Published:Updated:

மேட்டூர் அணைத் திறப்பு தாமதம்... சம்பா சாகுபடி பாதிக்கும்! - பரிதவிக்கும் விவசாயிகள்

மேட்டூர் அணைத் திறப்பு தாமதம்... சம்பா சாகுபடி பாதிக்கும்! - பரிதவிக்கும் விவசாயிகள்

மேட்டூர் அணைத் திறப்பு தாமதம்... சம்பா சாகுபடி பாதிக்கும்! - பரிதவிக்கும் விவசாயிகள்

மேட்டூர் அணைத் திறப்பு தாமதம்... சம்பா சாகுபடி பாதிக்கும்! - பரிதவிக்கும் விவசாயிகள்

மேட்டூர் அணைத் திறப்பு தாமதம்... சம்பா சாகுபடி பாதிக்கும்! - பரிதவிக்கும் விவசாயிகள்

Published:Updated:
மேட்டூர் அணைத் திறப்பு தாமதம்... சம்பா சாகுபடி பாதிக்கும்! - பரிதவிக்கும் விவசாயிகள்

ருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து இன்று காவிரித் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் சம்பா பருவத்துக்குப் பலனில்லாமல் போய்விடத்தான் வாய்ப்பு இருக்கும் என விவசாயிகள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டின் உணவுமண்டலமான காவிரிப் பாசனப்பகுதியில் முப்போகமும் நெல் பயிரிடல் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஆனியில் தொடங்கும் குறுவைப் பயிரிடல், ஆடி கடந்து, ஆவணி முடியும்போதோ புரட்டாசி தொடக்கத்திலோ முடிவடையும். வாய்ப்புள்ள இடங்களில் குறுவைச் சாகுபடியை அடுத்து உடனடியாக அந்தப் பயிர்களின் அறுக்கப்பட்ட அடித்தாளுடன் சேர்த்து உழவு ஓட்டி, தாளடிப் பருவப் பயிர்ச்செய்கை தொடங்கப்படும். தாளடிச் சாகுபடி முடியும்போது தை மாதத்தில் அறுவடைக்கு முன்னர் களித்தன்மை கொண்ட மண்ணில் உளுந்து பயிரிடப்படும்; பனிப்பருவத்தின் ஈர நைப்பிலேயே அது வளர்ந்து கணிசமான விளைச்சல் கிடைக்கும். 

தாளடிச் சாகுபடியானது மிகவும் குறைந்துவரும்நிலையில், காவிரி டெல்டா பகுதியில் குறுவையைவிட்டால் சம்பாதான் என்று ஆகிப்போனது. ஒரு போகம் மட்டும் விளைவிப்பவர்கள் பெரும்பாலும் சம்பா சாகுபடிதான் செய்கிறார்கள். இவர்கள் ஆடிப் பட்டம் விதைத்தால் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஐந்து மாதங்கள் முடிந்து தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியான காவிரி டெல்டாவின் தன்மையில், ஜூன் 12-ம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவதானது ஆனி தொடக்கமாக இருக்கும். இந்தத் தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் சென்றடைவதற்கு ஒரு வாரம் ஆகிவிடும் என்றாலும், குறுவைச் சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும். காவிரியாற்று நீரை கர்நாடகம் திறந்துவிடாமல் பிரச்னை செய்யத் தொடங்கியதை அடுத்து, டெல்டாவின் நெடுங்காலப் பயிர்ச்செய்கை முறையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 
கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரி நீரைப் பெறமுடியாதநிலையில் அண்மைக்காலமாகப் பல ஆண்டுகளில் மேட்டூர் அணையை தமிழக அரசு ஜூன் 12 அன்று திறப்பதில்லை. சில முறை செப்டம்பர் வரைக்கும் தாமதம் ஆனதும் உண்டு. இந்த ஆண்டு ஜூலை 19 மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் நீரைத் திறந்துவிடுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். 

``இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியநிலையில், நாளை காலை அணை திறக்கப்படும்போது ஏறத்தாழ அணை நிரம்பும்நிலை உள்ளது" எனக் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த 16-ம் தேதியன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ``காவிரிப் படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு பாசனத்துக்கும் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்தமுடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

பொதுவாக அணைத் திறப்பு குறித்த முதலமைச்சர் அறிவிப்புகளில், குறிப்பிட்ட பரப்பு பாசனப்பகுதி பயனடையும் எனும் விவரமும் அளிக்கப்படும். இந்த அறிக்கையில் அப்படியான விவரம் எதுவும் இல்லை. இந்நிலையில் இவ்வளவு தாமதமாகத் திறக்கப்படும் காவிரி நீரால் சம்பா பருவத்துக்குப் பயனில்லை என்கிறார்கள், விவசாயிகள் தரப்பில். 

``காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் ஆழ்குழாய் பாசனம் மூலம் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படும் தண்ணீர் இந்த ஒரு லட்சம் ஏக்கருக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, சம்பா சாகுபடிக்கு எந்த விதத்திலும் உதவாது. சம்பா சாகுபடிப் பணிகளை இப்போது தொடங்கினால், பிறகு அக்டோபர்வாக்கில் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி பயிர்கள் வீணாகும்” என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.  

``முதலமைச்சரே டெல்டா பகுதியில் 700 நீர்நிலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் பெரும்பாலும் தூர்வாரப்படவே இல்லை. ஆறுகளும், வரத்துவாய்க்கால்களும் தண்ணீர் செல்லமுடியாத அளவுக்குப் புதர் மண்டிக் கிடக்கிறது. ஏரி, குளங்களும் செடிகள் மண்டியும் மண்மேடிட்டும் இருக்கின்றன. தூர்வாரவேண்டுமென்று மூன்று மாதங்களாகக் கத்திக்கொண்டிருக்கிறோம். மாநில அரசு இதைச் சுத்தமாகக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அரசு மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறது. இன்னொரு பிரச்னை, காவிரியில் அதிகப்படியான வெள்ளம் வரும்போது நீரைத் தேக்கிவைக்கமுடியாமல், கொள்ளிடம் வழியாகத் திறந்துவிட்டு ஒரு முறை ஒரே நாளில் இரண்டு டி.எம்.சி. நீர் கடலில் வீணாகப் போனது.

அது போன்று நிகழாமல் தடுக்க, காவிரியில் பதினாறு கதவணைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அறிவித்து, பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்கு இந்த ஆட்சி ஒன்றும் செய்யவில்லை; அறிவித்த ஜெயலலிதாவின் சமாதியைக் கட்ட ரூ.50 கோடி செலவுசெய்கிறார்கள். பக்கத்து மாநில அரசுகள் செய்யும் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, நீர் மேலாண்மையில் இரு கட்சிகளின் ஆட்சிகளும் பெரும் தோல்வியைக் கண்டுள்ளன” எனப் பக்கச்சார்பில்லாமல், பாசன நீர்ப் பாதுகாப்பு பற்றிய அக்கறையை வெளிப்படுத்துகிறார், விவசாயிகள் சங்கச் செயலாளர் பெ.சண்முகம். 

சோறுடைத்த சோழவள நாட்டைக் காயவைப்பதிலிருந்து ஆள்பவர்களும் ஆண்டவர்களும் மீட்க முயன்றால், அது பயன்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism