Published:Updated:

அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!
பிரீமியம் ஸ்டோரி
அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

Published:Updated:
அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!
பிரீமியம் ஸ்டோரி
அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!
அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

ங்கள் ஊருக்கு வரும் அரசுப் பேருந்தோ, அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையோ உங்கள் ஊரில் உள்ள ஏதோ ஒரு வங்கியில் அடமானத்தில் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடியுமா? பற்றாக்குறை பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் ஒருவர், கடன் சுமையைச் சமாளிக்க அண்டா குண்டாவைத் தூக்கிக்கொண்டு அடகுக்கடைக்கு ஓடுவார் அல்லவா? அப்படித்தான், நம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் தம்மிடம் இருக்கும் பேருந்து நிலையங்கள், பணிமனைகள் மற்றும் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் போன்றவற்றை அடமானம் வைத்து ‘வண்டி ஓட்டி’க் கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஏன்? பஸ் ரூட்டுகளையும், ஓட்டைப் பேருந்துகளையும்கூட அடமானம் வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

‘எங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத்தொகை 7 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுங்கள்’ எனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடங்கிய போராட்டம், இப்போது  தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முக்கால்வாசி அரசுப் பேருந்துகள் எந்தவிதப் பராமரிப்புமின்றி ‘சுந்தரா டிராவல்ஸ்’ கணக்காக இருக்கும் நிலையில், அரசுப் பேருந்துகள் எந்தப் பணத்தில் இயங்குகின்றன என்று மண்டைக்குள் கலவரம் வெடிக்கிறதா? ‘‘அடமானம் வைத்து கடன் வாங்கித்தான் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார், கோவையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலரான வழக்கறிஞர் லோகநாதன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அவர், தமிழகப் போக்குவரத்துக் கழகங்களின் அடமானக் கடன் கணக்கைக் கேட்டுவாங்கியிருக்கிறார். சில போக்குவரத்துக் கழகங்கள் கொடுத்த கணக்குகள் அட்டவணையாக இங்கே தரப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி பேசிய லோகநாதன், “2015-ம்  ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி இவ்வளவு கடன்கள். இந்நேரம் இந்தக் கடன் தொகைகளும் அவற்றுக்கான வட்டியும் பல மடங்கு அதிகரித்திருக்கும். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருக்கின்றன.  இவ்வளவு கடனோடு இயங்கும் நிறுவனத்தில், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஊழல்... ஊழியர்கள் நியமனத்தில் ஊழல்... என ஊழலுக்கு மட்டும் பஞ்சம் இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் என்றால், ‘மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று கவலைப்படுகிறோம். இப்படியே கடன் அதிகரித்து, அடமானத்தில் இருக்கும் சொத்துகளை வங்கிகள் ஜப்தி செய்துவிட்டால், அது அரசாங்கத்திற்கு அவமானம் இல்லையா.? இவ்வளவு கடனோடு இயங்கும் நிறுவனத்தை மீட்க, அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது.? தமிழகத்தில் ஓடும் அரசுப் பேருந்துகளில் முக்கால்வாசி, பயணிகள் செல்லவே லாயக்கு இல்லாதவை. அ.தி.மு.க அரசு, தி.மு.க அரசு என்று பாகுபாடெல்லாம் கிடையாது, கடந்த 20 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழகங்களின் நிலை இதுதான். 

இன்று தங்கள் சம்பளத்தையும், பாக்கியையும் கேட்டுப் போராடும் போக்குவரத்து ஊழியர்கள், ‘காலாவதியான பேருந்தைக் கொடுத்து ஓட்டச் சொல்கிறார்கள்’, ‘போஸ்டிங்கிற்கு லஞ்சம் வாங்குகிறார்கள்’, ‘தரமில்லாத ஸ்பேர் பார்ட்ஸை போட்டிருக்கிறார்கள்’ என்று எல்லாவற்றுக்கும் போராட வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப டிக்கெட் விலை உயர்த்தப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகம் ஒரு சேவை நிறுவனம். லாப நோக்கோடு செயல்பட முடியாதுதான். ஆனால், திவால் ஆகாமலாவது தடுக்க வேண்டுமல்லவா?’’ என்று கேட்கிறார்.

அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் மொத்தம் 22 ஆயிரம் பஸ்கள் ஓடுகின்றன. இந்தியா முழுக்க மொத்தம் 55 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இருக்கின்றன. அத்தனைக்கும் சேர்த்து ALL STATE ROAD TRANSPORT UNDERTAKING என்று ஒரு அமைப்பு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் எங்கே உதிரி பாகங்கள் வாங்க வேண்டும், என்ன தரத்தில் வாங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, போக்குவரத்துக் கழகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என வரையறை செய்வது வரை எல்லாமே அந்த அமைப்பின் பணிதான். அந்த அமைப்பு, ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு விருது வழங்கும். ‘ஒரு லிட்டர் டீசலில் எவ்வளவு கிலோ மீட்டர் ஓட்டுகிறார்கள்’, ‘ஒரு டயரை எத்தனை வருடம் பயன்படுத்துகிறார்கள்’, ‘எத்தனை பயணிகளுக்குச் சேவை வழங்கியிருக்கிறார்கள்’ என்பது போன்ற 12 பிரிவுகளில் அந்த விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும், இதில் எட்டு விருதுகளுக்குக் குறைவில்லாமல் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் வாங்குகின்றன. மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுவது நம்முடைய போக்குவரத்துக் கழகங்கள்தான். அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு இழப்பு என்பதுதானே உங்கள் கேள்வி?” என்று கேட்டவர், அதை விவரிக்க ஆரம்பித்தார்...

‘‘தமிழகத்தில் இயக்கப்படுகிற 22 ஆயிரம் பேருந்துகளில் 12 ஆயிரம் பேருந்துகள் வருவாய் குறைந்த வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பத்து பேருந்துகள் நகரங்களுக்கு இடையே ஓடி லாபகரமான கலெக்‌ஷன் கொண்டுவருகின்றன என்றால், அந்த மாவட்டத்தில் மலைக்கிராமங்களுக்குச் செல்லும் இரண்டு பேருந்துகள் அந்த லாபத்தை விழுங்கிவிடும். அப்புறம் எங்கிருந்து லாபம் கிடைக்கும்?

இது ஒரு சேவை நிறுவனம். சேவையில் லாப, நஷ்டம் பார்க்கக் கூடாது. அதனால்தான் இழப்பு என்கிறோம். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மொத்தமும் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு கோடி கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டப்படுகின்றன. 2 கோடி பேர் பயணிக்கிறார்கள். ஒரு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அப்படியென்றால், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதை அரசாங்கம் ஈடு செய்ய வேண்டும் இல்லையா? அதைச் செய்யாததுதான் பிரச்னை. 

ஒரு இலவச பஸ் பாஸுக்கான கட்டணம் ஒரு ரூபாய் என்றால், அதில் 44 பைசாவைப் போக்குவரத்துக் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் மீதம் உள்ள 56 பைசாவை அரசாங்கம் தர வேண்டும் அந்தத் தொகையையே அரசாங்கம் முழுதாக எங்களுக்குத் தருவதில்லை.

டீசல் விலை அடிக்கடி மாறும் நிலை வருவதற்கு முன்பு வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் ஓரளவுக்கு நல்ல நிலைமையில்தான் இருந்தன. சூப்பர் டேக்ஸ் கட்டிய வரலாறெல்லாம் உண்டு. இன்றைக்கு டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை, ஊழியர்களின் சம்பளம் என எல்லாமே உயர்ந்தாலும், பஸ் கட்டணம் மட்டும் பெரிய அளவில் உயரவேயில்லை. லாபமே ஈட்ட முடியாத நகரப் பேருந்துகள் அதிகமாகிவிட்டன. வருமானம் குறைந்த வழித்தடங்கள் அதிகமாகிவிட்டன. இலவசங்கள் ஒரு பக்கம் எனப் போக்குவரத்துக் கழகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டு இந்த நிலைக்கு வந்துவிட்டது.

அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!
அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்... அவமானத்தில் தமிழக அரசு!

இப்போது போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன். மீதம் உள்ள 7 ஆயிரம் கோடி ரூபாய் ஊழியர்களின் பணம். போக்குவரத்துக் கழகங்களுக்குத் தர வேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடித்ததோடு மட்டுமல்லாமல், ஊழியர்களுக்குச் சேர வேண்டிய பணத்தையும் தராமல் போக்குவரத்துக் கழகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது அரசாங்கம். ஆம், இது அரசு செய்யும் திருட்டு. ஊழியர்களின் பி.எஃப் பணத்தைக் கட்டாமல், அதை ஊழியர்களுக்கே தெரியாமல் செலவு செய்திருக்கிறது நிர்வாகம். ஓய்வு பெற்றவர்களுக்குத் தரப்பட வேண்டிய பணம் மட்டும் 1,692 கோடி ரூபாய்.

நிர்வாகச் சீர்கேட்டினாலும் அரசின் ஓரவஞ்சனையாலும்தான் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிலைமை. பேச்சுவார்த்தையின்போது, ‘திடீரென்று இவ்வளவு பணத்துக்கு அரசு எங்கே போகும்’ என்று கேட்கிறார்கள்? அவர்களின் பணத்தையா கேட்டோம்? திருடப்பட்ட எங்கள் பணத்தைக் கேட்டுத்தானே போராடுகிறோம்? அதை அரசாங்கம் உடனடியாகக் கொடுக்க வேண்டும். செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள இழப்புத் தொகையை அரசு சரியாக கொடுத்துக் கொண்டிருக்குமானால் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை யாராலும் அசைக்க முடியாது. இந்த அடமானத்துக்கும், அவமானத்துக்கும் அவசியமில்லை’’ என்றார்.

அரசுப் பேருந்துகளுக்கு நிரந்தரமாக ரெட் சிக்னல் விழுந்துவிடப்போகிறது, உஷார்!

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய் , வீ.சக்தி அருணகிரி

இன்ஷூரன்ஸும் ஜப்தியும்.!

ருக்கும் அத்தனை பேருந்துகளுக்கும் இன்ஷூரன்ஸ் செய்தால் பெரிய தொகையை இழக்க நேரிடும். எனவே, ‘விபத்துகள் ஏற்பட்டால் நாங்களே இழப்பீடு கொடுத்துக்கொள்கிறோம்’ என்று சொல்லி இன்ஷூரன்ஸுக்கு விதிவிலக்கு வாங்கியிருக்கின்றன, தமிழகப் போக்குவரத்துக் கழகங்கள். நல்ல நிதி நிலையில் இருந்தபோது, இழப்பீடு பணத்தை உடனே கொடுத்து பிரச்னையைத் தீர்த்தார்கள். இப்போது உள்ள நிதி நெருக்கடியால் விபத்துக்கான இழப்பீடுகளைப் போக்குவரத்துத் துறையால் வழங்க முடிவதில்லை. அதனால்தான், பல நீதிமன்றங்களில் அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நிற்கின்றன.