அலசல்
Published:Updated:

ஜூ.வி. ரேடார்

ஜூ.வி. ரேடார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூ.வி. ரேடார்

ஜூ.வி. ரேடார்

51 ரூபாய் நோட்டு!

ஜூ.வி. ரேடார்

மொய் வைக்க வசதியாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ, ‘21 ரூபாய் நோட்டையும் 51 ரூபாய் நோட்டையும் வெளியிடும் திட்டம் இருக்கிறதா?’ என நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார், பி.ஜே.பி-யைச் சேர்ந்த எம்.பி பரேஷ் ராவல். ஆனால், ‘‘இந்த நோட்டுக்களை மட்டுமல்ல... 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் வெளியிடும் திட்டம் இல்லை’’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார், நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.

 ‘‘100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவிக்கும் திட்டம் இருக்கிறதா?” என்று இன்னொரு எம்.பி., கேட்டார். அப்படிச் செய்தால், வங்கிகளின் வாசலில் நிற்கப்போகும் க்யூவை நினைத்துப் பார்த்திருப்பாரோ என்னவோ, பதறிப்போய் அப்படி எந்த ஐடியாவும் இல்லை’’ என்றார் அமைச்சர்.

ஜூ.வி. ரேடார்

வாய்ஸ்

=‘‘ஆர்.கே. நகரில் ஓ.பன்னீர்செல்வம் ஆட்களும், தி.மு.க-வினரும் தொப்பி போட்டுக்கொண்டு போய் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, எங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருகின்றனர்!”
- டி.டி.வி.தினகரன்

ஜூ.வி. ரேடார்

ஒரு கேள்வி ஒரு பதில்

‘‘டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன்?’’

‘‘போராட்டக்காரர்களை இதுவரை நான் மூன்று முறை சந்தித்துவிட்டேன். நிதித்துறை, நீர்வழித்துறை, விவசாயத்துறை அமைச்சர்களைச் சந்திக்கவைத்திருக்கிறேன். டெல்லியில் ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 100 போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட சில போராட்டக்காரர்களை மட்டும் பிரதமர் சந்தித்துவிட்டு மற்றவர்களைச் சந்திக்காமல் போனால், பிரதமரைப்பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒவ்வொரு விஷயத்துக்கும் நேரடியாக பிரதமரையே சந்திப்பது என்றால், அவருக்குக் கீழே இத்தனை துறைகள் எதற்கு? அமைச்சர்கள் எதற்கு? மாநில அரசுகள் எதற்கு?’’

- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஜூ.வி. ரேடார்

 ‘டெரர்’ டேட்டா

விமானத்தில் தனக்கு வசதியான இருக்கைத் தரவில்லை என 60 வயது ஏர் இந்தியா நிறுவன மேனேஜரை 25 முறை செருப்பால் அடித்து, கடந்த வாரம் இந்தியாவையே அதிர வைத்தவர், ரவீந்திர கெய்க்வாட். சிவசேனா கட்சியைச் சேர்ந்த இவரின் ‘டெரர்’டேட்டா...

* மகாராஷ்டிராவின் உஸ்மானாபாத் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து எம்.பி ஆனவர்.

* நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க புனேவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

* ‘எனக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கை ஏன் தரவில்லை’ என அவர் சண்டை போட்டார். அந்த விமானத்தில் எல்லாமே குறைந்த கட்டண எகானமி கிளாஸ் இருக்கைகள்தான், சொகுசான பிசினஸ் கிளாஸ் இருக்கைகளே இல்லை எனச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

* இந்த கண்ணியமான மனிதர், உமர்கா நகரில் இருக்கும் சத்ரபதி சிவாஜி கல்லூரியின் பேராசிரியர். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு இப்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

* ‘செருப்பால் அடித்ததற்கு மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன்’ என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.

* எனவே, இவரை விமானத்தில் ஏற்றுவது இல்லை என்று ஏர் இந்தியா, இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் ஆகிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இப்படிக் கட்டம் கட்டப்பட்டிருக்கும் முதல் நபர் இவர்.

* தனது பெயருக்கு முன்பு ‘பேராசிரியர்’ என அடைமொழி சேர்த்து, வேறு ஆள் போல காட்டி விமான டிக்கெட் வாங்க கடந்த ஒரு வாரத்தில் ஆறு முறை முயன்றார். ஆனால், ஒருமுறைகூட இவரின் முயற்சி ஜெயிக்கவில்லை.

* நாடாளுமன்றம் செல்வதற்கு இவருக்குப் பிரத்யேக விமானத்தை அமர்த்திக்கொடுக்கும் அளவுக்கு, சிவசேனா கட்சி, இவரின் செயலை ஆதரிப்பதுதான் அதிர்ச்சி.

என் எண்கள்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக கர்நாடக அரசு, இதுவரை வழக்கறிஞர்களுக்கு வழங்கியுள்ள ஃபீஸ் எவ்வளவு?


உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஃபீஸ்: ரூ.95,16,500
மூன்று நீதிமன்றங்களிலும் வாதாடிய      பி.வி.ஆச்சார்யாவின் ஃபீஸ்: ரூ.1,06,86,018
ஜோசப் அரிஸ்டாட்டில்ஃபீஸ்: ரூ.32,01,070
சந்தேஷ் சவுதா ஃபீஸ்: ரூ.42,23,643
மதுசூதன் ஆர்.நாயக் ஃபீஸ்: ரூ.2,43,657

ஜூ.வி. ரேடார்

ஸ்மைலி ஏரியா

‘ஆர்.கே.நகர் தொகுதியில் எல்லா வார்டுகளுக்கும் கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் எந்திரம் வழங்க வேண்டும்’ என்ற மக்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்!!!

ஜூ.வி. ரேடார்

யோகியின்  மூன்று நாற்காலிகள்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரே நேரத்தில் மூன்று பதவிகளில் இருக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆறு மாதங்களுக்குள் அவர் எம்.எல்.சி-யாகத் தேர்வாகி, முதல்வர் பதவியில் தொடர்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. யோகி இப்போது உ.பி-யில் கோரக்பூர் தொகுதியின் எம்.பி-யாக இருக்கிறார். அந்தப் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை.  வரும் ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதில் ஓட்டு போடும்வரை எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவரிடம் சொல்லப்பட்டதாகத் தகவல். (ஜனாதிபதி தேர்தலில், ஒரு எம்.பி-யின் ஓட்டு மதிப்பு 708. எம்.எல்.சி-க்களுக்கு ஓட்டு இல்லை).

தவிர, கோரக்பூர் மடத்தின் தலைமை மடாதிபதியாகவும் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அந்த ‘மகந்த்’ பதவியில் தனக்கு அடுத்து அமரப் போகிறவரையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

ஜூ.வி. ரேடார்

திவாகரன் தந்த தண்டனை!

பொதுவாக, போலீஸ் அதிகாரிகள்தாம் மற்றவர்களைக் கைகட்டி நிற்கவைத்து திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், போலீஸ் அதிகாரியே கைகட்டி நின்ற கதை இது. தஞ்சை-வேதாரண்யம் தடத்தில் பாலகணபதி என்ற தனியார் பஸ் அதிவேகமாக வந்துள்ளது. காதைக் கிழிக்கும் அளவுக்கு பஸ்ஸில் டேப் ரெக்கார்டர் சப்தம். அந்த பஸ்ஸை மடக்கிய டி.எஸ்.பி ஒருவர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் பஸ்ஸை ஒப்படைத்துச் சென்றார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த டி.எஸ்.பி-க்கு ஓர் அதிர்ச்சித் தகவல். மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீட்டில் வந்து ஆஜராகும்படி டி.எஸ்.பி-க்கு உத்தரவு வந்துள்ளது. அந்த பஸ், சசிகலாவின் தம்பி திவாகரனுக்குச் சொந்தமானது என்ற தகவல் அப்போதுதான்         டி.எஸ்.பி-க்குத் தெரிய வந்திருக்கிறது.

படபடப்பில் வியர்த்துப்போய், ஓடோடிச் சென்றார் டி.எஸ்.பி. அவரை, ஒன்றரை மணி நேரம் வாசலுக்கு வெளியில் காத்திருக்க வைத்து, உள்ளே அழைத்து காய்ச்சி எடுத்துவிட்டாராம் திவாகரன். ‘‘என்னோட பஸ்னுகூடத் தெரியாம என்னய்யா வேலை பாக்குற?’’ என்று சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்திருக்கிறார்.  

ஜூ.வி. நூலகம்

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

ஜூ.வி. ரேடார்

- எவிடன்ஸ் கதிர்,  விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2.

விலை: ரூ.175/-


எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டுநடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான். அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம்.

சிலரைப் போல் செய்திகளைத் தொகுத்து எழுதியது அல்ல இது. களத்தில் நின்று, அந்த அனுபவங்களில் இருந்து இதை எழுதியிருக்கிறார் கதிர். கட்டுரைகள் என்பதைவிட ‘கள ஆய்வு அறிக்கைகள்’ என்றே சொல்லலாம். நெஞ்சில் கனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் எழுத்து இது. உரிமை மீறல் நடக்கும் இடமெல்லாம் தடம் பதித்துக் கிளர்ச்சி செய்பவர் கதிர்.

நீதியும் மனிதமும் உருவாவதற்கான தூண்டுதலே இந்தக் கட்டுரைகள். ‘நீதிதான் இலக்கு என்று சொன்னாலும் நீதியைவிட நீதிக்கான பயணத்தில் பலரையும் இணைப்பதுதான் களப்பணியின் ஆன்மா’ என்று சொல்கிறார் கதிர். அத்தகைய களப்பணியை நோக்கிப் பலரையும் இணைப்பதற்கான தூண்டுதல், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி.

ஜூ.வி. ரேடார்

தமிழ் கற்கப்போகும் தலைமை நீதிபதி!

சென்னை உயர் நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார் இந்திரா பானர்ஜி. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய இவர், கிரிமினல் வழக்குகளை நடத்துவதில் ‘எக்ஸ்பெர்ட்’.
 
2002-ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, 2016-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். “ஒரு சுற்றுலாப் பயணியாக சென்னைக்கு வந்திருக்கிறேன். இப்போது, இங்கேயே இருக்கப்போகிறேன். பாரம்பர்யமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவது பெருமை. பல வெளிநாடுகளில் தமிழ் மொழி இன்று ஆட்சி மொழியாக உள்ளது. அதை விரைவில் கற்றுக்கொள்வேன்” என்றார்.

ஜூ.வி. ரேடார்

- ஜோ.ஸ்டாலின், தி.கதிரவன், சி.ய.ஆனந்தகுமார், எம்.ராகவன்
படங்கள்: மீ.நிவேதன், என்.ஜி.மணிகண்டன்  ஓவியங்கள்: கண்ணா