Published:Updated:

சென்னையில் 4, மதுரையில் 2 மேம்பாலங்கள்: தமிழக அரசு

சென்னையில் 4, மதுரையில் 2 மேம்பாலங்கள்: தமிழக அரசு
சென்னையில் 4, மதுரையில் 2 மேம்பாலங்கள்: தமிழக அரசு

சென்னை: சென்னையில் ரூ.271 கோடியில் 4 பெரு மேம்பாலங்களும், மதுரை காளவாசலிலும், கோரிப்பாளையத்திலும் ரூ.130 கோடியில் 2 மேம்பாலங்களும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 4, மதுரையில் 2 மேம்பாலங்கள்: தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

4,974 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், 10,764 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், 46,279 கிலோ மீட்டர் நீளமுள்ள முக்கிய மற்றும் இதர மாவட்டச் சாலைகளைக் கொண்ட தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பு நமது நாட்டிலேயே நீளமான அமைப்புகளில் ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக, இந்தச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் தேவைகளின் உயர்வைக் கருத்தில் கொண்டு, 2012-2013 ஆம் ஆண்டில் 5,615.71 கோடி ரூபாயாக இருந்த நெடுஞ்சாலைத் துறைக்கான நிதியொதுக்கீட்டை, 2013-2014 ஆம் ஆண்டில் 6,452.77 கோடி ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. படிப்படியாக சாலைகளின் தரத்தை உயர்த்தவும், வலுப்படுத்தவும் இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

2013-2014 ஆம் ஆண்டில், 168 கிலோ மீட்டர் நீளமுள்ள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள் இருவழித்தட சாலைகளாகவும், 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒருவழித்தட முக்கிய மாவட்டச் சாலைகள், இடைவழித் தடங்களாகவும், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்படும். இதுமட்டுமன்றி, 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2,032 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. 77. 2012-2013 ஆம் ஆண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்களை அமைக்கவும், 211.60 கோடி ரூபாய் செலவில் 433.72 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளைப் புதுப்பிக்கவும், இந்த அரசு அனுமதியளித்துள்ளது.

2013-2014 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் உதவியுடன் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொள்வதற்காக 191.60 கோடி ரூபாயும், பாலங்கள் அமைக்கும் பணிகளுக்காக 233 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொள்ளாச்சி உபகோட்டத்தில் சோதனை அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தமுறை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

##~~##
விரைவாகப் பயணம் செய்வதற்கு புறவழிச் சாலைகளும், மாநகர வட்டச் சாலைகளும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. தற்போது 28 புறவழிச் சாலைகளும் மூன்று வட்டச் சாலைகளும் அமைப்பதற்காக 436.08 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை கிழக்குக் கடற்கரைச்சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் 2013-2014 ஆம் ஆண்டில் தொடங்கி செயல்படுத்தப்படும். சென்னை மாநகரப் போக்குவரவு மற்றும் போக்குவரத்துஆய்வுப் பரிந்துரைகளின் அடிப்படையில், 2013-2014 ஆம் ஆண்டில் சென்னை மாநகரத்தில் 271.68 கோடி ரூபாய் செலவில் நான்கு பெரு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
இதுபோன்றே, 2013-2014 ஆம் ஆண்டில் மதுரை நகரத்தில் உள்ள காளவாசலிலும், கோரிப்பாளையத்திலும் 130 கோடி ரூபாய் செலவில் இரண்டு மேம்பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.