Published:Updated:

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

ஜூ.வி லென்ஸ்

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

மிழக அரசின் ஒட்டுமொத்த கடனையே அடைத்துவிட முடிகிற அளவுக்கு வளங்கள், திறந்த கடற்கரையில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அதிலிருந்து கோடிகளில் கிடைக்கும் வருமானம், சிலரின் கஜானாவுக்கு மட்டுமே போகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சகல மட்டங்களிலும் இதற்கு ஆதரவு. ‘தாதுமணல் கொள்ளை’ என பரபரப்பாகப் பேசப்படும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

தமிழகத்தின் தென் மாவட்டக் கடற்கரைப் பரப்பில், கோடிகளை அள்ளித் தரும் கனிமங்கள் அடங்கிய மணல் கொட்டிக் கிடக்கிறது. கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் உள்ளிட்ட கனிமங்கள் அடங்கிய மணல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதிகளில் பெரும் பரப்பில் உள்ளது. அங்கு புகுந்து விளையாடும் குறிப்பிட்ட சிலர், மிகப் பெரிய கோடீஸ்வரர்களாகவும், அசைக்க முடியாத ஆதிக்க சக்திகளாகவும் அரசியல் செல்வாக்கோடு வலம் வருகிறார்கள். 

‘‘குமரி மாவட்டத்தின் மிடாலத்தில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரை உள்ள சுமார் 150 கி.மீ நீளக் கடற்கரைதான், இந்தத் தொழிலின் முக்கியக் களம். தாது மணலில் இருந்து கார்னெட் உள்ளிட்ட தாதுக்களைப் பிரித்து எடுக்கும் தொழிலில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபர் வைகுண்டராஜனின் குடும்பத்தினர் பல வருடங்களாகக் கோலோச்சி வருகின்றனர்’’ என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்.

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வைகுண்டராஜனின் தொழில் போட்டியாளரான தயாதேவதாசின் இண்டியன் கார்னெட் சாண்டு கம்பெனி மற்றும் சதர்ன் எண்டர்பிரைசஸ், தங்கராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் இண்டியன் ஓசன் கார்னெட் சாண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் உள்ளன. மொத்தம் ஒன்பது நிறுவனங்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், கார்னெட் ஏற்றுமதி செய்வதாக தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் 30 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். தாதுமணலைப் பிரிக்கும் ஆலைகளே இல்லாமல், ஏற்றுமதியை மட்டும் ஏராளமான நிறுவனங்கள் எப்படிச் செய்கின்றன என்பது கலால் துறையினருக்கே வெளிச்சம்.

மத்திய அரசுக்குச் சொந்தமான ‘இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்’ நிறுவனமும் கார்னெட் தொழில் செய்கிறது. இதற்காக அந்த நிறுவனம் பல இடங்களில் மணலை எடுத்து, கார்னெட் குறித்த ஆய்வு செய்கிறது. ‘‘அதிக அளவில் கார்னெட் இருக்கும் இடங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கில் செலவுசெய்து நடத்தப்படும் இந்த ஆய்வின் முடிவுகள், உடனுக்குடன் தனியார் கைகளுக்குச் சென்று விடுகின்றன. அதைவைத்து, தனியார் நிறுவனங்கள் அந்த இடங்களை எல்லாம் வளைத்துவிடும். அதையும் மீறி அரசு நிறுவனம் சில இடங்களைக் குத்தகை எடுத்துவிட்டால், அதனைச் சுற்றிலும் இருக்கும் தனியார் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து தொழில் நெருக்கடியைக் கொடுப் பார்கள்’’ என்கிறார்கள் அதிகாரிகள்.

யாரும் நுழைய முடியாத அளவுக்கு, குறிப்பிட்ட பகுதியை அடியாட்கள் பலத்துடன் தங்களின் ஆக்டோபஸ் பிடியில் வைத்துள்ளனர். ‘‘இவர்களின் விதிமுறை மீறல்கள், அடாவடிகள் குறித்து போலீஸில்கூட புகார் செய்ய முடியாது. இந்தப் பகுதியில் செயல்படும் காவல்நிலையங்கள், கனிமவளக் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன’’ எனச் சொல்லி அதிர வைக்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

ஒருவருடைய நிலத்தில் கார்னெட் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பது தெரியவந்தால், அந்த நிலத்தைக் குத்தகைக்குக் கேட்கும் நிறுவனங்களுக்கு மறுபேச்சு இல்லாமல் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த நிலத்தின் உரிமையாளர், அவரது நிலத்துக்குள்ளேயே செல்ல முடியாத வகையில், தடுப்பு அமைத்து செக் போஸ்ட் போடப்படும். 24 மணி நேரமும் காவலுக்கு ஆள் நின்று, நெருக்கடி கொடுப்பார்கள். காவல் நிலையம் சென்றால், அங்கும் மிரட்டப்படுவார்கள்.

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

அரசின் புறம்போக்கு நிலங்களில் தாது மணல் இருந்தால், அந்த நிலத்தை அரசிடமிருந்து மணல் ஆலைகள் குத்தகைக்கு எடுக்கின்றன. சில இடங்களில், 100 ஏக்கர் நிலம், ஆண்டுக்கு ரூ.16.47 என்கிற சொற்பத் தொகைக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கனிம ஆலை நிறுவனங்களை மட்டும் யாரும் கட்டுப்படுத்துவதே கிடையாது. அதனால், இவர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தாதுமணலை அள்ளிக் குவிக்கிறார்கள்.

உவரி உள்ளிட்ட சில இடங்களில், மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டு உள்ள தூண்டில் வளைவுகளைத் தகர்த்து எறிந்து விட்டு, விதிமுறைகளை மீறி கடலுக்குள் மணல் அள்ளப்பட்ட அவலமும் நடைபெற்று இருக்கிறது. கனிமங்களைப் பிரித்து எடுத்துவிட்டு, பின்னர் கழிவு மணல் கடலுக்குள் கொட்டப் படுவதால் மீன்வளம் குறைந்துவிட்டதாக மீனவர்கள் குமுறுகின்றனர். கார்னெட் உள்ளிட்ட கனிமங்களைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், மீண்டும் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் சில இடங்களில் கடல், ரத்தம் பாய்ந்தது போல் சிவப்பு நிறமாகக் காட்சி தருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் தொழில்செய்ய முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. நிலத்தடி நீரும் மாசடைந்து இருப்பதால், சொந்த நிலம் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத துயரம்.

ஆட்சிக்கு யார் வந்தாலும், அவர்களுடன் தாது மணல் ஆலை அதிபர்கள் நெருக்கமாகிவிடுவார்கள். அதிகாரிகளுடனும் அது போலவே! இந்தக் கொள்ளையை முதலில் அம்பலப்படுத்தியவர், ஆசிஷ்குமார் ஐ.ஏ.எஸ். 2013-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆசிஷ்குமார், தாதுமணல் ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். பொதுமக்களின் புகார்களை விசாரிக்கக் குழுக்களை அமைத்தார். அந்தக் குழுவினர், வேம்பாறு, வைப்பாறு பகுதிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது, வி.வி.மினரல்ஸ் நிறுவனம், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.39 மெட்ரிக் டன் தாதுமணலைக் கூடுதலாக அள்ளியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட அன்று இரவே, ஆசிஷ்குமார் அதிரடியாக மாற்றப்பட்டார்.

மாறுதலாகிச் செல்வதற்கு முன்னர் ஆசிஷ்குமார், அரசுக்கு இது தொடர்பாக அறிக்கை அனுப்பினார். அதில், ‘விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது’ என்பதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணைக் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

இதற்கிடையில், நிலவியல் நிபுணரான விக்டர் ராஜமாணிக்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெஞ்ச் முன்பு பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், ‘தென் தமிழகத்தின் கடற்கரைப் பகுதி மணலில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள தாதுக்கள் சுரண்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மணல் மாஃபியாவுடன் கைகோத்து செயல்படுவதால், நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றன. எனவே, இது குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடக்கும்போதே, விக்டர் ராஜமாணிக்கம், வழக்கை வாபஸ் பெற முன்வந்தார். அப்போது, தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் அவரிடம், ‘‘எதற்காக வழக்கிலிருந்து விலகுகிறீர்கள்? யாரிடம் இருந்தாவது அச்சுறுத்தல் வந்ததா?” எனக் கேள்விகளை எழுப்பினார். ஆனால், அவர் விலகிக்கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தார். இதனால், இந்த வழக்கை உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரணை நடத்த முடிவுசெய்தது. இது தமிழக அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

‘தாது மணல் குவாரிகளை முறைப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிகை என்ன? சட்ட விரோத மணல் குவாரிகளைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் என்ன?’ என அடுக்கடுக்கான கேள்விகளை உயர் நீதிமன்றம் கேட்டதால், அதனைச் சமாளிக்கும் வகையில் 2015 ஜூலை 27-ம் தேதி, தமிழக அரசின் தொழில்துறை சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மணல் குவாரிகள் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அளவிலான கமிட்டி, மாவட்ட அளவிலான கமிட்டி மற்றும் தாலுக்கா அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டன. ‘இந்தக் கமிட்டிகள் சட்ட விரோதக் குவாரிகள் குறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.

சுரங்கக் குத்தகை ரத்துசெய்யப்பட்ட 2013-க்குப் பிறகும் கனிம ஏற்றுமதி நிற்கவில்லை. நெல்லை மாவட்ட கலெக்டராக வந்த கருணாகரன், இந்த நிறுவனங்கள்மீது கிடுக்கிப்பிடி போட்டார். இதன்பின், அனைத்து ஆலைகளையும் இயக்காமல் நிறுத்துமாறு ஆலை நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதைப் பற்றிக் கவலைப்படாத ஆலை நிர்வாகத்தினர், தொடர்ந்து கனிம ஆலைகளை இயக்கினர். 

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

தற்போது அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்கொத்திப் பாம்பாக ஆலைகளைக் கண்காணித்துவரும் சூழலில்கூட, துணிச்சலாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கார்னெட் ஏற்றுமதி செய்ய வி.வி மினரல்ஸ் நிறுவனம் செய்த முயற்சி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு 420 மெட்ரிக் டன் கார்னெட் ஏற்றுமதிசெய்ய வி.வி. மினரல்ஸ் நிறுவனம் அனுமதி கேட்டு, துறைமுக சுங்கத் துறைக்கு விண்ணப்பித்தது. கனிம ஏற்றுமதிக்கு கலெக்டர் அனுமதி அளித்துள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அனுமதிக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே நெல்லை மாவட்ட ஆட்சியர், ‘கனிம ஏற்றுமதிக்கு அனுமதி இல்லை’ எனத் தெரிவித்துக் கடிதம் அனுப்பி இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கடிதம் சுங்கத் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால், சுங்கத் துறை உதவி ஆணையர் அமித்குமார், மார்ச் 13-ம் தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். அதில், ’கனிம ஏற்றுமதிக்கு நீங்கள் அனுமதி அளித்துள்ளதாக கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் கையெழுத்து சந்தேகமாக இருப்பதால் இந்த விளக்கத்தைக் கேட்கிறோம். அந்தக் கடிதம் நீங்கள் அனுப்பியதுதானா?’ எனக் கேட்டிருந்தார்.

இந்தக் கடிதம் கலெக்டர் ரவிக்குமார் கைகளுக்குச் செல்லாமல் இடைமறிக்கப்பட்டு இருக்கிறது. மறுநாளே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் பெயரில் ஒரு கடிதம் சுங்கத் துறைக்கு அனுப்பப்பட்டது. அதில், ‘420 டன் கார்னெட் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து நான் கடிதம் கொடுத்து இருந்தேன். அந்தக் கடிதம் உண்மையானதுதான்’ என அதில் இருந்தது. ஆனால், அந்தக் கடிதத்தில் மாவட்ட ஆட்சியரின் முத்திரை எதுவும் இருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரி, மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுதான், கலெக்டர் ரவிக்குமாருக்கு தனது பெயரில் ஃபோர்ஜரி செய்து அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்ட விவரமே தெரிந்திருக்கிறது. இந்த மோசடியில் கனிம நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தூத்துக்குடி கனிமவளத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ண மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களில் உள்ள கனிம ஆலைகளின் குடோன்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 15 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. 

தறிகெட்ட தாதுமணல் கொள்ளை... விசாரணை வளையத்தில் வி.வி.மினரல்ஸ்!

‘தீவிர கண்காணிப்பு இருக்கும் சூழலில், இதுபோன்ற விதிமுறைகளைச் செய்யத் துணியும் ஆலை நிர்வாகங்கள், எந்த கண்காணிப்பும் இல்லாத காலகட்டத்தில் எத்தகையை விதிமுறை மீறல்களைச் செய்திருக்கும்?” எனச் சந்தேகத்தைக் கிளப்புகிறார், வைகுண்டராஜனுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அவருடைய அண்ணன் குமரேசன்.

‘‘கனிம ஆலைகள், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வந்திருக்கின்றன. இவர்களின் குத்தகை இடங்களையும் ஏற்றுமதியையும் கணக்கிட்டாலே, எந்த அளவுக்கு விதிமுறை மீறல் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கனிம ஆலைகள் மூலமாக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தாது மணல் என்கிற பெயரில், தடை செய்யப் பட்ட மோனோசைட்டைக் கூட இவர்கள் ஏற்றுமதி செய்து இருப்பார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆலை நிர்வாகங்கள் பணத்துக்காக சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மோனோசைட் ஏற்றுமதிசெய்து, நமது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருந்திருப்பார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது. சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த விவகாரத்தில் முழு உண்மையையும் வெளிக் கொண்டு வர முடியும். அது விரைவில் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று அவர்  படபடத்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் அக்கறை காட்டுவது இருக்கட்டும். மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன?

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

சட்டவிரோத ஏற்றுமதி ரூ.40,000 கோடி!

வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில புள்ளிவிவரங்களைச் சேகரித்து இருக்கிறார். அதன்படி, அக்டோபர் 2013-க்குப் பின்னர் மே 2016 வரையிலான காலகட்டத்தில், சட்ட விரோதமாக தூத்துக்குடி துறைமுகம் வழியாக கனிமங்களை ஏற்றுமதி செய்தது தெரிய வந்துள்ளது. ஆலைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டு இருந்த இந்தக் காலத்தில் மட்டும், 15 லட்சம் மெட்ரிக் டன் கார்னெட்டும் இல்மனைட்டும் ஏற்றுமதி செய்யப்
பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

சர்வதேச சந்தையில் கனிமங்களின் விலை

கார்னெட் (1டன்) - ரூ 9,600 முதல் ரூ18,000 வரை

ரூட்டைல் (1டன்) - ரூ42,000 முதல் ரூ.51,000 வரை

இல்மனைட் (1டன்) - ரூ. 98,000 முதல் ரூ.1,65,000 வரை

சிர்கான் (1டன்) - ரூ.72,000 முதல் ரூ.1,05,000 வரை