அலசல்
Published:Updated:

சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்!

சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்!

சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்!

சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 31 நாட்களில் 28 முறை பார்வையாளர்கள் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர, அவரைச் சந்தித்த ஒரே அந்நிய நபர், மகுன்டா சீனிவாசலு ரெட்டி. 

யார் இவர்... எதற்காக சசிகலாவைச் சந்திக்க வேண்டும்... என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல் அதிர வைத்தது. சசிகலாவை இவர் சந்தித்ததற்கும், டாஸ்மாக் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது!

சீனிவாசலு ரெட்டி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியின் எம்.பி-யாக இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறியவர், தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் தேசியத் துணைத் தலைவராக இருக்கும் இவர், சமீபத்தில் எம்.எல்.சி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். விரைவில் அமைச்சர் ஆகலாம் என்கிறார்கள்.

இது இவரின் அரசியல் முகம். வெளியில் தெரியாத இன்னொரு முகமும் இவருக்கு உண்டு. விஜய் மல்லையாவின் நெருங்கிய நண்பர். பாலாஜி ஹோட்டல்ஸ், என்ரிகா என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்கள் இவரின் குடும்பத்துக்குச் சொந்தமானவை. சத்யம் திரையரங்கக் குழுமமும் இந்தக் குடும்பத்தின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. ஹோட்டல்கள், மதுபான வியாபாரம், ஸ்டீல் தொழில், ரியல் எஸ்டேட் என கொடி கட்டிப்பறக்கும் புள்ளி, சீனிவாசலு ரெட்டி. பாலாஜி டிஸ்டில்லரீஸ் என்ற நிறுவனமும் இவருக்குச் சொந்தமானது.

சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்!

மதுபானத் தொழில் மூலம் விஜய் மல்லையா இவருக்கு நண்பர் ஆனார். மல்லையா தனது பல தொழில் நிறுவனங்களில் இவரை இயக்குநராக வைத்திருந்தார். விஜய் மல்லையாவுக்குக் கடன் சிக்கல்கள் வந்தபோது, அவரின் நிறுவனத்தின் பங்குகளையும், பிரபல பிராண்டுகளையும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம் வாங்கியது. பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து கிங் ஃபிஷர் பியர் போன்ற பிரபல பிராண்டுகளை விற்கும் உரிமையையும், சென்னை அருகே பூந்தமல்லியில் இருக்கும் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தையும், சீனிவாசலு ரெட்டியின் என்ரிகா என்டர்பிரைசஸ் வாங்கியிருக்கிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு, பெருமளவில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக என்ரிகா இருந்தது. கடந்த 2015-16-ம் நிதியாண்டில் டாஸ்மாக் கொள்முதல் செய்த 5.35 கோடி மதுபானப் பெட்டிகளில் 54 லட்சம் பெட்டிகள் இந்த நிறுவனத்திடமிருந்தே வாங்கப்பட்டன. 2016-17-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 28 லட்சம் பெட்டிகளை இவர்கள் சப்ளை செய்தனர். ஆனால், செப்டம்பர் மாதத்திலிருந்து இவர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆர்டர் எதுவும் வழங்கவில்லை.

இதனால், மெக்டவல், சிக்னேச்சர், ராயல் சேலஞ்ச், கிங்ஃபிஷர் போன்ற பிரபல பிராண்டுகள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்காத நிலைமை ஏற்பட்டது. இன்னொரு பக்கம், என்ரிகா நிறுவனம் தனது உற்பத்தியையும் நிறுத்த வேண்டிய சூழல். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சூழலில், சீனிவாசலு ரெட்டி மீண்டும் தன் நிறுவனத்துக்கு ஆர்டர் கிடைக்கச் செய்ய பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. ரெட்டி குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கும் முக்கியமான சொத்துகளை விற்குமாறு கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததாலேயே டாஸ்மாக் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

சுமார் ஆறு மாதங்கள் இந்த இழுபறி நீடித்தது. என்ரிகா என்டர்பிரைசஸ் தனது உற்பத்தியை நிறுத்தியதால், அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பாக ஒருநாள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். என்ரிகா தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணன், டாஸ்மாக் நிறுவனம் தன்னிச்சையாக ஆர்டர் வழங்காமல் நிறுத்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றையும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார்.

சசிகலா சிறைக்குப் போக நேர்ந்ததும் காட்சிகள் மாறின. கடந்த மார்ச் 1-ம் தேதி சசிகலாவை பெங்களூரு சிறையில் சீனிவாசலு ரெட்டி சந்தித்தார். ‘பர்சனல்’ எனக் காரணம் குறிப்பிடப்பட்ட இந்தச் சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாக சிறைக் குறிப்புகள் சொல்கின்றன. இவரை சசிகலா சந்திக்க ஒப்புக்கொண்டது ஏன்?

இதற்கான காரணம், வேறு வகையில் வெளிவந்து இருக்கிறது. அடுத்த ஐந்து நாட்களில் - அதாவது மார்ச் 6-ம் தேதி, சீனிவாசலு ரெட்டியின் என்ரிகா என்டர்பிரைசஸ், டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து சப்ளை ஆர்டர் பெற்றுவிட்டது. ஆக, பெங்களூரு சிறையிலிருந்தே ரிமோட் கன்ட்ரோலில் தமிழக அரசு இயக்கப்படுகிறது!

- அகஸ்டஸ்