Published:Updated:

கோபாலகிருஷ்ண நாயுடுவை பெரியார் சந்தித்தாரா? - ஜூ.வி நூலகம்

கோபாலகிருஷ்ண நாயுடுவை பெரியார் சந்தித்தாரா? - ஜூ.வி நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோபாலகிருஷ்ண நாயுடுவை பெரியார் சந்தித்தாரா? - ஜூ.வி நூலகம்

கோபாலகிருஷ்ண நாயுடுவை பெரியார் சந்தித்தாரா? - ஜூ.வி நூலகம்

கீழ்வெண்மணி... இந்த ஊர்ப் பெயரை உச்சரிக்கும்போது தமிழ்ச்சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும். தொல்காப்பியத்தின் அருமையும் புறநானூற்றுப் பெருமையும் பேசித் திரியும் சமூகத்தில்தான் அப்பாவி உயிர்களை அனலுக்குத் தாரை வார்த்தது, சாதியும் நிலப்பிரபுத்துவமும் கலந்த வன்முறைக்கூட்டம். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தாலும், மனிதநேயம் கொண்டவர்களின் கண்களில் எல்லாம் அதன் சாம்பல் இன்னும் பறந்து உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அது மீனா கந்தசாமிக்கு நாவலாக வெடிக்கிறது. அதுவும் ஆங்கிலத்தில். தமிழில் தந்துள்ளார் பிரேம். மீனாவும் பிரேமும் நவீன இலக்கியத்தின் முகங்களாகவும் குரல்களாக இருப்பவர்கள் என்பதால், கீழ்வெண்மணியின் சோகம், நுண் அரசியலின் அனைத்துப் பரிமாணங்களையும் விளக்குவதாக அமைந்துவிட்டது.

கோபாலகிருஷ்ண நாயுடுவை பெரியார் சந்தித்தாரா? - ஜூ.வி நூலகம்

‘கூலி உயர்வு கேட்ட ஒரு சிலரை, தர மறுத்த பண்ணையார் தீவைத்துக் கொளுத்தினார்’ என்ற ஒற்றை வரியைக் கொண்டதா கீழ்வெண்மணி? அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதால், இது கம்யூனிஸ்ட்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டியதா? கொல்லப்பட்டவர்கள் தலித் என்பதால் தலித் இயக்கங்கள் மட்டுமே அதனைப் பேச வேண்டுமா? இல்லை. இது இன்றுவரைத் தொடர்ந்து வரும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ பிரச்னை. இன்றும் இதேபோல் எத்தனையோ கீழ்வெண்மணிகள் இருக்கின்றன. அவை பற்றி யாரும் பேசுவது இல்லை. பேசியாக வேண்டும் என்பதற்கான தூண்டுதல்தான் மீனாவின் எழுத்து.

கதை சொல்லும் பாணியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கதை அல்ல. நேரடியாய் அங்கு பயணம் செய்து, பிரச்னையில் தொடர்புடைய பலருடனும் தான் நடத்திய சந்திப்பை நேரடி சாட்சிகளின் குரலாக மீனா பதிந்துள்ளார். அதனால்தான் வார்த்தைகள் அனைத்தும் இப்போது ராமையாவின் குடிசை எரிவதைப் போலவே இருக்கிறது. நடப்பை நாவலாக ஆக்கும்போது இதுபோன்றுதான் செயல்பட்டு எழுத வேண்டும்.

ஆனால், கோபாலகிருஷ்ண நாயுடுவை பெரியார் சந்தித்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என மீனாதான் சொல்ல வேண்டும். ‘கோபாலகிருஷ்ண நாயுடு சந்திக்க முயற்சி செய்தார், ஆனால், பெரியார் சந்திக்கவில்லை’ என்பதுதான் கஸ்தூரிரெங்கனின் வார்த்தைகள் (ஆதாரம்: பசு.கவுதமன் நூல்). பொத்தாம் பொதுவான அவதூறுகளை மீனாவும் எப்படி எடுத்துக் கோத்தார் எனத் தெரியவில்லை.

தமிழின் ஆகப்பெரும் நாவலாசிரியர்கள் கண்ணில் படாத கருவைக்கொண்டு ஒரு நாவலை எழுதியதும், அதை ஆங்கிலத்தில் எழுதியதும், அந்த உயிர்களுக்குச் செய்யப்பட்ட உண்மையான அஞ்சலிகள்!

- புத்தகன்


குறத்தியம்மன்
- மீனா கந்தசாமி
தமிழில்: பிரேம்

அணங்கு,
3, முருகன்கோயில் தெரு, கணுவாப்பேட்டை,
வில்லியனூர், புதுச்சேரி
விலை: ரூ.200/-

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz