Published:Updated:

விரட்டும் போலீஸ்... தலைமறைவாக விவசாயிகள்!

விரட்டும் போலீஸ்... தலைமறைவாக விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
விரட்டும் போலீஸ்... தலைமறைவாக விவசாயிகள்!

கண்ணாமூச்சி போராட்டம்

றட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட  கோரிக்கைகளுக்காக டெல்லி வீதியில் தவம் கிடக்கிறார்கள் தமிழக விவசாயிகள். இவர்களுக்குத் தமிழக அரசு ஆதரவு தருகிறது. ‘தமிழகத்தின் நிழல் முதல்வர்’ டி.டி.வி.தினகரனும் ஆதரவு தந்திருக்கிறார்.

ஆனால், டெல்லிப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சென்னையில் ஒன்றுதிரண்ட தமிழக விவசாயிகளை போராடவிடாமல் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக அவர்களை சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் முனைப்புடன் உள்ளது தமிழகக் காவல்துறை. ஆனால், ‘‘நாங்கள் ஊருக்குச் செல்லமாட்டோம்’’ என்ற  உறுதியோடு பெரும்பான்மையான விவசாயிகள் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தங்கியுள்ளனர். மாணவர்களின் துணையுடன் கடந்த சில நாட்களாகத்  தங்கியுள்ள அந்த விவசாயிகள், காவல்துறையினரின் கண்களில் படாமல் போக்குக் காட்டிவருகின்றனர். பல்வேறு தடைகளைத் தாண்டி அந்த விவசாயிகளைச சந்தித்தோம்.

விரட்டும் போலீஸ்... தலைமறைவாக விவசாயிகள்!

‘‘மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளைக் கொல்ல நினைக்கிறது. எங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கத் துடிக்கிறது. விவசாயிகளுக்குத் தேவையான திட்டத்தை விட்டுவிட்டு, விவசாயிகளை அழிக்கும் திட்டத்தைக் கொண்டுவருகிறது. கரும்புப் பயிருக்கான நிலுவைத் தொகையே இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்களும் எத்தனையோ தடவை அரசாங்கத்திடம் முறையிட்டுவிட்டோம். ஆனால், அரசு எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இங்கு போராடினால் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றுதான் டெல்லியில் போய் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்துகிறார்கள் நம் விவசாயிகள். ஆனால், மத்திய அரசும் நம் விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த வருஷம் மழையும் இல்லை. அதனால் விவசாயமும் இல்லை. காவிரி தண்ணீரும் வரவில்லை. நாங்கள் என்னதான் பண்ண முடியும்? இதற்கு மேல் வாழ முடியவில்லை என்ற நிலைமையால், விவசாயிகள் தற்கொலை  செய்து கொள்கிறார்கள். இதுவரை விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்த ஆட்சியாளர்கள், இப்போது விவசாய நிலங்களை அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து எங்களின் பூமியை நரகமாக மாற்ற முடிவு செய்துவிட்டார்கள்.

டெல்லியில போராடும் நம் விவசாயி களுக்கு ஆதரவு தருவதற்காகத்தான் சென்னைக்குக் குடும்பத்தோடு போராட வந்தோம். ஆனால் காவலர்களோ, ‘நீங்கள் போராட வேண்டும் என்றால், கிராமத்தில் போராட வேண்டியதுதானே? எதற்காக சென்னைக்கு வருகிறீர்கள்?’ என்று மிரட்டுகிறார்கள். வலுக்கட்டாயமாக எங்களை ஊருக்கு அனுப்ப முயற்சி செய்கின்றனர். சோறுபோடும் விவசாயியின் துன்பங்களை வெளியே சொல்ல முடியாதவாறு அடக்கியாள்வதுதான் தமிழகக் காவல்துறையின் கடமை, கண்ணியம் கட்டுப்பாடா? எத்தனை நாட்கள் ஆனாலும் இதற்கு முடிவு தெரியாமல் நாங்கள் ஊருக்கு செல்ல மாட்டோம்’’ என்று கொதித்தனர் அந்த விவசாயிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விரட்டும் போலீஸ்... தலைமறைவாக விவசாயிகள்!

விவசாயிகளை ஒருங்கிணைத்துவரும் ‘உழவே தலை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவா மற்றும் சந்திரமோகன் ஆகியோரிடம் பேசினோம். “இது போராட்டம் கிடையாது. இது, விவசாயிகளின் கலந்தாய்வுப் பயணம்தான். அனைத்து மக்களுக்கும் விவசாயிகள் பற்றிய விழிப்பு உணர்வைக் கொண்டுவந்து விவசாயிகளுக்காக ஆதரவு திரட்டுவதுதான் எங்கள் நோக்கம். இதற்காக ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முறைப்படி அனுமதி கேட்டோம். மைதானத்தின் நிர்வாகிகளும் எங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்தார்கள். கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் விவசாயப் போராட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முதல் நாளே, அந்த அனுமதியை போலீஸார் ரத்துசெய்யச் சொல்லிவிட்டார்கள். வந்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளையும் கெட்ட வார்த்தைகளால் கடுமையாகத் திட்டி அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். மீதமிருந்த விவசாயிகளோடு நாங்களும் ஒன்றுசேர்ந்து, ‘இங்கிருந்து செல்லமாட்டோம்’ என்று சொல்லி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கச் சென்றோம். ‘ஓரிரு தினங்கள் பொறுங்கள்... அனுமதி தருகிறோம்’ என்று நீதிமன்றத்திலும் சொன்னார்கள். இருந்தாலும் காவலர்களின் முக்கிய எண்ணம் அனைத்து விவசாயிகளையும் எப்படியாவது அவர்களின் சொந்த ஊருக்கே அனுப்பிவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறது. இதனால்தான் அனுமதி கிடைக்கும் வரை எந்த விவசாயியும் காவல்துறையினரின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் ரகசியமாகத் தங்கவைத்துள்ளோம்.

‘சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றால், சென்னையின் புறநகரான பரமேஸ்வரம் பகுதியில் ஏழு நாட்களுக்கு அனுமதி தருகிறோம்’ என்று கடந்த 2-ம் தேதி நீதிமன்றம் தெரிவித்தது. தற்போது இந்தப் பகுதியில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் வைத்து மக்களிடத்தில் ஆதரவு திரட்டி வருகிறோம். மக்களுக்கு ஒரு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. நம் விவசாயிகளை பாதுகாப்பதே அது. விவசாயிகளுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றனர்.

போராடுவதற்காவது டெல்லியில் அனுமதி கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில்?

- ஜெ.அன்பரசன்
படங்கள்: வசீம் இஸ்மாயில்