Published:Updated:

காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அமைந்துள்ளது, துருஞ்சிக்குப்பம் கிராமம். ‘விண்கற்கள் தாக்கியதால் புவனேஸ்வரி மரணம் அடைந்தார்’ என்ற செய்தியால் தமிழகம் முழுக்க கவனம் பெற்ற ஊர். விவசாய பூமி. இப்போது வறண்டு கிடக்கிறது. துருஞ்சிக்குப்பம் சென்று, ‘புவனேஸ்வரி வீடு எங்கே இருக்கு’ என நாம் விசாரிக்க ஆரம்பித்தவுடன், ‘எரிகல் விழுந்து செத்துப்போனாங்களே! அவுங்க வீடுதானே?’ என்று வழி சொன்னார்கள்.

புவனேஸ்வரி வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். வருபவர்கள், புவனேஸ்வரி மறைவுக்குத் துக்கம் விசாரிக்கிறார்களோ இல்லையோ... வந்ததும் வாய்பிளந்தபடி வானத்தையும்,  தெறித்த கதவுகள், நொறுங்கிய ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் ஆகியவற்றை யும் ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். 

காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

விண்கற்கள் விழுவதாகச் சொல்லப்படுவது வேலூருக்குப் புதிது அல்ல. ‘ஒரு வருடத்துக்கு முன்பு, நாட்றாம்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பட்டப்பகலில் விண்கற்கள் விழுந்தன. அதில், கல்லூரிப் பேருந்து ஓட்டுனரான காமராஜ் இறந்துவிட்டார்’ என்ற செய்தி, தமிழகத்தைப் பதறவைத்தது. பெத்தவேப்பம்பட்டு என்கிற கிராமத்தில் நெல்வயலில் விண்கற்கள் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘விண்கற்கள் தாக்கி இதுவரை மனிதர்கள் யாரும் இறந்ததில்லை’ என்று விஞ்ஞானிகள் சொல்லும் நிலையில், வேலூரில் விண்கற்கள் பற்றி சொல்லப்படும் செய்திகளை வெறுமனே கடந்துசெல்ல முடியவில்லை. ‘அவை விண்கற்கள்தானா? விண்கற்கள் இல்லையென்றால், வேறு என்ன?’ என்ற கேள்விகளுடன்தான் நம் பயணம் தொடங்கியது.

முதலில் புவனேஸ்வரி வீடு. தாயை இழந்த துயர் தாங்காமல், புவனேஸ்வரியின் மூன்று மகள்களும் அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, புவனேஸ்வரியின் மூத்த மகள் பவித்ராவிடம் பேசினோம். “வாணியம்பாடியில ஒரு ஷூ கம்பெனியில அம்மா வேலை பார்த்தாங்க. ஆறு மணிக்கு ஷிப்ட்ங்கிறதால தினமும் காலையில நாலு மணிக்கே எழுந்து, சமைச்சு வெச்சுட்டுக் கிளம்பிடுவாங்க. அன்னிக்கு ராத்திரி நல்லா பேசிச் சிரிச்சுக்கிட்டு டி.வி பார்த்தபடியே சாப்பிட்டோம். அப்புறம் தூங்கிட்டோம். என் சின்ன தங்கச்சிக்கு பத்தாவது பரீட்சை. அதனால, அவ எங்க பாட்டி வீட்ல படிச்சிட்டு அங்கேயே தூங்கிட்டா. நானும் என் நடு தங்கச்சியும் ரூம்ல படுத்துக்கிட்டோம். அம்மா, ஹால்ல படுத்திருந்தாங்க. அதிகாலையில ‘டமால்’னு சத்தம் கேட்டுச்சு. நானும் தங்கச்சியும் எந்திரிச்சு வெளியே ஓடிவந்தோம்.

 ஒரே புகைமூட்டமா இருந்துச்சு. ஹால்ல ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் எல்லாம் நொறுங்கி விழுந்து கிடந்துச்சு. வாசல்படிகிட்ட அம்மா நின்னுக்கிட்டு இருந்தாங்க. ‘எரியுதே... எரியுதே...’னு அம்மா கத்தினது கேட்டு பக்கத்துல ஓடுனோம். பக்கத்து வீட்ல இருந்து பெரியப்பா பசங்களெல்லாம் ஓடிவந்துட்டாங்க. அம்மாவோட சேலை அப்படியே உருகி உடம்போட ஒட்டி இருந்துச்சு.  உடம்பெல்லாம் வெந்துபோயிருந்துச்சு. உடனே, 108 ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினோம். அவங்க வந்து அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க. கேஸ் சிலிண்டர் வெடிச்சிருக்குமோனு எல்லாரும் வீட்டுக்குள்ளே போய்ப் பார்த்தாங்க. சிலிண்டர் அப்படியேதான் இருந்துச்சு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

அம்மா செத்துருவாங்கன்னு நாங்க நெனச்சே பாக்கல. மூணு பொண்ணுங்களையும் படிக்க வெச்சு பெரிய ஆளா ஆக்கிடணும்ங்கிறதைத் தவிர அவுங்களுக்கு எந்தக் கனவும் இல்லீங்க. அம்மா இல்லாம நாங்க எப்படி வாழப்போறோம்னே தெரியல” என்று கண்ணீர்மல்க சொன்னார். 

 புவனேஸ்வரியின் தாய் மேனகாவிடம் பேசினோம். “ஆஸ்பத்திரியில ஒரு வாரம் நல்லாத்தான் இருந்தா. ‘காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு அடுப்புப் பத்த வைக்க, சமையல்கட்டுக்குப் போனேன். தீக்குச்சி பத்தவே இல்ல. பக்கத்து வீட்ல முழிச்சிட்டாங்களான்னு பார்க்குறதுக்காக வெளியே போக நினைச்சேன். திடீர்னு பயங்கர சத்தம் கேட்டுச்சு. அப்டியே மின்னல் மாதிரி ஏதோ வந்து அடிச்சிடுச்சும்மா. அதுக்கப்புறம், என்ன நடந்துச்சுன்னே தெரியல’னு புலம்பிக்கிட்டே இருந்தா. பாவி மக, எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டா” என்று பேத்திகளைத் தழுவிக்கொண்டு கதறினார்.

 புவனேஸ்வரியின் கணவர் வெங்கடேசன் ஓசூரில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். ‘‘வாரத்துல ஒரு முறைதான் வீட்டுக்கு வருவேன். சம்பவம் நடந்தப்போ நான் வீட்ல இல்லை. ஏதோ எரிகல் விழுந்திருச்சின்னு சொல்றாங்க. ‘இது எரிகல் இல்லை’னு சிலர் சொல்றாங்க. பக்கத்து ரூம்ல படுத்திருந்த பிள்ளைங்களுக்கு எதுவும் ஆகல. நெருப்பு வரல. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உடைஞ்சிருக்கு. கதவெல்லாம் உடைஞ்சிருக்கு. வீட்ல இருந்த நெல்லுமூட்டை உருகியிருக்கு” என்று கம்மிய குரலில் பேசியவர், “என்னன்னே தெரியலைங்க. ஆண்டவன் எங்களை இப்படியா சோதிக்கணும்?” என்று வெடித்து அழுதார்.

 அடுத்ததாக, பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் விண்கல் விழுந்து இறந்ததாகச் சொல்லப்படும் கே.பந்தாரப்பள்ளியில் உள்ள டிரைவர் காமராஜ் வீட்டில் ஆஜரானோம். சம்பவம் நடந்து ஒரு வருடமாகப் போகிறது. ஆனாலும், அந்த வீட்டில் சோகம் கலையவில்லை. காமராஜின் தாய் தேவகி தனிமையில் முடங்கிக் கிடக்கிறார். “அன்னிக்கு, என் மகன் வேலைக்குப் போயிட்டான். மெடிக்கல் செக்கப்புக்காக என் மருமகள் ஆஸ்பத்திரிக்குப் போனா. அவ கர்ப்பமா இருக்கறதை ஆஸ்பத்திரியில உறுதி செஞ்சிருக்காங்க. அதை சந்தோஷமா வந்து என்கிட்ட சொன்னா. என் மகனுக்கும் போன் போட்டு சொன்னா. சந்தோஷத்துல குதிச்சவன், ‘சீக்கிரமே வீட்டுக்கு வந்துடறேன்’னு சொல்லியிருக்கான். கூட வேலை செய்கிறவங்களோட சாப்பிடுறதுக்காக கைகழுவப் போயிருக்கான். அப்போ, ஏதோ பயங்கர வெடிச்சத்தம் கேட்டிருக்கு. ஒரே புகைமூட்டமா இருந்திருக்கு. புகையெல்லாம் கலைஞ்ச பிறகு பார்த்தா, என் புள்ள உயிருக்குப் போராடிக்கிட்டு கிடந்திருக்கான். முகமெல்லாம் கருகி, உடம்பெல்லாம் ஓட்டைகளா இருந்திருக்கு. ஆஸ்பத்திரிக்குப் போற வழியிலேயே இறந்துட்டான். அந்தச் சத்தம் மூணு கிலோமீட்டர் தூரத்துல இருக்க எங்க வீடு வரைக்கும் கேட்டுச்சு. அது எம் மவன் உசுர எடுத்த சத்தம்னு அப்ப எனக்கு தெரியாது தம்பி. போன் வந்த பிறகுதான் தெரியும். கணவன் இறந்துட்டார்ங்கிற அதிர்ச்சி என் மருமகளை நிலைகுலைய வெச்சிடுச்சு. அவ வயித்துல இருந்த எங்க வீட்டு வாரிசும் கலைஞ்சிருச்சு” என்று முந்தானையில் முகம்புதைத்துக் கதறினார். 

காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

காமராஜ் மரணம் தொடர்பாக நாட்றாம்பள்ளி காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், ‘விண்கற்களால் விபத்து’ என்று குறிப்பிடப் படவில்லை.

 அடுத்ததாக, நெல்வயலில் விண்கல் விழுந்ததாகச் சொல்லப்படும் பெத்த வேப்பம்பட்டுக்குச் சென்றோம். அந்த நிலத்தின் உரிமையாளர் பழனி, “2015-ம் ஆண்டு குடியரசு தினம். என் வயலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுது. ஊர்க்காரங்க எல்லாரும் ஓடிவந்து பார்த்திருக்காங்க. ஒரே புகையாக இருந்திருக்கு. ஒரு இடத்துல பெரிய குழியா ஆகிடுச்சு. அந்த இடத்தைச் சுற்றி கற்கள் சிதறிக் கிடந்திருக்கு” என்று சொன்னவர், “அது விழுந்தப்போ, என் மகன் லோகேஷ் பார்த்திருக்கான். அவனையே கேளுங்களேன்” என் தன் மகனைக் கூப்பிட்டார்.

 ஐந்தாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், “அப்படியே ‘சர்’னு ராக்கெட் மாதிரி புகையோட வானத்துலேருந்து ஏதோ வந்துச்சுண்ணே. காதெல்லாம் கிழியிற மாதிரி டமால்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. வயல்ல இருந்து மண்ணெல்லாம் அப்படியே படத்துல வர்ற மாதிரி புழுதியா பறந்துச்சு. மாடுங்க எல்லாம் தெறிச்சி ஓடுச்சுண்ணே. கொஞ்ச நேரத்துல ஒண்ணுமே காணோம்” என்று ஆச்சர்யத்தோடு விவரித்தான்.

காவு வாங்கும் விண்கல் - பீதியில் வேலூர் மாவட்டம்!

இங்கே விழுவது விண்கற்களா? இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, காவனூர் தொலைநோக்கி ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொண்டோம். தலைமைப் பொறியாளர் அன்பழகன் நம்மிடம் பேசினார். “துருஞ்சிக்குப்பத்துக்கு போயிருந்தோம். எரிகல் விழுந்ததற்கான எந்தத் தடயமும் அங்கு கிடைக்கவில்லை. எவ்வளவு சிறிய கல்லாக இருந்தாலும் வானத்தில் வெடித்திருந்தால் அந்த இடம் முழுக்கப் பரவியிருக்கும். குறிப்பிட்ட ஒரு வீட்டை மட்டும் பாதித்திருக்காது. அப்படியே இருந்தாலும்கூட, அந்த வீட்டில் சின்ன தடயமாவது கிடைத்திருக்கும். அப்படி எதுவும் கிடைக்கவில்லை. நாட்றாம்பள்ளி கல்லூரியில் விழுந்தது வேண்டுமானால் விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஒரே இடத்தில் தொடர்ச்சியாக விண்கற்கள் விழுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. விண்கற்கள் வானத்திலிருந்து பூமியை நோக்கி வருவதற்குள்ளாகவே காற்று மண்டலத்தில் எரிந்து காணாமல் போய்விடும். பூமியைத் தாக்குவது என்பது அரிதான விஷயம். பெத்த வேப்பம்பட்டில் விழுந்தது விண்கல் என்பதற்கான தடயங்கள் கிடைக்கவில்லை. வானத்திலிருந்து விழுவது எல்லாமே விண்கற்களாக இருக்க முடியாது. தொலைதூரத்து ஏவுகணைகளின் எச்சங்கள் எரிந்து விழலாம். எங்கோ நடக்கும் ராணுவப் பயிற்சியின் விளைவாகக்கூட இருக்கலாம். அறிவியலில், உடனடியாக எதையும் தீர்மானித்துவிட முடியாது” என்றார்.

 வேலூர் பகுதி மக்கள் விண்கல் பீதியில் உறைந்துகிடக்கிறார்கள். எதனால் இப்படி நடக்கிறது என்பதை ஆய்வு நடத்தி உண்மையைக் கண்டறிவதும், அதை வெளிப்படையாகச் சொல்லி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியதும் அரசின் உடனடி கடமை.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: ச.வெங்கடேசன்