Published:Updated:

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

Published:Updated:
சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

‘முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்’ தமது கூர்மையான ராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பெளத்த வெசாக் தின நிகழ்வுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது சிங்கள ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் அர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைத்து, இலங்கை-இந்திய உறவெனும் அரூபத்துக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர், அந்த வரலாற்றுத் துயரம் குறித்த சிறுசொல்லைக்கூட எங்கும் உதிர்க்கவில்லை. காலம் காலமாக இந்திய எதிர்ப்புவாதத்தின் பெயரால் சிங்களர்கள் கொன்ற ஈழத்தமிழர்களின் உரிமைப் பிரச்னையைத் தற்போதைய இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை என்பதைத்தான் மோடியின் இந்த மவுனம் உணர்த்துகிறதா? புவியியல் ரீதியாக கேந்திர முக்கியம் கொண்ட ஈழத்தமிழர்களை, தீண்டத்தகாத ஒரு இனமாகவே இந்தியப் பெருநாடு இன்னும் பார்க்கிறதா?

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

சீனாவில் நடந்த பட்டுப்பாதைக் கூட்டத்தொடரை இந்தியா நிராகரித்திருந்த சூழலில், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதல் இருக்கை வழங்கப்பட்டிருக்கிறது. மோடியை இலங்கைக்கு அழைத்து, அடுத்த நாளே சீனாவோடு கைகுலுக்கினார் ரணில். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலத்திலிருந்தே சீனாவோடு சிங்களத் தலைவர்களுக்கு இருக்கும் உறவு ஆழமானது. அந்த உறவின் நிமித்தம் இந்தியாவுக்கு எழும் கோபத்தை, காட்சிமயமாக்கும் வைபவ அரசியலில் காணாமல் செய்து விடுவதில் சிங்களர்கள் வல்லவர்கள். அதுவே மோடியின் பயணத்தில் நிரூபணமாகி இருக்கிறது. இந்திய மக்களிடம் இருக்கும் இலங்கை மீதான எதிர்ப்பையும் மிக லாவகமாகத் தோற்கடித்து விடுகிற இந்த வித்தை, அவர்களின் அரசியல் கலாசாரத்தின் நீட்சி. கூடவே, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா திரும்பிவிடக்கூடாது என்கிற பதற்றம். மொத்தத்தில், இந்தியாவை அணைப்பது போல் அணைத்துக்கொண்டே, சீனாவை முத்தமிடும் நகர்வு.

மோடி விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கொழும்பில் எழுந்தன. மகிந்த ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி அணியின் உறுப்பினர்களில் ஒருவரான விமல் வீரவம்ச, மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதை ‘எதிர்க்கட்சியின் எதிர்ப்பு’ என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. ‘இந்தியத் தலைவர் ஒருவரின் வருகையை எதிர்க்கும் அளவுக்குச் சிங்கள அரசியலாளர்கள் இருக்கிறோம்’ என்பதையே விமல் வீரவம்ச மூலம் இந்தியாவுக்கு உணர்த்த விரும்பியது இன்றைய இலங்கை அரசாங்கம். ஆனால், மகிந்தவைச் சந்தித்து இந்தியாவுக்கு வரும்படி தனிப்பட்ட ரீதியாக அழைப்பு விடுத்தார் மோடி. இந்த அரசியல் சாணக்கியத்தில் மகிந்த - மைத்திரி என இரண்டாக உடைந்து நிற்கும் இலங்கை சுதந்திரக்கட்சி ஒன்றாகிவிடுகிறது. ஒரு தேரை பின்நின்று தள்ளுபவர்களுக்கும் முன் நின்று இழுப்பவர்களுக்கும் எப்படி இலக்கு ஒன்றோ, அதுபோலவே மோடியை அழைக்கவும் செய்தனர்; எதிர்க்கவும் செய்தனர். இந்திய ஆதிக்கத்திற்கு எதிராக, தான் நிகழ்த்தும் நாடகத்தில், இந்தியத் தலைவர்களையே பாத்திரமாக்கிவிடும் சிங்கள ராஜதந்திரத்தை இந்தியாவும் உணர்வதாக இல்லை.

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை!

‘நல்லிணக்க அரசு’ என்கிற ஜோடனையின் கீழே, தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் சைவ வழிபாட்டுத்தலங்களை இடித்து அழிக்கும் அநீதியும், ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த வேளையில் தமிழ்த் தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு முதன்மையோ முக்கியத்துவமோ பெறவில்லை. சர்வதேச பிரச்னையின் ஓர் அம்சமாக மாறியிருக்கும்  ஈழத்தமிழ் அரசியலை,   இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தின் பிரதானமான இந்திய நாடு தவிர்த்தோடவே முடியாது. இந்தப் பிராந்தியத்தில் தனது நேச சக்தியான ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காக இந்தியா செயல்படவேண்டிய கட்டாயத்தைக் காலம் உருவாக்கி இருக்கிறது.

