Published:Updated:

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...
பிரீமியம் ஸ்டோரி
மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

அரசுக்குத் திரும்புமா ரூ.25 ஆயிரம் கோடி?

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

அரசுக்குத் திரும்புமா ரூ.25 ஆயிரம் கோடி?

Published:Updated:
மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...
பிரீமியம் ஸ்டோரி
மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

ஒரு லாரிக்கு 220 ரூபாய் என்ற கூலிக்கு மணலை லாரியில் ஏற்றிவிட்ட சேகர் ரெட்டிக்கு, தமிழகம் முழுவதும் 1.35 கோடி ரூபாய் தினமும் வசூல் ஆகி இருக்கிறது. அதாவது, ஆண்டுக்கு சுமார் 492 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், மூன்று யூனிட் மணலை 900 ரூபாய்க்கு விற்பனை செய்த தமிழக அரசுக்கு இதைவிட நான்கு மடங்குக்கும் அதிகமான வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஆண்டுக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டும்தான் கிடைத்தது. இதுதான் மணல் விற்பனை செய்த தமிழக பொதுப்பணித் துறையின் ‘நிர்வாகத் திறமை’. கண்ணுக்குத் தெரிந்து நடந்தது இந்த அளவுக்கு மோசடி என்றால், கடந்த 12 ஆண்டுகளாக தெரியாமல் நடந்த மோசடிகளால் இழந்தது எத்தனை ஆயிரம் கோடிகளோ?

இதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ‘‘மணல் குவாரிகள் அனைத்தையும் தமிழக அரசே இனி முழுமையாக நடத்தும்; அடுத்த மூன்று ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘மணல் குவாரிகளை முழுமையாக அரசே ஏற்று நடத்துவது சாத்தியமா?’ என்பது குறித்து விவரிக்கிறார் ‘தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த சம்மேளன’த்தின் தலைவர் பன்னீர்செல்வம்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

பொதுப்பணித் துறையின் கீழ்!

‘‘தனியாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த ஆற்று மணல் விற்பனையை, கடந்த 3.10.2003 முதல் தமிழக அரசின் பொதுப்பணித் துறை, தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இரண்டு யூனிட் மணல், ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. வங்கி வரைவோலை மூலம் இந்தப் பணம் அரசாங்கத்துக்கு நேரடியாகச் சென்றது. 19.6.2004 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இரண்டு யூனிட் மணல் விலையை ஆயிரம் ரூபாயில் இருந்து 600 ரூபாயாகக் குறைத்தார். லாரிகளில் மூன்று யூனிட் மணல் எடுத்துச் செல்லவும் அனுமதித்தார். மணல் எடுக்கும் பகுதியின் வளர்ச்சிக்காக, மொத்த மணல் வருவாயில் 28 சதவிகிதத்தை தமிழக அரசு, உள்ளூர் கிராம வளர்ச்சிக்காக கொடுத்தது. மணல் அள்ளிப்போடும் பொக்லைன் எந்திரங்களை லாரி உரிமையாளர்களே ஏற்பாடு செய்தனர். இதற்கு அரசு, வாடகைக் கட்டணம் தரும் என முடிவு செய்யப்பட்டது.

காலப்போக்கில், இந்த வாடகைக் கட்டணத்தைத் தருவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கு அரசிடம் இருந்து சரியான பதில் இல்லை. எனவே, மணல் அள்ளிப்போடும் தொழிலில் இருந்து மணல் லாரி உரிமையாளர் சங்கங்கள் படிப்படியாக விலகின. 2005-ம் ஆண்டு கோவை ஆறுமுகசாமி இந்தத் தொழிலுக்கு வந்தார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த காலம் அது என்பதால், பொதுப்பணித் துறை நடத்திய மணல் தொழில் படிப்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தனியார் வசம் போனது. ரவுடிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மாமூல் கொடுக்கும் கீழ்த்தரமான சூழ்நிலை உருவானது.

பெயரளவில்தான் பொதுப்பணித் துறை மணல் விற்பனை செய்கிறது என்றாலும், மறைமுகமாக கோவை ஆறுமுகசாமி, கே.சி.பழனிசாமி என்று கைகள் மாறி, அந்தத் தொழில் சேகர் ரெட்டி கட்டுப்பாட்டுக்குள் வந்து நின்றது. தொழிலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் பல ஆயிரம் கோடி சம்பாதித்தனர். அரசுக்குத்தான் இழப்பு. தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில், லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி, உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும். சட்டப்படி, முறையாக நடத்தினால் மணல் தொழில் மூலம் அரசுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 20,000 கோடி முதல் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அரசு கஜானாவும் நிரம்பும்’’ என்றார்.

அ.தி.மு.க தொடங்கியது... தி.மு.க தொடர்ந்தது!

‘சிவில் இன்ஜினீயர்ஸ் ஃபோரம்’ பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ‘‘மணல் விற்பனையின் அத்தனைச் சீரழிவுகளுக்கும் லோடிங் முறைதான் காரணம். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியோடு, லாரிகளின் கொள்ளளவு உயரத்தைத் தாண்டி மணல் எடுக்கப்பட்டது. அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக, அதாவது மூன்றரை யூனிட் மணலுக்கு 2,000 ரூபாய் என வசூல் செய்யப்பட்டது. இதில் அரசுக்குச் சேர வேண்டிய 900 ரூபாய் போக மீதம் லோடிங் செய்தவர்களுக்குப் போனது. லாரிகளின் எண்ணிக்கைகளிலும் மிகப் பெரும் அளவில் குறைத்துக் காட்டப்பட்டது.

ஒரு குவாரிக்கு, ஒரு நாளைக்குத் தேவைப்படும் லோடுகளின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, லோடிங் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது விரைவாகப் பணி நடைபெற உதவி செய்வது போலத் தோன்றும். ஆனால், எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு மணல் கொள்ளையடிக்க இது மிகச் சிறந்த வழி. இதுபோன்று லோடிங் கான்ட்ராக்டை மொத்தமாக ஒரே நபரிடம் ஒப்படைத்து, அவர் குறிப்பிடும் வெவ்வேறு பெயர்களில் தரப்பட்டு, கொள்ளை அடித்தனர்.

2006-ம் ஆண்டு தேர்தலின்போது, தி.மு.க-வின் முக்கிய வாக்குறுதியே ‘மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும்’ என்பதுதான். ஆனால், ஏற்கெனவே இருந்த மணல் கொள்ளையர்களை மாற்றிவிட்டு வேறு நபரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். கே.சி.பழனிசாமி சரி வர இயங்கவில்லை என்று, மீண்டும் ஆறுமுகசாமிக்கே மணல் குவாரி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. அந்த நபர் இந்த முறை, தனது லாரிகளை மட்டுமே உள்ளே அனுப்பி மணலை ஏற்றிவந்து ஆற்றின் நுழைவில் அதைச் சேமித்து, மணல் வேண்டும் லாரிகளுக்கு அந்தச் சேமிப்புக் கிடங்கில் இருந்து மணலை ஏற்றிவிட்டார். இதற்கு விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் முற்றிலுமாக அவரிடமே இருந்தது. ‘செகண்ட் சேல்’ என்கிற இரண்டாம் விற்பனை முறைக்கு ஒரு அரசாணை, 2011-ம் ஆண்டு ஜனவரியில் இயற்றப்பட்டது. அவரது லாரிகள் தவிர வேறு எவரும் ஆற்றில் சென்று பொதுப்பணித் துறையிடம் மணல் பெற முடியாது. இந்தக் கொள்ளை முறையை இப்போது தடுக்க வேண்டும்’’ என்கிற பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன எம் சாண்ட் பற்றியும் பேசினார்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

எம் சாண்ட் போதுமா?

‘‘மணலுக்கான மாற்று என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.  முக்கியப் பணிகள் அல்லது தொழில்நுட்பரீதியாகக் கட்டாயமாக மணல் பயன்படுத்த வேண்டிய இடங்களைத் (பூச்சு வேலை) தவிர்த்து, எளிய கட்டுமானங்களுக்கு (நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள்) மணலுக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்தலாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம் சாண்ட் (M SAND) எனப்படும் தயாரிப்பு மணல் பற்றி பேசியுள்ளார். இது கற்களைச் சிறிய துகள்களாக ஒரே சீரான அளவில் உடைப்பதாகும். அவர் சொல்வதுபோல எம் சாண்ட் பயன்பாடு மெள்ள, மெள்ள உயர்ந்து மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும் என்பதற்கான சாத்தியமே இல்லை. ஏனென்றால், மணலுக்கான ஒரே மாற்றாக இங்கு எம் சாண்ட் மட்டும் இருப்பதுதான்.

இதுதவிர பித்தளைக் கழிவுகள், இரும்பாலைகளில் இருந்து கிடைக்கும் இரும்புத்துகள் கழிவுகள், அனல்மின் நிலைய சாம்பல், பழைய கட்டடங்களின் இடிப்புக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். எம் சாண்ட் தயாரிக்கத் தேவைப்படும் கற்களும் இயற்கை வளம்தான். கல் அரவைக்கு மின்சாரமும், டீசலும் தேவை. சுற்றுச்சூழலும் மாசுபடும். எனவே, ஆற்று மணல் விற்பனையை முற்றிலுமாக நிறுத்துவது என்பது இயலாத காரியம். மணல் குவாரிகளை முறைப்படுத்தினாலே மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும்; இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும்” என்கிறார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: தே.சிலம்பரசன், கே.ஜெரோம்

முறைகேட்டைத் தடுக்க யோசனைகள்!

மிழக அரசு நிஜமாகவே மணல் கொள்ளையைத் தடுக்க நினைத்தால் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் தரும் யோசனைகள் இங்கே...

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

மணல் குவாரிகளை முறைப்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் மாநில அளவிலான ‘மணல் வாரியம்’ அமைத்து, அவரின் நேரடிக் கண்காணிப்பில் மணல் தொழிலை நடத்த வேண்டும்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

மணல் வாங்க டி.டி. மட்டுமே ஏற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக பணம் பெறக்கூடாது.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

மணல் லாரிகளில் மட்டுமே மணலை அனுமதிக்க வேண்டும். நேஷனல் பெர்மிட் லாரிகளில் மணல் ஏற்றக் கூடாது.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதை முற்றிலுமாகத் தடைசெய்ய வேண்டும்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

மணல் எடுக்கும் இடங்களில் கிராம அபிவிருத்திக்கு தரப்படும் ராயல்டியை  முறைப்படுத்த வேண்டும்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

மணல் குவாரிகளில் உள்ள இரண்டாம் விற்பனைமுறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

ஒவ்வொரு லாரியும் அரசிடம் இருந்தே நேரடியாக மணல் பெற வேண்டும்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

அரசு ஒப்புதல் அளிக்கும் குவாரிகள் குறித்து வெளிப்படையான அறிவிப்பு வேண்டும். அதில் குவாரியின் பரப்பளவு, தோண்ட அனுமதிக்கப்பட்டுள்ள ஆழம், இயங்கும் கால அளவு ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி...

பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, தொழில்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணல் லாரி உரிமையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை ஒவ்வொரு மணல் குவாரிகளிலும் அமைக்க வேண்டும்.