பிரீமியம் ஸ்டோரி

துவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியில் பாதிக்கப்பட்டிருக்கிறது தமிழகம். குடிநீருக்காக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில்கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகிவிட்டது. ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், உச்ச நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகளை எப்படியாவது வேறு இடங்களில் திறந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது தமிழக அரசு.

இதன் உச்சம்தான் திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைகளை மூடச்சொல்லி, போராடிய மக்கள் மீது போலீஸ் நடத்திய கொடூரத் தாக்குதல்.

காக்க காக்க மதுவைக் காக்க...

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளைக் குடியிருப்புகளுக்குள் மாற்றும் வேலையை தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டங்களை போலீஸ் மூலம் ஒடுக்க முயல்கிறது தமிழக அரசு.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட... அந்தக் கடை சாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோயிலுக்குச் செல்லும் சாலையில் மாற்றப்பட்டது. அங்குள்ள விவசாய நிலமொன்றில் இதற்கான கட்டடம் கட்டப்பட்டு, அங்கு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகளின்போதே இதை  அப்பகுதி மக்கள் எதிர்த்தனர். டாஸ்மாக் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் துவங்கி முதல்வர் தனிப்பிரிவு வரை `இங்கு டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது’ என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அதன் மீது எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். `கடையை மூடும் வரை போராட்டம் தொடரும்’ என அறிவித்தனர். மறியல் போராட்டம் மணிக்கணக்கில் நீண்டபோதும் டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் அப்பகுதியில் தலைகாட்ட வில்லை. காவல்துறையினர் மட்டுமே மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். `கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை’ என மக்கள் சொல்ல... போராட்டம் தொடர்ந்தது.

காக்க காக்க மதுவைக் காக்க...

போராட்டத்தின்போது அவ்வழியாக சூலூர் தொகுதி அ.தி.மு.க. அம்மா பிரிவு எம்.எல்.ஏ. கனகராஜ் காரில் சென்றார். காரை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் முறையிட்டனர். ‘கடை மூடப்படும்’ என்று எம்.எல்.ஏ. சொன்னபோதும், `எழுத்துபூர்வமாகத் தெரிவிக்காமல் போராட்டத்திலிருந்து விலக முடியாது’ எனப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸ் உதவியோடு எம்.எல்.ஏ கனகராஜ் அங்கிருந்து வெளியேறினார்.

எம்.எல்.ஏ சென்ற சில நிமிடங்களில் திடீரென போலீஸார் பொதுமக்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல், திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட, அதிர்ந்து போனார்கள் மக்கள். போராட்ட இடத்திலிருந்து எம்.எல்.ஏ செல்லும்போது, ‘எங்ககூடயே இருந்து போராடுறேன்னு சொல்லிட்டு ஏன் கிளம்புறீங்க?’ என அவரை செல்லவிடாமல் தடுத்தவர் ஈஸ்வரி. அவருக்குத்தான் கன்னத்தில் அறை விழுந்தது.

நடந்ததை அவரிடமே கேட்டோம். “மக்கள் குடியிருக்கிற இந்தப் பகுதியில டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாதுங்கறதுதான் எங்க கோரிக்கை. இந்தப் பகுதி வழியாதான் பசங்க ஸ்கூலுக்குப் போறாங்க. பெண்களும் போயிட்டு வர்றோம். இங்கே டாஸ்மாக் கடையைத் திறந்தா தேவையில்லாத பிரச்னை வரும். அதனாலதான் கடையைத் திறக்க வேண்டாம்னு கட்சி சார்பில்லாமல் ஊர்மக்களா கூடிப் போராடினோம்.  அப்போ அந்த வழியாக எம்.எல்.ஏ கனகராஜின் கார் வந்துச்சு. அப்போதான் முதல்முறையா நான் அவரை நேரில் பாக்கறேன். அவர்கிட்ட முறையிட்டோம். ‘எல்லாம் நான் பார்த்துக்கறேன். மேலிடத்தில் இது சம்பந்தமா பேசி நல்ல முடிவை எடுக்கறேன்’னு எங்களுக்கு ஆதரவா பேசிவிட்டு, காரில் ஏறப் போனார். ‘எங்ககூடவே இருந்து போராடுறேன்னு சொல்லிட்டு ஏன் கிளம்புறீங்க?’ன்னு கேட்டு, எம்.எல்.ஏ-வை கார்ல ஏறவிடாம தடுத்தேன். அப்பவே என்னை போலீஸ்காரங்க தள்ளிவிட்டாங்க. அவசர அவசரமா               எம்.எல்.ஏ-வை வழி அனுப்பிவெச்சுட்டு, எல்லோரையும் போலீஸ் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் வயசானவங்களை அழைச்சுட்டுப் போய்ட்டு இருந்தேன். அப்போ ஏ.டி.எஸ்.பி. பாண்டிய ராஜன் என் மேல லத்தியால அடிச்சார். திரும்ப அடிச்சப்போ லத்தியை பிடிச்சுக்கிட்டேன். உடனே என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சார். பயத்துல பக்கத்துல இருந்த கடைகிட்ட போய் உட்கார்ந்துட்டேன்” எனச் சொன்னவரின் கண்ணில் இன்னும் அந்த பயம் தெரிந்தது. ஏற்கெனவே காதில் அறுவை சிகிச்சை செய்திருந்த ஈஸ்வரிக்கு, இப்போது கேட்கும் திறன் பெருமளவு குறைந்துவிட்டது.

காக்க காக்க மதுவைக் காக்க...

இதுதவிர விசைத்தறி உரிமையாளர் கணேசன் என்பவரின் மண்டை உடைந்தது. மேலும் பலருக்கு எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள். இந்தக் காட்சிகளைப் பதிவு செய்த பத்திரிகையாளர் களும் போலீஸ் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

போலீஸ் தாக்குதலைக் கண்டித்து அமைதி வழியில் உண்ணாவிரதம் இருந்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர். 27 பேரை கைதுசெய்த போலீஸார், அதில் ஏழு பேரை ரிமாண்டு செய்ய நீதிமன்றம் வரை அழைத்துச்சென்றனர். அப்போது மீடியாக்களில் இந்த செய்தி விஸ்வரூபம் எடுக்க... ரிமாண்ட் செய்யாமல் 27 பேரையும் விடுவித்தது போலீஸ்.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பாண்டியராஜன் பேசியதாக அவ்வமைப்பினர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். “நான் அந்தப் பெண்ணை அடிக்கவில்லை. நிருபர் நண்பர் ஒருவரால், இது பெரிதாகிவிட்டது. நான் அந்த அளவுக்கு அடிக்கவில்லை. என் கை அந்தப் பெண் மீது படவே இல்லை. எம்.எல்.ஏ-வைப் பிடித்து மக்கள் ரகளைப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

எம்.எல்.ஏ-வை விடமாட்டேன் என்று சொன்னதும் அங்கு நான் சென்றேன். அப்போதும் நான் அவர்களை அடிக்கவில்லை” என்றே சொல்லியிருக்கிறார். இதனை உறுதிப்படுத்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது இரு செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

காக்க காக்க மதுவைக் காக்க...

சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் முற்றுகை யிடப்பட்டதுதான் இந்தத் தாக்குதலுக்குப் பின் உள்ள முக்கிய பிரச்னையாகச் சொல்லப்படுகிறது. “நான், மக்களின் பிரதிநிதி. மக்கள் சொல்வதை அரசிடம் எடுத்துச் சொல்வது எனது வேலை. பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்படி அரசிடம் கூறுவேன். நிலைமை மோசமாக இருந்தால், அது பற்றியும் அரசிடம் விளக்கிக் கூறுவேன். நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கம்தான். நான், யாருக்கும் பயப்பட மாட்டேன். இன்னும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் போனால் ஆட்சியே போய்விடும்” என்றார் அவர்.

இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறப்பதில் தீவிர கவனம் செலுத்தக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அரசின் வரி வருவாயில் பெருமளவு மது மூலமே கிடைக்கிறது என்பது பிரதான காரணம். ஆனால், அதைவிட முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மிகப் பெரிய அரசியல் அது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்குப் பெறப்படும் மதுபானங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேல் அ.தி.மு.க., தி.மு.க-வினர் மது ஆலைகளில் இருந்துதான் பெறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தால் அது, மதுபான ஆலைகள் நடத்துபவர்களைப் பெருமளவு பாதிக்கும். டாஸ்மாக் பார் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் அரசியல்வாதி களுக்கு அது பெரும் பணம் சுரக்கும் இடமாக மாறிவிட்டது. இதை ஏலம் எடுப்பது ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களின் அழுத்தமும் இதற்கு ஒரு காரணம்தான்’’ என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா, “பல மணிநேரம் நடந்த போராட்டத்தால் பெரிய அளவில் போக்குவரத்து பாதித்தது. சாமளாபுரம் பகுதியின் மிக முக்கியச் சாலை என்பதால் மக்கள் அவ்வழியே செல்வதில் சிரமம் நீடித்துக்கொண்டே இருந்தது. திடீரென கூட்டத்தின் மீது யாரோ கல்லெறிய, மிகப் பெரிய அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கில்தான் அங்கு தடியடி நடத்தப்பட்டது. சம்பவம் குறித்தும்,
ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன்மீதும் விசாரணை நடத்த எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை தொடர்கிறது” என்றார்.

மக்களைப் போராட்டத்துக்குத் தள்ளும் வகையில், அரசே டாஸ்மாக் கடைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் திறப்பது என்பது மிகவும் அபாயகரமானது.

- தி.ஜெயப்பிரகாஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு