Published:Updated:

விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை
விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

ஜூ.வி லென்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

‘‘டேய், மனுஷனா பொறந்தா லட்சியம் இருக்கணும்.’’

‘‘குனிஞ்சு தேங்காய் பொறுக்கிறதால லட்சியம் இல்லைனு நினைச்சுடாதீங்க. பின்னால தெரியுதுல அரண்மனை...’’

‘‘அதுல வேலைக்குச் சேர்த்துவிடவா?’’

‘‘இல்லீங்க, அந்த அரண்மனையை ஒரு நாள் எனக்கு சொந்தமாக்கிடணும்.’’

‘‘அடேங்கப்பா!”

‘‘காலையில ஒருவர் தேங்காய் உடைச்சாரு. அதை பொறுக்கிறதுல எனக்கும் நாய்க்கும் சரியான போட்டி.’’

‘‘நாய் ஜெயிச்சுடுச்சா?’’

‘‘இல்லை... நான்தான் ஜெயிச்சேன். நாயைக் கொன்னுட்டேன்!’’

‘‘அடப்பாவி... நாயை பலி போட்டிருக்கான்.’’

‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன... ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்கணும்.’’


-‘அ
மைதிப்படை’ படத்தில் வரும் டயலாக்குகள் இவை. நாகராஜ சோழனாக மாறிய ‘அமாவாசை’ சத்யராஜ் கேரக்டர்தான் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை ஏரியாவில் அவருக்குக் கட்சி யினர் வைத்திருக்கும் பட்டப்பெயரே இதுதான்!

விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

அ.தி.மு.க-வில் ஒருவர் அமைச்சர் ஆக வேண்டுமானால், சசிகலா குடும்பம்தான் ரூட். ஆனால், விஜயபாஸ்கருக்கு ‘கேபினட் அந்தஸ்து’ பெற்றுக்கொடுத்தது ஓ.பன்னீர்செல்வம்தான். இப்போது அவரையே எதிர்த்து நிற்கிறார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சையில் பன்னீருக்கும் விஜயபாஸ்கருக்கும் இடையேதான் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பதவிக்காக எதையும் செய்யத் துணியும் விஜயபாஸ்கரின் அரசியல் வளர்ச்சி எப்படி ஆரம்பித்தது?

யார் யாரையோ பிடித்து 2001, 2011 ஆண்டுகளில் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆன விஜயபாஸ்கரால் மந்திரி ஆக முடியவில்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களையும் கதைகளையும் கச்சிதமாக சட்டசபையில் பேசி ஸ்கோர் செய்து கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்தையும் கருணாநிதியையும் ‘கதை சொல்லி’ கலாய்த்தார். அப்படி சொன்ன கதைதான் இது...

‘‘பட்டாசு வாங்க ரெண்டு பேர் கடைக்குப் போறாங்க. அந்தப் பட்டாசுக் கடை பேரு திருக்குவளை. அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி. விலை 176. ‘இது எப்படி வெடிக்கும்?’னு கேட்டாங்க. ‘இது கூட்டு ராக்கெட். இதை இங்கே பத்தவெச்சா, ஜோடியாப் பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்’னு சொன்னார் கடைக்காரர். ‘இது வேணாம்’னு சொல்லிட்டு, அடுத்த வெடியைப் பார்க்கிறாங்க. அந்த வெடியின் பேர் சிலோன் வெடி. ‘இந்த வெடி நிமிஷத்துக்கு நிமிஷம் கலர் மாறும். நொடிக்கு நொடி நிறம் மாறும். பத்திக்கிற மாதிரி இருக்கும். ஆனா, வெடிக்காது’னு சொல்றாங்க.

இன்னொரு வெடிக்கடை இருக்கு. அதன்  பேர் கோயம்பேடு ஃபயர் வொர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார். வெடியை வாங்கிப் பத்தவெச்சாலும் வெடிக்கலை. ஏன்னு கேட்டா வெடி எப்பவும் தண்ணியிலேயே இருந்ததால நமத்துப்போச்சு. அதனால வியாபாரமும் படுத்துப்போச்சு. விக்காத சரக்கை எல்லாம் மொத்தமா எடுத்துகிட்டு அந்த ஓனர் டெல்லிக்குப் போய் கடை விரிக்கப் பார்க்கிறாரு’’ - இப்படி 2013-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி சட்டமன்றத்தில் விஜயபாஸ்கர் பேசியபோது குலுங்கிக் குலுங்கி சிரித்தார் ஜெயலலிதா. மறுநாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆனார் விஜயபாஸ்கர்.

மெடிக்கலில் இருந்து பொலிட்டிகலுக்கு வந்த விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருக்கும் ராப்பூசல் கிராமம்தான் சொந்த ஊர்.

ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தார் விஜயபாஸ்கரின் அப்பா சின்னதம்பி. திருநாவுக்கரசர் தனியாகப் பிரிந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற கட்சி ஆரம்பித்தபோது அதில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். தந்தை சின்னதம்பியிடம் இருந்துதான் அரசியல் ஆசை, விஜயபாஸ்கருக்கு எட்டிப் பார்த்தது. முக்கியப் புள்ளி ஒருவரின் சிபாரிசில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது. மெடிக்கல் படிக்கப்போன இடத்தில், பொலிட்டிக்கல்தான் படித்தார். கல்லூரிப் படிப்பின்போது அண்ணாமலை, கௌதம் சிகாமணி, முரளி என விஜயபாஸ்கருக்கு மூன்று படா தோஸ்த்துகள் கிடைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி, கரூர் சின்னசாமி ஆகியோரின் வாரிசுகள் அவர்கள். சிதம்பரத்தில் ஒரு விழாவில் பங்கேற்க வந்த ஜெயலலிதாவை ஈர்க்க, உப்பால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிரமாண்ட உருவத்தை அமைத்திருந்தார் விஜயபாஸ்கர். உடனே, கடலூர் மாவட்ட மாணவர் அணிப் பொறுப்பு பரிசாகக் கிடைத்தது.

விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்தபோதுதான் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் அறிமுகம் கிடைத்தது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு வேண்டிய உதவிகளை செய்து, வி.ஐ.பி வட்டாரத்துக்குள் நுழைந்தார். அப்படி அங்கே சிகிச்சைக்கு வந்த புலவர் சங்கரலிங்கத்துடனும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். சங்கரலிங்கம், ஜெயலலிதாவின் பி.ஏ பூங்குன்றனின் தந்தை. அப்பா மூலம் பூங்குன்றனுடன் நெருக்கமானார். இந்தப் பல்முனை விசுவாச நெட்வொர்க்கின் விளைவாக, 2001-ம் ஆண்டு தேர்தலில் விஜயபாஸ்கருக்கு ஸீட் கிடைத்து எம்.எல்.ஏ ஆனார்.

2006 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க வில்லை. 2009-ம் ஆண்டு எம்.பி தேர்தலில், திருச்சியைக் குறிவைத்தார். அதுவும் வாய்க்க வில்லை. அதனால், சில காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, குவாரி தொழிலில் கவனம் செலுத்தினார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் குவாரி தொழிலுக்கு எந்த பங்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். டாக்டர் வெங்கடேஷ் தொடர்பால் மீண்டும் அரசியலில் தீவிரமானார். 2011 தேர்தலில் வென்று இரண்டாவது முறை எம்.எல்.ஏ ஆனதும் அமைச்சர் பதவி மீது கண் பதித்தார். சசிகலா குடும்பத்தினரைச் சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால், கேபினட்டுக்குள் நுழைய முடியவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ முத்துக்குமரன் மறைவால் புதுக்கோட்டைக்கு இடைத்தேர்தல் வந்தது. மொத்த அமைச்சரவையும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அங்கே முகாம் போட... அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஓடியாடி வேலை பார்த்தார். அப்போது அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்குப் பக்கபலமாக இருந்தார். இதனால் ஓ.பி.எஸ் குடும்பத்தோடு நெருக்கமானார். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வரை ‘பாக்கெட்’ செய்த விஜயபாஸ்கர், அடுத்து ‘கதைசொல்லி’ ஜெயலலிதாவிடம் ‘லைக்ஸ்’ வாங்கினார். பன்னீரின் சிபாரிசும் சேர... மந்திரி ஆனார் விஜயபாஸ்கர்.

வருமானவரித் துறை சோதனைக்கு அச்சாரம் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்தான் என்றாலும், அதற்கு முன்பே அவருடைய மலைக்க வைக்கும் சொத்துகள் பற்றிய வில்லங்கம், போஸ்டர்கள் வடிவில் கிளம்பியது. ‘தமிழ்நாட்டில் நிலம் வாங்க, விற்க வேண்டுமா? அணுகுங்கள் விஜயபாஸ்கரை...’ என சில ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தலைமைச் செயலகம் வரை பரபரத்தது. ‘2001-ல் அரசியலுக்கு வரும் முன்பு விஜயபாஸ்கருக்குச் சொத்துகள் இல்லை. இன்றோ கடலைத் தவிர, தமிழ்நாடு முழுக்க இவரால் வாங்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.450 கோடியைத் தாண்டும்’ எனக் கணக்கு சொல்லின போஸ்டர்கள். 

விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

இந்த போஸ்டர்களுக்குப் பின்னணியும் உண்டு. அரசியலில் விஜயபாஸ்கர் ஒதுங்கியிருந்த 2006-11 காலகட்டத்தில்தான் குவாரி தொழிலில்  அவர் கால் பதித்தார். தன் பெயரில் ‘ராசி ப்ளூ மெட்டல்’, மனைவி ரம்யா பெயரில் ‘வி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ ஆகிய நிறுவனங்களை ஆரம்பித்தார். பல கோடிகளில் கிரஷ்ஷிங் யூனிட், பொக்லைன், டிரான்ஸிட் மிக்ஸர், பேட்சிங் பிளான்ட், டிப்பர் லாரிகள், ஹாட்மிக்ஸ் பிளான்ட்... என சகலமும் வாங்கிக் குவித்தார்.

‘‘குவாரி தொழிலில், புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டம். சாலை தொடங்கி பாலம் வரை எந்தக் கட்டுமான வேலைகளுக்கும் தேவையான பொருட்கள் அனைத்தும் விஜயபாஸ்கர் நிறுவனங்களில் இருந்துதான் செல்கின்றன. தி.மு.க ஆட்சியில்தான் இந்தத் தொழில்களைத் தொடங்கி விருத்தியடையச் செய்தார். பொன்முடி மகன், ரகுபதி மகன்... இவர்களுடனான நட்புதான் காரணம். பொன்முடி உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்ததால், அரசியல்ரீதியிலான முட்டுக்கட்டைகளைத் தகர்த்தார்கள். குவாரி பிசினஸ், உள்ளூர் அதிகாரப் பதவிகள், அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவது, எதிரிகளை பலவீனப்படுத்துவது என எப்போதும் அவர் கவனமாக இருப்பார்’’ என சொந்தக் கட்சியினரே குமுறுகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ‘பொதுப்பணித் துறையின் டாப் 10 ஊழல் பேர்வழிகள்’ எனப் பட்டியல் வெளியானது. இதில் ஐந்து பேர், அரசு மருத்துவமனைகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டவர்கள்.

ஒரு முறை சட்டசபையில் பேசிய விஜயபாஸ்கர், “மக்கள் நலம்... மக்கள் நலம்... என்றே சொல்வார்... தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார்... என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கு ஏற்ப கடந்த காலத்தில், சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில்தான் கவனம் செலுத்தினார்கள்” என்றார். இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அது சஸ்பெண்ட் வரை போனது. அன்றைக்கு அப்படிச் சொன்ன விஜயபாஸ்கர் வீட்டில்தான் வருமானவரித் துறை சோதனை. ‘‘விஜயபாஸ்கரின் கணக்கு வழக்குகளையும் சரிபார்த்தால் சுவிஸ் வங்கியே போதாது’’ என பன்னீர் அணியினர் சொல்கிறார்கள். இப்போது நடந்த ரெய்டுக்குப் பிள்ளையார் சுழி போட்டதே மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டிதான்.

வேலூர் மாவட்டம் தொண்டான்துளசி என்ற ஊரைச் சேர்ந்த சேகர் ரெட்டி, ஆரம்பத்தில் சின்ன கான்ட்ராக்டராகத்தான் இருந்தார். அ.தி.மு.க-வில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் நுழைந்தபோதுதான் விஜயபாஸ்கரின் நட்பு கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். டாக்டர் வெங்கடேஷ், அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேகர் சேகர் ரெட்டிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் விஜயபாஸ்கர். ஏற்கனவே ராம மோகன ராவுடன் சேகர் ரெட்டி நெருக்கமாக இருந்தார். இப்படி வி.ஐ.பி-கள், ஆளும்கட்சியின் ஆதரவு எல்லாம் சேர... மணல் கான்ட்ராக்ட் சேகர் ரெட்டிக்கு கிடைத்தது.  புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் கான்ட்ராக்டரான ராமச்சந்திரனும் சேகர் ரெட்டியோடு கைகோத்துக்கொண்டார். இப்படியான சங்கிலித் தொடர் கூட்டணியில்தான் கரன்சிகள் கொட்ட ஆரம்பித்தன.

விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை

இந்தநிலையில், ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு சேகர் ரெட்டி, அவருடைய நண்பர்கள் சீனிவாசலு, பிரேம்குமார் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை போட்ட வருமான வரித் துறை, 96.89 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளையும் 9.63 கோடி மதிப்புள்ள புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளையும் 171 கிலோ தங்கத்தையும் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரைச் சிறையில் அடைத்தனர். அத்துடன் நிற்காமல் சேகர் ரெட்டியின் தொழில் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு  அவர்கள் கைது செய்யப்பட்டனர். செல்லாத பணத்தை மாற்ற உதவிய மும்பையைச் சேர்ந்த பரஸ்மால் லோதாவும் இதில் தப்பவில்லை. இவர்களிடம் நடந்த விசாரணையின் தொடர்ச்சியாகத்தான் ராம மோகன் ராவ் வீடு, கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தது வருமானவரித் துறை.

பிரேம்குமாரும் விஜயபாஸ்கரும் நண்பர்கள். திண்டுக்கல் ரத்தினத்தின் சொந்த ஊர் புதுக்கோட்டை அறந்தாங்கி. மணல் கான்ட்ராக்டரான ராமச்சந்திரனுக்கும் சொந்த ஊர், புதுக்கோட்டைதான். ஒரே மாவட்டத்துக் காரர்களான இவர்கள் விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்டவர்கள். இப்படியான தொடர்புகளால், சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த நாளில் இருந்தே, விஜயபாஸ்கரின் வர்த்தகத் தொடர்புகளைக் கண்காணித்து வந்தனர் வருமானவரித் துறையினர். ஆர்.கே. நகர் தேர்தல் பண விநியோகத்தில் சரியாக சிக்கிக் கொண்டார் விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கரின் விஸ்வரூப வளர்ச்சிக்கு இப்போது சின்ன இடைவேளை!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படம்: மா.அரவிந்த், ஓவியம்: ஹாசிப்கான்

சிதம்பர ரகசியம்!

புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கிற கடிகாப்பட்டியில் இருக்கிறது ‘சிதம்பர விலாஸ்’. பழைய செட்டிநாடு வீடுகள் டைப்பில் இருக்கும் இந்த விடுதியில் வைத்துதான் வேண்டியவர்களைக் குளிர வைப்பார் விஜயபாஸ்கர். அவரின் அரசியல் ‘மூவ்’கள் அனைத்தும் இங்குதான் அரங்கேறும். தாஜா பண்ணி யாரிடமாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றால் அவர்களை சிதம்பர விலாஸுக்கு அழைத்துப் போய்விடுவார்கள்.

வில்லங்கமான புகார்கள்!

* குவாரி தொழில் போக, கல்வியிலும் கால் பதித்தது விஜயபாஸ்கர் குடும்பம். தந்தை சின்னதம்பி, சகோதரர் உதயகுமார் ஆகியோர் பெயர்களில் ‘மதர் தெரசா’ என்ற கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இன்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பி.எட்., ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், மெட்ரிக் ஸ்கூல் என நூறு ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது கல்வி சாம்ராஜ்யம். கல்வி அறக்கட்டளையில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவும் உறுப்பினர். இந்தக் கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்ட விவகாரத்திலும் அந்தப் பகுதி மக்கள் புகார்ப் பட்டியல் வாசித்தார்கள்.

* ‘‘விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கண் அசைத்தால்தான் எல்லா வேலைகளும் நடைபெறும். சின்னதம்பியின் நிறுவனத்துக்கும் இன்னும் வேண்டப்பட்ட கம்பெனிகளுக்கும் மட்டுமே அரசின் கான்ட்ராக்ட்கள் செல்கின்றன. நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சி என எந்த வேலையையும் விடுவதில்லை’’ என புதுக்கோட்டை கான்ட்ராக்டர்கள் புலம்புகிறார்கள்.

* 2011 தேர்தலில் போட்டியிட்டபோது வேட்புமனுவில் அசையும் சொத்துகள் பற்றிய விவரத்தில் ‘டாக்டர் காலேஜ் ரூபாய் 1,50,000’ என குறிப்பிட்டிருக்கிறார். வங்கிக் கணக்கில் உள்ள வைப்பீடுகள் பற்றிய விவரங்களைச் சொல்லும்போது, அவரின் மனைவி ரம்யா பெயரில் இந்தத் தொகை குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொட்டையாக ‘டாக்டர் காலேஜ்’ என்ற பெயரில் வைப்புத் தொகையை எப்படிக் குறிப்பிட முடியும் எனச் சந்தேகம் எழுப்புகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் 2016 வேட்புமனுவில் அந்த விவரம் மிஸ்ஸிங்.

* ‘முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்ட’த்தில் இணைந்திருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கிடைத்த வருமானத்தில் 10 சதவிகிதத்தை, ஜெயா டி.வி-க்கு விளம்பரமாகத் தரும்படி மருத்துவமனை உரிமையாளர்களை விஜயபாஸ்கர் கட்டாயப்படுத்தினார்’ என பகிரங்கமாகவே புகார் கிளம்பியது. ‘‘அரசின் வரிப்பணம் அறிவியல்பூர்வமாக ஆளும்கட்சியின் டி.வி-க்கு மடை மாற்றப்படுகிறது’’ எனப் புகார் எழுப்பினார் ராமதாஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு