Published:Updated:

எனக்கு மட்டும் ஏன் மரண தண்டனை? - சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எனக்கு மட்டும் ஏன் மரண தண்டனை? - சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம்
எனக்கு மட்டும் ஏன் மரண தண்டனை? - சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம்

எனக்கு மட்டும் ஏன் மரண தண்டனை? - சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம்

பிரீமியம் ஸ்டோரி

‘‘என் பெயர் சீமைக்கருவேல மரம். சமீபகாலமாக என்னைப் பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் என்னைப் பற்றி ஏராளமான செய்திகள் பரப்பப்படுகின்றன. கலெக்டர் அலுவலகம் தொடங்கி, தேநீர் கடை வரை என்னைப் பற்றிதான் பேச்சாக இருக்கிறது. இதற்குக் காரணம், எனக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. எந்தத் தவறும் செய்யாத எனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது சரியா?

சூழல் ஆர்வலர்கள், எனக்கு எதிராக அளித்த புகாரைத் தொடர்ந்துதான், இப்படியொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்காமலும், அதற்கான அறிவியல் ஆதாரங்களைத் தேடாமலும் எனக்கு இப்படியொரு தண்டனையை வழங்கிவிட்டார்கள். இப்போது, என்னைப் பல மாவட்டங்களில் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் தருவாயில், என்னைப் பற்றியும் என் பயன்பாடு பற்றியும் வருங்கால சந்ததியர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, என் வாக்குமூலத்தை இங்கு பதிவுசெய்கிறேன்.

எனக்கு மட்டும் ஏன் மரண தண்டனை? - சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம்

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்செடி நான். தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில்தான் என் சொந்த நாடு. உலகமயமாக்கல் கொள்கையை மனிதர்கள் கொண்டுவருவதற்கு முன்பே, உலகம் முழுவதும் எனது இருப்பை உணர்த்தியவன் நான். 1911-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வாழ்ந்து வருகிறேன். நானாக இங்கு வரவில்லை. எரிபொருள் தேவைக்காகவும், உயிர்வேலிக்காகவும் மனிதர்களே என்னை விரும்பி இங்கு கொண்டுவந்தார்கள்.

அப்போது, என்னுடைய விதைகளை வாங்குவதற்காக வரிசையில் உழவர்கள் காத்திருந்தனர். என் உயிர்வேலியைப் பார்க்க ஆராய்ச்சி நிலையங்களுக்குப் படையெடுத்தனர். காடு மேடுகளில், தண்ணீரே இல்லாத இடங்களில், கற்களும் பாறைகளும் உள்ள நிலங்களில் போராடி வளர்ந்தேன். என் காய்களை ஆடு, மாடுகள் விரும்பி உண்டன. ஜீரணிக்கப்படாத என் விதைகள், ஆடு, மாடுகளின் சாணத்துடன் வந்து திறத்துடன் வளர்ந்தன.

 அப்போதெல்லாம் எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயுவோ, மின் அடுப்புகளோ இல்லை. எல்லோரும் என்னைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தினர். மக்கள், காடுகளுக்குச் சென்று விறகு சேகரிப்பதை முற்றிலுமாக ஒழித்தது நான்தான். என்னால் வனங்கள் காப்பாற்றப்பட்டன. என்னைப் பலர், எரிகரியாகவும் மாற்றி தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி ஏராளமாகப் பணம் சம்பாதித்தார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வேளாண்மை செய்ய முடியாத, மற்ற எந்தப் பயிர்களும் வளராத நிலங்களில்... நான் செழிப்பாக வளர்ந்தேன். மனிதர்கள் என்னை சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

என்னை இத்தனைக் காலம் பாராட்டி சீராட்டி வளர்த்தது நீங்கள்தானே! என் விதைகளை ஆகாயத்தில் இருந்து காற்றின் மூலம் பரவவிட்டது நீங்கள்தானே! நீங்கள் போற்றுகிற தலைவர் காமராஜர் ஆண்டபோதுதானே இவை எல்லாம் நடந்தன.

என் ஆணிவேரும், சல்லிவேரும் பூமிக்குள் பரவி மண்ணையும், மணல் குவியலையும் பாதுகாப்பது உங்கள் யாருக்கும் தெரியாதா? ஆனால், மணல் கொள்ளையர்களுக்குத் தெரியும், மணல் மேடுகளை நான் எவ்வாறு பாதுகாக்க முயற்சி செய்கிறேன் என்பது. நான் மட்டும் இல்லையென்றால், கடலோர மாவட்டங்களில் மேல் மண்ணை, காற்றும் மழையும் முற்றாக அடித்துச்சென்றிருக்கும். இந்த விஷயம் உங்களுக்கு ஏன் தெரியாமல்போனது?

 எந்த மரமாக இருந்தாலும், அதன் வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சத்தான் செய்யும், அது மரங்களின் இயல்பு. ஆலமரம், அரசமரம் போன்ற மரங்களின் வேர்கள் என் வேர்களைவிட ஆழமாக ஊடுருவக்கூடியவை. அவ்வளவு ஏன்... மருத்துவக் குணமுள்ள தைலம் எடுக்கப்படும் யூகலிப்டஸ் மரம்கூட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சக்கூடியதுதான் என்று கேள்விப்பட்டேன். அப்படியிருக்கும்போது என்னை ஏன் திடீரென எதிரியாகப் பார்க்கிறீர்கள்? ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப்போல இருக்கிறது உங்கள் நியாயம்!’’

வருத்தத்துடன்,

சீமைக்கருவேல மரம்

- பொன்.செந்தில்குமார்
படம்: தே.அசோக்குமார்

சீமைக் கருவேல மரத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள, 25/4/17 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழைப் படியுங்கள். இது சம்பந்தமான வீடியோவைப் பார்க்க...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு