Published:Updated:

அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ். ஆனேன்... எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ். ஆனேன்... எப்படி?
அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ். ஆனேன்... எப்படி?

க.வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்

பிரீமியம் ஸ்டோரி

நான் 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன், என்னை நேர்காணல் செய்த செய்தியாளர்களில் சிலர், அவர்களின் செய்திக் கட்டுரைகளுக்குக் கொடுத்த தலைப்பு, ‘அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ் ஆனேன்!’ என்பது. ‘அம்பேத்கருக்கும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கும் என்ன தொடர்பு?’ என்ற கேள்வி இதைப் படிப்பவர்களுக்கு எழலாம். 

அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ். ஆனேன்... எப்படி?

‘சாதி’ என்ற காரணி, இந்தியாவில் பிறந்த ஒருவரின் வாழ்க்கை லட்சியங்கள் நிறைவேறுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. எவ்வாறெல்லாம் சாதி செயல்படுகிறது என்பதைக் கண்டுகொள்வது எளிது. ஏனென்றால், பிறந்த நொடி முதல் இறக்கும் நொடி வரை சாதி விளையாடும் சதிராட்டத்தை ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சதிராட்டத்தின் ஆணிவேரையும், அது இயங்கும் நுட்பங்களையும் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகிறது

தன் இளம்பிராயத்தில் கிராமத்தின் ஒதுக்குப்புறங்களிலும், நகரத்தின் சேரிகளிலும் தலித் சிறுவர் ஒருவர் எதிர்கொள்ளத் துவங்கும் சாதியமைப்பின் பரமபத ஆட்டம்... எப்போதும் சாதிப்பாம்பின் விஷ நாக்குகளால் கொத்திக் கொத்திக் கீழே தள்ளப்பட்டு வீழும் துர்பாக்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஏறிச் செல்வதற்கு எல்லோருக்கும் ஏணிகள் கிட்டுவதில்லை. இந்த நிலையில், நம் முன்னோர்கள், நமக்கு மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்களின் வரலாறு போன்றவைதான் நமக்குப் பல படிப்பினைகளைக் கற்றுத்தருகின்றன. 

 

அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ். ஆனேன்... எப்படி?

அதிலும், சமூகத்தின் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்ற உத்வேகம் கொண்டவர்கள், அவர்களைவிட உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வதும், அதிலிருந்து தனக்குத் தேவையான செய்திகளை எடுத்துக்கொள்வதும் உறுதுணையாக இருக்கும். கலெக்டராக வேண்டும் என்ற கனவுகண்ட நான், சிறுவயதில் ‘அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு’ படித்தேன். அதுதான் நான் பாதை மாறிய ஒவ்வோர் இடத்திலும், எனக்குச் சரியான வழியைக் காட்டியது; சோர்ந்து விழுந்த பல நேரங்களில் என்னை உற்சாகப்படுத்தி இந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

இந்திய சமூகத்தின் படிநிலை அமைப்பில் மேல்நோக்கி முன்னேறிச் செல்லலாம் என்கிற பெருங்கனவோடு, போட்டிகள் நிறைந்த களத்தின் உள்ளே நுழையும் தலித் மாணவர்களும், இளைஞர்களும், கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் பலியாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம். ‘ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த எவரும் சாதிக்கும் எண்ணத்தோடு உலவக் கூடாது’ என்பதுதான் இங்கு நிகழும் ஆட்டங்களின் ஒரே விதியாக இருக்கிறது. பெரும்பாலான தலித் - பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருந்தத்தக்க மனத்தடைகள் உள்ளன. அந்தத் தடைகளை உடைத்தெறிந்து வாழ்வில் பெரும் சாதனைகளைப் புரிந்த பலர் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் ‘அறிவுச் சூரியன்’ அம்பேத்கர்.

அம்பேத்கரைப் படித்தேன்... ஐ.ஏ.எஸ். ஆனேன்... எப்படி?

அவர், பள்ளிக்குக் கோணிப்பையோடு சென்று தனியாக உட்கார்ந்து பாடம் படித்தவர். பின்னாட்களில் கப்பலிலும், விமானங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் படிப்பாரென்று, அவரைக் குதிரை வண்டியிலிருந்து தள்ளிவிட்ட வண்டிக்காரன் ஊகித்திருப்பானா? எதிர்காலத்தில் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகளின் அடிப்படையில்தான் நீர்வளத்தைப் பெருக்கும் பக்ரா-நங்கல் மற்றும் தாமோதர் நதி பல்நோக்குத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று, அலுவலகத்தில் அம்பேத்கருக்குக் குடிக்கத் தண்ணீர் தர மறுத்த அலுவலக ஊழியர்கள் அந்தக் கணம் யோசித்திருப்பார்களா? நட்ட நடு ராத்திரியில் இறுதிக்கால விடுதியிலிருந்து விரட்டியவர்கள், அம்பேத்கரின் பெயரால் லட்சக்கணக்கான குடியிருப்புகளும், விடுதிகளும் கட்டப்படும் என்று கனவு கண்டிருப்பார்களா?

தோல்விகளிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் கிடைக்கும் பாடங்களைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய தேடல் வெற்றி கண்ட போராட்ட வரலாறுகளைத் தேடிச் செல்ல வேண்டும். அம்பேத்கரின் இளவயது வரலாறு, படிப்போருக்கு ஆத்திரமூட்டும். அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகளின் கொடூரம் அத்தகையது. அம்பேத்கரின் மாணவப் பருவ வரலாறு, வாசிப்போருக்கு ஆச்சர்யமூட்டும். மாணவனாக அவர் தொட்ட உயரங்கள் எவரும் தொட முடியாதவை. அம்பேத்கரின் ஆரம்பகால அரசியல், ஒவ்வொருவரையும் சாதி அழிப்புப் போருக்கு எதிராக அணி திரளவைக்கும். அவரின் எழுச்சி நிறைந்த பேச்சும், ஆற்றல்மிகுந்த எழுத்தும், மறுக்க முடியாத வாதத்திறமையும் அவரின் அறிவுப் பெருவெள்ளத் தின் ஒரு சிறுதுளி. அம்பேத்கரின் இறுதிக்கால அரசியல், சமூக உணர்வையூட்டும். இந்திய தேசம் எதிர்கொண்ட அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுகளையும், பல்வேறு மாற்று வழிகளையும் அறிவார்ந்த ரீதியில், தர்க்கத்தின் அடிப்படையில் வழங்கியவர் அம்பேத்கர்.

அம்பேத்கர் கடும் உழைப்பின் சின்னம். அன்பின் ஊற்று. அறிவின் சுரங்கம். தன்னைத் தானே தகவமைத்துக்கொண்ட தன்னெழுச்சி. சாதிக்கத் துடிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் அம்பேத்கரின் வரலாற்றைக் கற்க வேண்டும். இழிவுகளைத் துடைத்தெறிய, அம்பேத்கரின் பேச்சுக்களைப் படிக்க வேண்டும். ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற, அம்பேத்கரின் எழுத்துக் களை வாசிக்க வேண்டும். நம்மை மீட்டெடுத்து ஊக்கப் படுத்தும் அந்த வரலாறுதான், சமத்துவம் நிறைந்த, முழு சுதந்திரமுள்ள, மனித மாண்பு களோடு வாழ்வதற்கேற்ற சமூகத்தை உருவாக்கும் பணியைச் செய்யத் தூண்டும். மனித மாண்பற்றுத் திரியும் எந்த தரப்பினரையும் செம்மைப்படுத்தி ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்ட அம்பேத்கரின் எழுத்துக்களை சாதி, மதம், பால், இனம், மொழி கடந்து வாசிப்போம்.ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு