Published:Updated:

“இனி அறக்கோபம் கொள்ள வேண்டும்!” - சாட்டையை எடுக்கும் சகாயம்

“இனி அறக்கோபம் கொள்ள வேண்டும்!” - சாட்டையை எடுக்கும் சகாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
“இனி அறக்கோபம் கொள்ள வேண்டும்!” - சாட்டையை எடுக்கும் சகாயம்

“இனி அறக்கோபம் கொள்ள வேண்டும்!” - சாட்டையை எடுக்கும் சகாயம்

“இப்போதுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் செய்வதையே முக்கியக் குறிக்கோளாக வைத்துள்ளனர். அயோக்கியத்தனத்தை அதிகமாக செய்பவன்தான் அழகாகப் பேசுகிறான். நான் சொல்வது எந்தளவுக்கு உண்மை என்பதை தினமும் தொலைக்காட்சியைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்” என்று அதிரடியாகப் பேசினார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

 சகாயத்தை ஆதரிக்கும் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘மக்கள் பாதை’ என்ற இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். காலையில் நடந்த நிகழ்ச்சியில், ‘விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்; தவறு செய்யும் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும்’ என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகாயம், ஜல்லிக்கட்டு மற்றும் ஹைட்ரோகார்பன் போராட்டங்களில் பங்கேற்ற பெண்களின் பெற்றோர்களைச் சந்தித்தார். அப்போது, “தைரியமான பெண்களைப் பெற்றெடுத்த உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டார். 

“இனி அறக்கோபம் கொள்ள வேண்டும்!” - சாட்டையை எடுக்கும் சகாயம்

‘மக்கள் பாதை’ இயக்கத்தில் ஒன்பது பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றை அறிமுகம் செய்தனர். கலப்பை, தறி, திண்ணை, திடல், மக்கள் மருந்தகம், நீரின்றி அமையாது உலகு, கூத்து, ஊன்றுகோல், குருதி ஆகியவை இந்தப் பிரிவுகள். இவை மூலம் விவசாயிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களிடம் நேரடியாகப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவை பெருநகரங்களில் விற்பனை செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கும் லாபம், அந்தந்த விவசாயிகள், கைத்தறி நெசவாளர்களிடம் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி கற்றுக்கொடுத்தல், தன்னார்வத் தொண்டுகள் செய்தல், பாரம்பர்யக் கலைகளை மீட்டல், அவசர காலத்துக்கு ரத்ததானம் செய்தல், குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி விற்பனை செய்தல் போன்ற பணிகள் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட இருப்பதாக அவர்கள் அறிவித்தனர். இதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘மக்கள் பாதை’ (MAKKAL PATHAI) என்கிற மொபைல் போன் ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டது.

 பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சகாயம், அரசியல்வாதிகளை ஒரு பிடிபிடித்தார். ‘‘மக்கள் பாதை இயக்கமானது, அரசியல் நோக்கத்துக்காக அல்ல... சமூகச் சேவைக்காக உருவாக்கப்பட்டது. அரசியல்வாதிகளுக்கு வெற்றி, தோல்வி உண்டு. ஆனால், சமூக சேவைகள் செய்பவருக்குத் தோல்வி என்பதே கிடையாது. என் தமிழ்ச் சமூக இளைஞர்களைக்கண்டு நான் பெருமை கொள்கிறேன். ஏனென்றால், தமிழ் இளைஞர்கள்தான் இந்திய இளைஞர்களுக் கெல்லாம் முன்னோடி. இப்போது, என் இளைஞர்கள் அனைவரும் மிகச் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். பல லட்சம் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து நடத்தியது சாதாரணப் போராட்டம் அல்ல... மகத்துவம் வாய்ந்தது. ஆனால், இது போதாது. இதுவரை, அரசியல்வாதிகள் என் இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக வைத்திருந்தார்கள். அவர்கள் தவறு செய்வதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே அவர்களை அவ்வாறு வைத்திருந்தார்கள். நல்லவர்களைப்போலவே பேசி நம் இனத்தை வீணாக்கியவர்கள்தான் தற்கால அரசியல்வாதிகள்.

 ‘விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று சொல்கிறோம். ஆனால், விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ள விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா முழுக்க சுமார் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களைப்பற்றிக் கவலைப்பட இங்கு யாருமே இல்லை. டெல்லியில் அரை நிர்வாணக் கோலத்தில் பல நாட்களாக நம் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், பலன் கிடைக்கவில்லை. அப்புறம், எதற்காக இந்தியாவை விவசாய நாடு என்று சொல்ல வேண்டும்? விவசாயிகள் நன்றாக வாழவில்லை என்றால், ஒரு நாடு எப்படி வளர்ச்சியடையும்? விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், ‘தயவுசெய்து விவசாயிகளை வாழவிடுங்கள். ஆற்று மணல், காடு, தாது உப்பு... இவையெல்லாம் எப்படிக் கொள்ளையடிக்கப்படுகிறதோ, அதுபோலத்தான் விவசாயிகளின் வாழ்வும் கொள்ளையடிக்கப் படுகிறது. இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள்... நம் தமிழகத்தின் எந்தவொரு வளத்தையும் கொள்ளைப்போக விடக் கூடாது... விவசாயிகளும் துன்பப்படக் கூடாது. இது உங்களால் மட்டுமே சாத்தியமாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இனி அறக்கோபம் கொள்ள வேண்டும்!” - சாட்டையை எடுக்கும் சகாயம்

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக நான் கருத்து சொன்னதாகச் சில விஷமிகள் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பி வருகிறார்கள். நான் அப்படி எதையும் சொல்லவில்லை. விவசாயிகளுக்கு எதிராகக் கருத்துச் சொல்ல நான் ஒன்றும் ஈனப்பிறவி கிடையாது. இனி தவறு நடக்கும்பட்சத்தில், மக்கள் பாதை இளைஞர்கள் அறக்கோபம் கொண்டு தட்டிக்கேட்க வருவார்கள். அதோடு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் இறந்த விவசாயிகள் மற்றும் கஷ்டப்படும் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்களுக்கு மக்கள் பாதை இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் உதவிகள் செய்யும். வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்படும். இதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

 சாட்டையைச் சொடுக்க ஆரம்பித்துவிட்டார் சகாயம்.

- ஜெ.அன்பரசன்
படங்கள்: மீ.நிவேதன்