Published:Updated:

‘‘தி.மு.க-வின் துரோகத்தை நினைவுபடுத்தவே சிறைக்குச் செல்கிறேன்!”

‘‘தி.மு.க-வின் துரோகத்தை நினைவுபடுத்தவே சிறைக்குச் செல்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘தி.மு.க-வின் துரோகத்தை நினைவுபடுத்தவே சிறைக்குச் செல்கிறேன்!”

உறங்கிக் கிடந்த வழக்குக்கு உயிர்தந்த வைகோ

ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் அத்தனை கட்சிகளும் பரபரப்பாக இருக்கும் நேரத்தில், சிறைக்குச் சென்று, தமிழகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் வைகோ. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் பேசியதற்காக அவர்மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கில், தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீனும் பெற மறுத்து புழல் சிறைக்குச் சென்றிருக்கிறார் வைகோ. ‘‘ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸும், தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க-வும் செய்த துரோகத்தால், ஒன்றரை லட்சம் தமிழர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். இதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டவே சிறைக்குச் செல்கிறேன்’’ என்று நீதிமன்ற வாசலில் சொன்னார் வைகோ.

‘‘தி.மு.க-வின் துரோகத்தை நினைவுபடுத்தவே சிறைக்குச் செல்கிறேன்!”

2009-ம் ஆண்டு இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்தது. அப்போது, ‘இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது’ என்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார் வைகோ. இலங்கை விவகாரம் தொடர்பாக ஆறு முறை பிரதமரைச் சந்தித்தார்; இருபது கடிதங்கள் எழுதினார். ஆனாலும் தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்த இந்தியா எதுவும் செய்யாததால், கோபமடைந்தார் வைகோ. இலங்கை விவகாரத்தில், இந்திய அரசின் துரோகம் குறித்து ‘I Accuse’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், அதையே ‘குற்றம்சாட்டுகிறேன்’ என்ற பெயரில் தமிழிலும் புத்தகமாக எழுதினார். பிரதமருக்கு எழுதிய கடிதங்கள், சந்திப்புகள் குறித்து எல்லாம் அந்தப் புத்தகத்தில் பட்டியலிட்டிருந்தார் வைகோ. சென்னையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நடந்த அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க-வையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்த ஆடியோவைக் கையில் வைத்துக்கொண்டு, ‘என்ன செய்வது?’ என்று அன்றைக்கு ஆட்சியில் இருந்த தி.மு.க அரசிடம் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் உளவுப்பிரிவினர். ஐந்து மாதங்களுக்குப் பிறகே ஆளும் தரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்க, அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதே போல், விடுதலைப் புலிகள் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக ஊர்வலம் போனதாக ஒரு வழக்கும் இவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘தி.மு.க-வின் துரோகத்தை நினைவுபடுத்தவே சிறைக்குச் செல்கிறேன்!”

இந்த வழக்குகளால், வைகோவின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும்போதும், தடையில்லாச் சான்று பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளைச் சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் பயன் தராத நிலையில், வழக்கை உயிரூட்ட வேண்டும் என்று வைகோவே நீதிமன்றம் சென்று, கைதாகி சிறை சென்றுள்ளார்.

‘‘தி.மு.க-வின் துரோகத்தை நினைவுபடுத்தவே சிறைக்குச் செல்கிறேன்!”

வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸிடம் பேசினோம். “2009 ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஐந்து மாதங்கள் கழித்துதான் வழக்குப் பதிவு செய்தார்கள். ஒரு ஆண்டு கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள். வழக்குப் பதிவு செய்தாலும் வைகோ கைது செய்யப் படவில்லை. அவருக்கு சம்மனும் அளிக்கப் படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக் கொண்டே சென்றது. அதனால்தான் வைகோ தானாகவே சரணடைந்தார். சட்டப்படி அவர் ஜாமீனில் வர முடியும். ஆனால், நீதிபதி இரண்டு முறை வலியுறுத்தியும், ஜாமீன் மனு தாக்கல் செய்ய வைகோ மறுத்துவிட்டார். அதனால், 15 நாள் நீதிமன்றக் காவலில் வைகோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. வருகிற 17-ம் தேதி வரை வைகோ சிறையில் இருப்பார்” என்றார். அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வழக்குக்கு இப்போதுதான் நீதிமன்றத்தால் முதல் முறையாக விசாரிக்கப்பட்டுள்ளார் வைகோ.

புழல் சிறைக்கு செல்லும்முன்பு, ‘‘என்னை சிறையில் அடைத்ததற்காக யாரும் போராடக் கூடாது. தொண்டர்கள் கருவேல மரம் ஒழிப்பில்தான் தீவிரம் காட்டவேண்டும்” என்று அறிவித்துவிட்டார் வைகோ. ‘‘திடீரென வைகோ சிறை சென்றிருப்பதில் உள்நோக்கம் உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்குத் தர்மசங்கடம் தரவே அவர் இப்படிச் செய்திருக்கிறார்” எனக் குற்றம் சாட்டுகிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், “மிசா, தடா, பொடா என மூன்று அடக்குமுறை சட்டங்களையும் பார்த்த வைகோவுக்கு இந்த தேசத் துரோக வழக்கு ஒன்றும் பெரிதல்ல. ஏற்கெனவே 2007-ல் போட்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டிலிருந்து 2016-ல் அவர் வெளிவந்தது உலகுக்கே தெரியும்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் ம.தி.மு.க-வினர்.

- அ.சையது அபுதாஹிர்