடி ஆண்மை பலத்துக்கு நல்லதா என்றெல்லாம் எனக்குத் தெரியாதுங்க” என்றார்.

“வாத்துக்கறி ‘அது’க்கு நல்லது!” - கரடிவிடும் கரூர் ஹோட்டல்கள்!

மருத்துவ வட்டாரங்களில் விசாரித்தோம்.

“ஆட்டுக்கறி, கோழிக்கறியில் கொழுப்பு இருக்கு. வாத்துக்கறியில் கொழுப்பு இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம். ‘வாத்துக்கறி ஆண்மை விருத்திக்கு நல்லது’னு சொல்றதெல்லாம் வெறும் புரளி” என்றனர்.

ஹோட்டல் வாசலில், வாத்துகள் ‘பேக்கு... பேக்கு’ என்று கத்திக்கொண்டிருந்தன. யாரைச் சொல்கின்றனவோ?

- துரை.வேம்பையன், படங்கள்: தே.தீட்ஷித்