Published:Updated:

‘‘எங்கள் கண்ணீரில்தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்!’’

‘‘எங்கள் கண்ணீரில்தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘எங்கள் கண்ணீரில்தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்!’’

மதுவுக்கு எதிராகக் களமிறங்கும் நவீன சீதைகள்#BanTasmac

தாசில்தார், வாகனத்தை விட்டு இறங்கினார். டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அவர் வந்திருந்தார். மக்களின் கோபமான கோஷங்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் நினைத்தார். ஆனால், திடீரென ஒரு பெண் தன் குழந்தைகளோடு, தாசில்தாரின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தார். ‘‘ஐயா! எப்படியாவது இந்தக் கடையை மூடிடுங்க... உங்களுக்குப் புண்ணியமாப் போகும்’’ எனக் கூக்குரல் எழுப்பியபடி காலடியில் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்து தாசில்தார் நிலைகுலைந்து போனார். கூடியிருந்த கூட்டம் கண்கலங்கி நின்றது. சேலம் மாவட்டம் மேச்சேரி கண்ட, உணர்ச்சிக் கொந்தளித்த சம்பவம் இது!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, அவற்றைக் குடியிருப்புப் பகுதிகளில் திறப்பதால், மக்கள் மத்தியில் ஆளும்கட்சி மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேச்சேரியில் இருந்த டாஸ்மாக் கடை இப்படி மூடப்பட்டு, மேச்சேரிக்கு அருகில் உள்ள எரகுண்டப்பட்டி காட்டுவளவு குடியிருப்புப் பகுதியில் புதிய கடை திறக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் போராடி வந்தார்கள். அவர்களிடம் மேட்டூர் தாசில்தார் பேசச் சென்றபோதுதான், சீதா என்ற பெண், தன் குழந்தைகளோடு தாசில்தார் கால்களில் விழுந்து கதறி அழுதார்.

‘‘எங்கள் கண்ணீரில்தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்!’’

இதுபற்றி சீதாவிடம் பேசியபோது, ‘‘என் அப்பா சாராயம் குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா,  எங்க அம்மா அழுவாங்க. அதைக் குழந்தையில் இருந்து பார்த்திருக்கேன். ஆனா, அதன் பாதிப்பு பற்றி எதுவும் தெரியாது. எனக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே என் கணவர் குடிக்க ஆரம்பிச்சார். ஒரு கட்டத்தில மதுவுக்கு அடிமையாகி வேலைக்குப் போகாம மனநலம் பாதிக்கப்பட்ட மனுஷனைப்போல கிடந்தார். அவருடைய சிந்தனை முழுசும், அடுத்த வேளை யாரிடம் பணம் வாங்கிக் குடிக்கலாம்னே இருக்கும். நான் குழந்தைகளுக்குப் பால் வாங்க வெச்சிருந்த பணத்தைக்கூட எடுத்துட்டுப் போய்க் குடிச்சுட்டு வந்துடுவார். நானும், குழந்தைகளும் பட்டினியா அழுதுக்கிட்டு இருப்போம். உண்மையில என் வீட்டுக்காரர் நல்ல மனுஷன். ஆனா, என் தாலியை வெச்சுக் குடிக்கும் அளவுக்கு வெறியராக மதுதான் அவரை மாத்திடுச்சு.

குடியை மறக்கச் சொல்லி அவரிடம் அழுவேன். ‘குடிக்கலைன்னா இறந்துடுவேன்’னு அவரும் அழுவார். ‘மது அருந்திக் கேவலமா வாழறதைவிட, நாம எல்லோரும் தூக்கு மாட்டிச் செத்துப் போகலாம்’னு குழந்தை களோட சாகவும் துணிஞ்சோம். அப்புறம்தான் என் வீட்டுக்காரர், ‘இனி குடிக்க மாட்டேன்’னு சத்தியம் செஞ்சார். அவரோடு நானும் 20 நாட்கள் அன்ன ஆகாரம் இல்லாம இருந்து, மதுவைத் தொடாமப் பாத்துக்கிட்டேன். மூணு வருஷம் ஆகுது. இப்ப நானும், என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போய், ரெண்டு குழந்தைகளையும் நல்லா படிக்கவைக்கிறோம்.

எங்க நிம்மதியைக் குலைக்கிற மாதிரி இப்ப எங்க வீட்டுக்கு எதிரிலேயே டாஸ்மாக் கடை வருவதா சொன்னாங்க. இதைக் கேள்விப் பட்டதும், நெஞ்சில் நெருப்பு விழுந்ததுபோல இருந்துச்சு. எங்க ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து இரவு, பகலா போராட்டம் செஞ்சுக்கிட்டிருந்தோம். பேச்சுவார்த்தைக்காக தாசில்தார் வந்திருந்தார். நானும் என் குழந்தைகளும் தாசில்தார் காலில் விழுந்து கதறி அழுதோம். ‘இந்தப் பகுதிக்கு நிச்சயம் டாஸ்மாக் மதுக்கடை வராது’னு அவர் உறுதி அளிச்சுட்டுப் போனார். அதையும் மீறி இங்கு கடை வந்துடும்னு சொல்றாங்க. மதுவால் என்னைப்போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. எங்க மகளோட படிக்கிற மூணு குழந்தைகளுக்கு அப்பா கிடையாது. காரணம், மதுதான். எங்கள் கண்ணீரில்தான் உங்கள் அரசாங்கத்தை நடத்தணும்னு நினைச்சா, கண்ணீருக்குப் பதிலா உயிரையே தர நாங்க தயார்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘எங்கள் கண்ணீரில்தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்!’’

சீதாவின் கணவர் பிரகாஷ், ‘‘நான் நண்பர்களோடு விளையாட்டா குடிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல போதைக்கு அடிமை ஆகிட்டேன். என் பொண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் சாவதற்குத் துணிந்ததால் இப்ப குடிப்பதில்லை. இப்ப எங்க வீட்டுக்கு எதிரிலயே டாஸ்மாக் கடை வரப்போறதா சொல்றாங்க. நாம விட்டாலும் அது நம்மை விடாதுபோல’’ என்றார். 

மேட்டூர் தாசில்தார் வீரப்பனிடம் பேசினோம். ‘‘மேட்டூர் தாலுக்கா முழுவதும் எந்த இடத்தில் டாஸ்மாக் கடை வைத்தாலும் மக்கள் போராட்டம் செய்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் உயர் அதிகாரிகள் விரைவில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கச் சொல்கிறார்கள். எங்கள் மீது குற்றம் சுமத்துவது தவறு’’ என்றார்.

இந்தத் திரவத் தீ இன்னும் எத்தனை பேர் வாழ்வை எரிக்கப் போகிறதோ தெரியவில்லை?

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி