Published:Updated:

இலங்கை விவகாரம் - இலவச சிகிச்சை அளித்து டாக்டர்கள் நூதன ஆதரவு (படம்)

இலங்கை விவகாரம் - இலவச சிகிச்சை அளித்து டாக்டர்கள் நூதன ஆதரவு (படம்)
இலங்கை விவகாரம் - இலவச சிகிச்சை அளித்து டாக்டர்கள் நூதன ஆதரவு (படம்)
நெய்வேலி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவே தகித்துக் கொண்டிருக்கையில், நெய்வேலி ஏரியாவில் உள்ள டாக்டர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி, வித்தியாசமான முறையில் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கை விவகாரம் - இலவச சிகிச்சை அளித்து டாக்டர்கள் நூதன ஆதரவு (படம்)
இலங்கை விவகாரத்தில் லயோலா கல்லூரி மாணவர்கள் கொளுத்திப்போட்ட போராட்ட நெருப்பு பல்வேறு பரிமாணங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் கலப்பில்லாமல் தன்னெழுச்சியாக நடக்கும் இந்த போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நெய்வேலி வட்டார அகில இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர்கள் நேற்று ஒருநாள் மட்டும், தங்களிடம் சிகிச்சைக்காக வந்த வெளி நோயாளிகளுக்கு சிகிச்சைக் கட்டணம் வாங்காமல் இலவச சிகிச்சை அளித்திருக்கிறார்கள். 
நெய்வேலி, மந்தாரகுப்பம், வடலூர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இப்படி நூதன முறையில் இலங்கை போராட்டங்களுக்கு  தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
##~~##
இதுகுறித்து நம்மிடம் பேசிய‌ அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் நெய்வேலி கிளை துணைச் செயலாளர் துரைச்செல்வன், ''சிகிச்சைக்கு  வந்த‌ நோயாளிகளிடம் சிகிச்சை கட்டணம் வேண்டாம் என்று சொன்னதற்கு  'ஏன்?' என்று திகைப்புடன் கேட்டார்கள். அப்போது, இலங்கையில் நடந்திருக்கும் அட்டூழியங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதை கண்டிக்கும் விதமாக நடக்கும் போராட்டங்களில் நீங்கள் குடும்பத்துடன் கலந்துக்கணும். உங்களுடைய பகுதிகளில் நீங்களே போராட்டங்களை முன்னின்று நடத்தணும்னு சொல்லி துண்டுப் பிரசுரங்களை மட்டும் கொடுத்து அனுப்பினோம். நேற்று மட்டும் சுமார் பத்தாயிரம் பேரிடம் எங்களது  இந்த பிரசாரம் போய் சேர்ந்திருக்கு. நல்ல வரவேற்பு இருப்பதால் இதே பாணியில் எங்களது இலங்கை தமிழர் ஆதரவு போராட்டங்களை தீவிரபடுத்த முடிவு செய்திருக்கிறோம்" என்று சொன்னார்.
போராட்டங்கள் ஜெயிக்கட்டும்.
செய்தி& படம்: கரு.முத்து