வெறிகொண்டவர்கள் கையினால், புத்தன் போதித்த அமைதியும் சமாதானமும் குத்திக் கிழிக்கப்பட்ட நிலையில் உள்ளது இலங்கை. இங்கு சிங்கள பெளத்த பிக்குகள் வெறும் மதத்தலைவர்கள் அல்ல, இலங்கை அரசை நிர்வகிப்பவர்கள். தமிழர்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் சட்டரீதியாக நெறிப்படுத்துபவர்கள். இந்திய ஆதிக்கத்தின் நீட்சியாகவும் இந்துக்களாகவும் ஈழத்தமிழர்களை உருக்காட்டி, ‘அவர்களைக் கொல்வது சொர்க்கத்துக்குச் செல்லும் வழி’ என்று சிங்களர்களுக்குப் போதிப்பவர்கள். பௌத்த மரபின்படி மன்னனுக்கு எழுந்து நிற்காத புத்த பிக்குகளை ஒரு இந்துவான மோடி சிரத்தையோடு வணங்கினார். இந்தியாவை வெறுத்து ஒதுக்கும் வரலாற்றின் கசப்புகளோடு, ஒரு இந்தியத் தலைவரை சிங்கள பிக்குகள் எதிர்கொண்டார்கள். சிங்களப் பாரம்பர்யத்தில் கூர்மையானதாகக் கடைப்பிடிக்கப்படும் இந்திய எதிர்ப்புவாதத்தோடு மோடியை அவர்கள் கடந்தார்கள். ஈழத்தமிழ் மக்களோ, ‘இந்தியப் பிரதமர் தமது பிரச்னைக்குத் தீர்வாக என்ன கூற இருக்கிறார்’ என எதிர்பார்த்தார்கள். அதுவும் வெறுங்கனவாய் கலைந்தது.

இந்நிகழ்வு வரைக்கும் ஈழத்தமிழ் மக்களின் கையில் இந்தியா தந்திருக்கிற பரிசுக்கு நிரந்தமான பெயருண்டு. ‘ஏமாற்றம்’.

- அகரமுதல்வன்

மோடியின் தலைக்குள் தமிழக அரசியல்!

னியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் வரியை, இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் அட்டனில் நடந்த மக்கள் கூட்டத்தின்போது மோடி சொன்னதும்... தமிழில் தனது உரையை ஆரம்பித்ததும்... திருக்குறளோடு உரையை முடித்ததும்... இலங்கையில் கடும்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களிடையே பெரும் பிரளயத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

இலங்கை தலைநகர் கொழும்பு வந்திருந்த மோடி, இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டம் ஒன்றில் இப்படி உரையாற்றியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. “இது என்ன இந்தியாவின் காலனியா? இன்னொரு நாட்டில் பொதுக்கூட்டம் ஒன்றில், ஒரு அரச தலைவர் எப்படி உரை நிகழ்த்தலாம்” என்று தீவிர சிங்களக் கடும்போக்கு அரசியல்வாதி உதய கம்மன்பில கேள்வி எழுப்பி உள்ளார்.

அது மட்டும் அல்ல... மோடியின் வருகைக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மோடி டீம், ராஜபக்சேவுடன் நடத்திய திடீர் சந்திப்பே இந்தக் குழப்பத்துக்குக் காரணம். நிகழ்ச்சி நிரலில் இப்படி ஒரு சந்திப்பு பற்றி குறிப்பு இல்லை. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபாலவின் இரவுபசார விருந்துக்குப் பின்னர், நள்ளிரவு 11 மணிக்கு ராஜபக்சேவைக் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் மோடி சந்தித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மகிந்த ராஜபக்சேவுடன் அவரது தம்பி கோட்டபயவும் சந்திப்பில் கலந்து கொண்டது இன்னும் உச்சகட்டம்.

“மோடி என்னவோ வெசாக் தின நிகழ்வுகளுக்குத்தான் வந்தார். ஆனால், சீனாவின் செல்வாக்கு நன்றாக இலங்கைக்குள் வேரூன்றி இருப்பதை, இங்கு வந்த பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கடல் நகரம் முதல் கட்டடங்கள் வரை தனது கண்ணூடாகவே கண்டு கொண்டார். இவை எல்லாவற்றுக்கும் ஒரு செக் வைக்கவே அவர் ராஜபக்சேவைச் சந்தித்தார்’’ என்கின்றன கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள். தேர்தலில் தோல்வியடைந்தாலும் ராஜபக்சேவின் அரசியல், சிங்கள மக்களிடையே வலுவாக உள்ளது. ‘நீங்கள் என்னுடன் சாதகமாக நடந்துகொள்ளாவிட்டால், நான் இவர்களையும் அரவணைக்க வேண்டியிருக்கும்’ என்ற செய்தியை இந்தச் சந்திப்பு சொல்வதாகக் கருதுகிறார்கள் சிங்களத் தலைவர்கள்.

ராஜபக்சேவின் இந்த நள்ளிரவு சந்திப்பு எப்படி ஏற்பாடானது, யார் ஏற்பாடு செய்தது என்பதற்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், மோடியின் ‘செக்’ எல்லாரையும் குலுங்க வைத்துள்ளது. அது மட்டுமில்லை, ‘தமிழகத்தின் எம்.ஜி.ஆரையும் தந்தது மலையக மண்தான்’ என்று தனது அட்டன் பொதுக்கூட்ட உரையில் மோடி சொன்னதும், தமிழக அரசியலை அவர் தன் தலைக்குள் வைத்திருப்பதையே உணர்த்துகிறது.

- சிவநேசன்