Published:Updated:

‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’

‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’

இறப்பிலும் வெடித்த பவர் பாலிடிக்ஸ்

ஜெயலலிதா மரணத்தையடுத்து சசிகலா குடும்பத்தில் அடுத்தடுத்து பரபர நிகழ்வுகள். சசிகலா சிறை சென்றது, தினகரன் மீதான வழக்குகளின் விசாரணை, தினகரன் - திவாகரன் மோதல் என தொடரும் சம்பவங்களுக்கு இடையே, இப்போது சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமிக் கோயில், பிராமணர் அல்லது பசுவைக் கொன்றால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்புத் தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு ஒரு வாசல் வழியே சென்று பிரம்மஹத்தியை அங்கே விட்டு விட்டு,  மறுவாசல் வழியே வெளியேறுவது தான் ஐதீகம். கடந்த 15-ம் தேதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு, மகாதேவன் தனது ஆதரவாளர்களுடன் கிழக்கு வாசல் வழியே கோயிலுக்குள் சென்றிருக்கிறார். பெரிய பிரகாரத்தை வலம் வந்ததும் பிரம்மஹத்தி சந்நிதியில் தோஷம் நீக்கும் பரிகார பூஜையைச் செய்திருக்கிறார். அதன்பின் 27 நட்சத்திர சந்நிதியில் சதய நட்சத்திர லிங்கத்துக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபடும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’

உடன் இருந்தவர்கள் அவரைத் தூக்கி சேரில் அமரவைத்தபோது, ‘‘எனக்கு படபடப்பா இருக்கு’’ என்று திணறியபடி சொன்னார். உடனடியாகக் கோயிலுக்குள் காரைக் கொண்டுவந்தவர்கள், கோயிலில் அவர் நுழைந்த அதே கிழக்கு வாசல் வழியாக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மகாதேவனின் நாடித்துடிப்பு குறைந்துகொண்டே வந்ததால், உடனடியாக கும்பகோணம் கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்த... தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார்.

மகாதேவன் இறந்த செய்தி திவாகரனுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தஞ்சை பரிசுத்தம் நகரிலுள்ள மகாதேவன் வீட்டுக்குக் கதறி அழுதபடி வந்தார். வரிசையாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிப் பிரமுகர்கள் வந்து மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அவரது மகன் மிதன் கலந்துகொண்டார். ரெய்டு சிக்கலில் மாட்டியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வரவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’

தினகரன் நேராக மகாதேவன் வீட்டுக்கு வராமல், புதுக்கோட்டை சாலையிலுள்ள டாக்டர் வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பிறகுதான் மாலை 6.00 மணியளவில் வந்தார். அவர் வீட்டுக்குள் நுழைந்ததுமே திவாகரன் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, வெளியில் வந்து அமர்ந்துவிட்டார். மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்திய தினகரன், வீட்டில் ஓர் அறையில் இருக்க, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தினகரனையும் திவாகரனையும் தனித்தனியே சந்தித்துவிட்டுச் சென்றனர்.

இந்த மரணம், தினகரனையும் திவாகரனையும் ஒன்றுசேர்த்துவைக்கும் என எதிர்பார்த்த சசிகலா குடும்பத்தினருக்கு, இறப்பு வீட்டில் வெளிப்பட்ட இவர்கள் இருவரின் செயல்பாடுகள் அதிர்ச்சியளித்தன. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், “திவாகரன் உட்பட சசிகலா உறவினர்கள் யாரும் நேரடியாக எந்த அமைச்சரையும் தொடர்புகொள்ளக்கூடாது எனத் தடுத்திருக்கிறார் தினகரன். அப்படி யாராவது செய்தால், அதை உடனடியாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கட்சியிலும் ஆட்சியிலும் தான் தினகரனால் அலட்சியப்படுத்தப்படுவதாக திவாகரனுக்குக் கோபம். இங்கும் அதுதான் நடக்கிறது” என்று வருத்தப்பட்டார்.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன்தான் மகாதேவன். சிறு வயது முதலே யாரையும் மரியாதையின்றி ஏகவசனத்தில் பேசியே வளர்ந்தவர். எடுத்தவுடன் அடித்துவிடும் அளவுக்குக் கோபக்காரர். சபாரி உடை அணிந்த ஆட்களுடன்தான் எங்கும் வலம் வருவார். மன்னர் போல் பெரிய சிம்மாசனத்தில்தான் அமருவார். பிரம்பு, சாட்டையெனக் கையில் கிடைத்ததை எடுத்துப் பின்னிவிடுவார். கைத்துப்பாக்கியுடன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்வார். ஏகப்பட்ட புகார்கள் இவர் மேல் உண்டு.

‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’

ஆரம்பத்தில் சசிகலா, வினோதகன் பெயரில்தான் ‘வினோ வீடியோ விஷன்’ என்ற கடையை நடத்தி வந்தார். அந்த அளவுக்கு வினோதகன் மீது பாசம். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி தொடக்கத்திலேயே வினோதகன் இறந்துவிட்டார். ‘அப்பா இல்லாத பிள்ளை’ என மகாதேவன் மீது தனி அக்கறை காட்டி வந்தார் சசிகலா. ஜெயலலிதா தலைமையில் மகாதேவன் திருமணம், தஞ்சாவூரில் தடபுடலாக நடந்தது. அதுவரை சாதாரண ஆளாக இருந்த மகாதேவன், சசிகலா குடும்பத்திலேயே அடாவடியான ஆள் எனக் குறுகிய காலத்தில் பெயரெடுத்தார். 

வீட்டைவிட்டு எங்கே வெளியே சென்றாலும், சகுனம் பார்த்துவிட்டுத்தான் செல்வார். இதனால், ஜெயலலிதா தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய கோயில்களில், தனக்கான சிறப்புப் பரிகார பூஜைகளை மகாதேவன் மூலமே செய்துவந்தார். அம்மா பேரவையின் மாநிலச் செயலாளர் பதவியையும் அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஆனால், இவரது அடாவடிப் போக்குகள் ஜெயலலிதாவின் காதுக்கு வரவே, பதவியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.

மகாதேவனிடம் இருந்த ஒரே நல்ல பழக்கம், நிறைய ஆலயங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்ததுதான். கோயில் நிகழ்ச்சியென யார் வந்து கேட்டாலும் பணத்தை வாரி இறைத்திருக்கிறார். திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் குஷ்யமண்டப படித்துறையை, சுமார் 60 லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்துத் தந்திருக்கிறார்.

மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த, சசிகலா நிச்சயம் பரோலில் வருவார் என எதிர்பார்க்கப் பட்டது. மகாதேவன் இறப்பு குறித்த தகவல் அறிந்து, சிறையில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார் சசிகலா. இறப்புத் தகவலோடு, திவாகரன் - தினகரன் மோதல், டாக்டர் வெங்கடேஷ் புறக்கணிப்பு விஷயங்களும் சசிகலாவுக்குத் தெரியவர... “இதற்காகவா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேன். துக்கத்தில்கூட சேராதவர்கள், இனி எப்போது சேரப்போறாங்க?” என வேதனையோடு சொன்னாராம்.

‘பிரம்மஹத்தி தோஷமும்... மகாதேவன் மரணமும்!’

ஞாயிறு காலை மகாதேவன் உடல், மாரிக்குளம் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இடுகாட்டில் போடப்பட்ட பந்தலில் தினகரனும் திவாகரனும் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தனர். நடராசன் வந்தபோது அமைச்சர்கள் எழுந்துநின்று இடம் கொடுத்தனர். தயங்கியபடியே, ‘‘வாங்க மாமா உட்காருங்க’’ என்று தினகரன் சொல்ல, அவர் பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்தார். 

அமைச்சர்கள் இறுதி மரியாதை செலுத்த வந்தபோது, யாரையெல்லாம் படமெடுக்க வேண்டும் என்பதை ஜெயா டி.வி கேமராமேனுக்கு இளவரசியின் மகன் விவேக் கண்களால் சைகை செய்தார். குறிப்பாக திவாகரனின் படம் தவிர்க்கப்பட்டது. இறுதிச்சடங்கை மகாதேவனின் தம்பி தங்கமணி செய்ய, உடல் தகனம் செய்யப் பட்டது. அதன்பின் அங்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு திவாகரனை அழைத்தார்கள். ஆனால், அவர் வரவில்லை. சடங்குகள் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போன பிறகே டாக்டர் வெங்கடேஷ் வந்தார்.

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பூஜைகளை மகாதேவன் ஏன் செய்தார் என்பதும், துக்க வீட்டில் நிகழ்ந்த மோதல்களும்தான் மகாதேவனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் முக்கிய செய்தி.

- மு.இராகவன், ஏ.ராம், கே.குணசீலன்
படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்