Published:Updated:

குட்டிக்கரணம் போடும் விவசாயம்... வெட்டிப்பேச்சு பேசும் அரசாங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குட்டிக்கரணம் போடும் விவசாயம்... வெட்டிப்பேச்சு பேசும் அரசாங்கம்!
குட்டிக்கரணம் போடும் விவசாயம்... வெட்டிப்பேச்சு பேசும் அரசாங்கம்!

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி
குட்டிக்கரணம் போடும் விவசாயம்... வெட்டிப்பேச்சு பேசும் அரசாங்கம்!

நிர்வாணப் போராட்டத்தைக்கூட அவமானமாகக் கருதாத ஓர் அரசின் கவனத்தை ஈர்க்க, குட்டிக்கரணம் அடித்து வலியை உணர்த்தியிருக்கிறார்கள் நம் விவசாயிகள். டெல்லியில் அவர்களின் போராட்டம் ஒரு மாதத்தைத் தாண்டியிருக்கிறது. நம் முதிய விவசாயிகளைத் தலைநகரில் தவிக்கவிட்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்வில், தமிழகத்தின் பல பகுதிகளில் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், ‘‘விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று கூசாமல் நாடாளுமன்றத்தில் சொல்கிறார், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார்.

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகள் மூன்றே மூன்றுதான். வறட்சி நிவாரணம் வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்.

சாத்தியமில்லாத எதையும் அவர்கள் கேட்கவில்லை. வறட்சி நிவாரணம் என்பது, பருவமழை பொய்க்கும் காலங்களில் மத்திய அரசு தர வேண்டிய ஒன்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நீதிமன்றமே உத்தரவு போட்டிருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களும் ஏற்கெனவே இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, நாடு முழுக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது.  2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு, சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது.

இப்போது உத்தரப்பிரதேசத்தில் 36,359 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தள்ளுபடி செய்த அதே பி.ஜே.பி-தான் மத்திய அரசில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் குரலாக, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் இதற்குக் கவலை தெரிவிக்கிறார். ‘‘அரசியல் கட்சிகள் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியையே தவிர்க்க வேண்டும். இப்படித் தள்ளுபடி செய்தால், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற ஒழுக்கத்தை அது, இந்தியாவில் உடைத்துவிடும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல், விவசாயிகள் அடுத்த தேர்தல் வரை காத்திருப்பார்கள். இது பணவீக்க ஆபத்தை அதிகரிக்கக்கூடும்’’ என்று கவலைகொள்கிறார்.

குட்டிக்கரணம் போடும் விவசாயம்... வெட்டிப்பேச்சு பேசும் அரசாங்கம்!

இதே ரிசர்வ் வங்கிதான். இதேபோன்ற ஒரு அதிகாரிதான் ஒய்.வி.ரெட்டி. 2008-ல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது கவர்னராக இருந்தவர். அவர், இப்படி வெளிப்படையாக விவசாயிகளுக்கு எதிராகப் பேசவில்லை. மாறாக, இந்தக் கடன் தள்ளுபடியின் நியாயத்தைச் சொன்னார். ‘‘இந்தியாவில் ஐம்பது சதவிகித மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம்தான். மற்ற எல்லா துறைகளும் இரட்டை இலக்க வளர்ச்சி பெறும்போது, விவசாயம் மட்டும் ஒற்றை இலக்கத்தில் வளர்கிறது. உணவு என்பது நம் வாழ்வுக்கு ஆதாரம். அதை விளைவிக்கும் விவசாயி மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. விவசாயிகள் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. ‘வேறு பிழைப்பு இருந்தால் விவசாயத்தை விட்டுவிடுவேன்’ என 40 சதவிகித விவசாயிகள் சொல்லியிருக்கிறார்கள். இத்தனை விரக்தியோடு அவர்கள் இருப்பது ஆபத்து. இதற்குத் தீர்வு தேடாவிட்டால், எதிர்காலத்தில் நாம் உணவுப்பஞ்சத்தில் தவிப்போம்’’ என்றார் ரெட்டி.

எத்தனை சத்தியமான வார்த்தைகள்! இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு விலகியிருப்பார்கள் என்று பெரிதாகக் கணக்கு எடுக்கத் தேவையில்லை. பெருநகர ஏ.டி.எம்-களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் காவலாளிகளாக இருப்பவர்களிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் தோற்றுப்போன விவசாயிகளாக இருப்பார்கள். அவர்களின் தோல்விக்கு, அவர்கள் மட்டுமே காரணமில்லை.

இந்தியாவில், அரசின் மொத்த வருமானத்தில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நிதிதான் விவசாயத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் பாசன வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. விவசாயத்துக்காகக் கட்டப்பட்ட பல அணைகளின் தண்ணீரை, குடிநீர்த் தேவைகளுக்காக அபகரித்துக்கொண்டோம். அத்தனை ஆறுகளின் மணலையும் சுரண்டி, அந்த ஜீவநதிகளைச் செத்துப் போகச் செய்தோம். இத்தனை சிரமங்களையும் தாண்டி அவர்கள் விளைவிக்கும் பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காது. தக்காளி விலை வீழ்ச்சி அடையும்போது, விரக்தியில் அத்தனை விளைச்சலையும் ரோட்டோரம் கொட்டிவிட்டுப் போகும் விவசாயிகள் பற்றி செய்தியாகப் படித்துவிட்டு பலர் கடந்து போயிருக்கக்கூடும். ஒரு விதையிலிருந்து அது பழமாகக் கனியும்வரை தன் உழைப்பைக் கொட்டிய அந்த விவசாயி, லாபம் பெறுவது ஒரு பக்கம் கிடைக்கட்டும். அவர் செய்த செலவை எங்கிருந்து மீட்பார்? அடுத்து நம்பிக்கையோடு அவர் எப்படி விதைப்பார்?

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, மானியங்கள் அளிப்பது ஆகியவற்றுக்கு எதிரான ஒரு மனநிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால், இவர்களில் யாரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பற்றிப் பேசுவதில்லை. அய்யாக்கண்ணு கேட்கும் கடன் தள்ளுபடி, சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய். ‘இதைச் செய்தால் பண வீக்கம் ஏற்படும்’ என்று சொல்லும் மத்திய அரசு, கடந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,51,200 கோடி ரூபாய் சலுகை தந்திருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாக! கடந்த 11 ஆண்டுகளில் கார்ப்பரேட் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்பட்ட சலுகைகளின் மொத்த மதிப்பு, 47,11,519 கோடி ரூபாய். இதில் எத்தனை அணைகள் கட்டியிருக்கலாம், எத்தனை கால்வாய்கள் வெட்டியிருக்கலாம். ஆனால், ஒரே ஒரு அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்குப் பல பத்தாண்டுகள் விவசாயிகள் போராட வேண்டிய நிலைமை.

குட்டிக்கரணம் போடும் விவசாயம்... வெட்டிப்பேச்சு பேசும் அரசாங்கம்!

தள்ளுபடி, கடன், மானியம் என நேரடி வார்த்தைகளால் விவசாயிகளை அவமானப்படுத்துவது போல கார்ப்பரேட்களை அணுகுவதில்லை அரசு. இந்தச் சலுகைகளை கவர்ச்சிகரமான பெயர்களால் குறிப்பிடுகிறது. கடந்த 2005-06 பட்ஜெட்டுக்கு முன்பாக, இந்த சலுகைகளைத் தனிப்பட்டியலாகப் பிரித்துக் காட்டுவது வழக்கத்தில் இல்லை. அதன்பின் ‘Statement of Revenue Foregone’ என்ற பெயரில் இதைத் தனியாகக் கணக்குக் காட்டினார்கள். இப்போது இதிலிருந்தும் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்பதால், ‘The Statement of Revenue Impact of Tax Incentives’ என வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.

ஏதோ ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் இறக்குமதி செய்த கருவிகளுக்கு இப்படி சலுகை தந்தார்கள் என்றால், அதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் இருக்க முடியும். ஆனால், தங்கம், வைரம், நகைகள் வெளிநாடுகளிலிருந்து வாங்கியதற்கும் சுங்கவரியை ரத்து செய்திருக்கிறது அரசு. 2015-16-ம் நிதியாண்டில் மட்டும் இப்படி நகைகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரி, 75,592 கோடி ரூபாய். இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் பலன் பெற்றிருக்கலாம்; இதே அளவு தொகைக்கு விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தால், பல கோடி குடும்பங்கள் மீட்சி  பெற்றிருக்கும். ஆனால், நம் ஆட்சியாளர்களுக்கு மனசில்லை.

கடந்த ஆண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் 99 பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள். இவர்களில் 27 பேர் இந்தியர்கள். டெல்லியில் கோவணத்தோடு போராடும் விவசாயிகளுடன் இணைந்து இந்த சாதனையைக் கொண்டாடுவோம்!

- தி.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு