அலசல்
Published:Updated:

கிராமங்களில் புது மதுக்கடைகள் திறக்கக்கூடாது!

கிராமங்களில் புது மதுக்கடைகள் திறக்கக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
கிராமங்களில் புது மதுக்கடைகள் திறக்கக்கூடாது!

எச்சரிக்கும் வழக்கறிஞர் பாலு

‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கடைகளை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே உறுதியாகவும் தீவிரமாகவும் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்தக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். பாலுவிடம் பேசினோம்.

கிராமங்களில் புது மதுக்கடைகள் திறக்கக்கூடாது!

“தீர்ப்பின் விளைவை எப்படி உணர்கிறீர்கள்?’’

“தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். ‘சாலை ஓரங்களில் இருக்கும் மதுபானக் கடைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன; பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. நீதிமன்றத்தின் மூலம் ஏதாவது செய்ய முடியுமா பார்’ என்று அய்யா ராமதாஸ் என்னிடம் சொன்னார். அதையடுத்து, 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கில்தான் இப்படி ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.”

“புதிதாக கிராமப்புறங்களில் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு முயற்சி செய்கிறதே?”

“தீர்ப்பை அமல்படுத்தி, கடைகளை மூடுவதால், ஒவ்வொரு நாளும் சுமார் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதனால், அரசியல்வாதிகள் நடத்தும் மதுபான உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்படும். அந்த இழப்பைச் சரிக்கட்ட தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும். அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். அனைத்து மதுபானக் கடைகளையும் அகற்றுவதற்குத் தொடர்ந்து போராடுவோம்.”

“உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?”

“ ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்...’ என்பதை, ‘100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை’ என்று மாற்ற வேண்டும் என அரசு போராடி வருகிறது. மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் மதுபானக்கடைகளை அகற்றாமல் இருக்க, அந்தச் சாலைகளை மாவட்டச் சாலைகள், நகரச் சாலைகள் எனக் கணக்கு காட்டும் முயற்சியும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால், தமிழக அரசுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்படும்.”

- ஜெ.அன்பரசன்