Published:Updated:

குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்

குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்

சஸ்பெண்டுக்கு பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்

குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்

சஸ்பெண்டுக்கு பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்

Published:Updated:
குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்

புதுச்சேரியில் கொலைகள் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கொலைக் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்ததாக போலீஸ் எஸ்.பி ஒருவரே சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைவிடக் கொடுமை இந்த போலீஸ் அதிகாரி, சிறந்த பணிக்காக ஜனாதிபதி விருது பெற்றவர் என்பதுதான்.

புதுச்சேரியில் அதிகரித்துவரும் தொடர் கொலைகள், ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளின் அராஜகங்கள் பற்றி ‘புதுச்சேரி இப்போது கொலைச்சேரி’ என்ற தலைப்பில் 17.5.17  தேதியிட்ட  ஜூ.வி இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக, புதுச்சேரி மேற்கு எஸ்.பி-யான தெய்வசிகாமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வில்லியனூரை அடுத்த திருபுவனையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான வேலழகன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ஏப்ரல் 19-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரியை உலுக்கிய இந்தக் கொலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், இந்தக் கொலைக்குப் பின்னணியில் போலீஸ் அதிகாரிகள் இருப்பதாகப் பகிரங்கப் புகார் கிளம்பியது. அதனால், திருபுவனை காவல் நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கு உடனடியாக மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார், மூன்றே நாள்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, சிவராமன், ரமேஷ், செங்கதிரவன், உதயகுமார் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக, எஸ்.பி-யான தெய்வசிகாமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா எஸ்.பி? - புதுச்சேரி பயங்கரம்

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். “தொடர் கொலைகளால் காங்கிரஸ் ஆட்சி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. வேலழகன் கொலை நடந்த இரண்டாவது நாளே, அந்தக் கொலைக்கும் தெய்வசிகாமணிக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல் வந்துவிட்டது. அந்த எஸ்.பி-யே விசாரித்தால், வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என்றுதான், உடனடியாக சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். இந்தக் கொலைக்கு முன்பும் பின்பும் கொலையாளிகளுடன் தொடர்ச்சியாக தெய்வசிகாமணி போனில் பேசி வந்துள்ளார். குறிப்பாக, கொலை நடந்த அன்றே நான்கைந்து முறை பேசியிருக்கிறார். அவர்களுக்கு எஸ்.பி என்னவெல்லாம் சொன்னார், எப்படி உதவினார் என விசாரித்து வருகிறோம்” என்றனர்.

அவர்களே மேலும், “எஸ்.பி தெய்வசிகாமணி, யார் ஆட்சிக்கு வந்தாலும், சட்டம் ஒழுங்குப் பிரிவைக் கேட்டு வாங்கிக்கொள்வார். இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமப் பகுதிகளில் குற்றங்கள் அனைத்தும் கொடிகட்டிப் பறக்கும். ஏரியாவில் ரியல் எஸ்டேட்காரர்கள் யார் புதிதாக மனைப்பிரிவு போட்டாலும், அதில் இவருக்கு ஒரு பிளாட் என்பது வாய்மொழி உத்தரவு. ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் சம்பளப் பணத்தில் கள்ளநோட்டு இருந்த விவகாரம், இவர் செய்த காரியங்களால் அப்படியே அமுங்கிப்போனது. ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்பது மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அனைத்து வழக்குகளும் ‘சந்தேக மரணம்’ என்றே பதியப்பட்டுள்ளன. அவை குறித்து முறையான விசாரணை எதுவும் இல்லை. புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த 10 கொலைகளில், ஐந்து கொலைகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்த கிராமப் பகுதிகளில்தான் நடந்துள்ளன” என்று பட்டியல் போட்டனர்.

பெயர் செல்ல விரும்பாத மற்றொரு காவல் துறை அதிகாரி, “ஏராளமான சொத்துகளை தெய்வசிகாமணி சேர்த்துள்ளார். இவருக்கு கரிக்கலாம்பாக்கத்தில் சினிமா தியேட்டர் ஒன்றும் உள்ளது. அங்கு, போலீஸ்காரர்களை டிக்கெட் கிழிக்க வைத்துள்ளார். அடிதடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரவுடி ஒருவனை, நேராக ஸ்டேஷனுக்கே சென்று புகார் குறித்து எழுதப்படும் ஜி.டி என்ட்ரியைக் கிழித்துப் போட்டுவிட்டு அழைத்துச் சென்றுள்ளார். குற்றவாளிகளுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அவர் கைது செய்யப்படுவது உறுதி. இந்த விவகாரத்தில், பல அதிகாரிகளுக்குப் பணமும் கை மாறியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஏஜென்டாக இருந்த ஒரு போலீஸ் அதிகாரியும் விரைவில் சிக்க இருக்கிறார்” என்றார்.

“தெய்வசிகாமணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், போராட்டத்தில் இறங்குவோம்” எனத் திராவிடர் விடுதலைக் கழகப் புதுச்சேரி தலைவர் லோகு.ஐயப்பன் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க தெய்வசிகாமணியைத் தொடர்புகொண்டோம். “துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். காரணம் தெரியவில்லை. எனவே, இதைப்பற்றி இப்போது எதுவும் கூறுவது சரியாக இருக்காது” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தெய்வசிகாமணி சஸ்பெண்ட் பற்றி  கருத்து தெரிவித்த கவர்னர் கிரண் பேடி, “குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததால்தான், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது” என்றார்.

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்