Published:Updated:

கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை!

கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை!
கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை!

கறுப்புக் கொடியுடன் தி.மு.க... காவி பலூனுடன் பா.ஜ.க... ஆளுநர் புதுக்கோட்டை வருகை!

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று அதிகாலை திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வருகைதந்த ஆளுநருக்கு, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், திருச்சியிலிருந்து கார் மூலம் புதுக்கோட்டை  சென்ற ஆளுநர், ரோஜா விருந்தினர் மாளிகைக்கு 6.45-க்கு வருகைதந்தார். அங்கிருந்து, அரசின் பணிகள்குறித்த ஆய்வை மேற்கொள்கிறார்.


இன்று காலை, அரசு அதிகாரிகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள்குறித்து ஆளுநர் ஆய்வு செய்ய இருப்பதாகவும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஜா இல்லத்தில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களிடம் மனுக்களைப் பெறுகிறார். 5 மணி அளவில், திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடக்கும் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

ஆளுநர் வருகையையொட்டி புதுக்கோட்டை - திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நகராட்சி சார்பில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மைப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, புதுக்கோட்டை நகர் முழுவதும் உள்ள சாலைகள், வீதிகள் கடந்த சில தினங்களாக சீரமைக்கப்பட்டுவருகின்றன. புதுக்கோட்டையில் பிரசித்திபெற்ற கோயிலான திருக்கோகர்ணம் பகுதியிலுள்ள அருள்மிகு பிரகதாம்பாள் கோயில் அருகே தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கோயிலுக்கு, ஆளுநரின் திடீர் வருகை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் வருகையையொட்டி தி.மு.க தரப்பில் கறுப்புக்கொடி காட்டுவதற்கான போராட்டத்துக்கு, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும், திருச்சி மண்டல காவல் துறை டி.ஐ.ஜி லலிதா லட்சுமியிடமும் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ரகுபதி, வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், டி.ஐ.ஜி லலிதா லட்சுமி, தடையை மீறி தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் புதுக்கோட்டை வரும் ஸ்டாலின், `ஆளுநர் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வரவில்லை" எனவும், திட்டமிட்டபடி தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, திமுகவினர் ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டினால், போலீஸாரால் கைதுசெய்யப்படுவோம் என எண்ணி  சிறைக்குச்செல்ல தயாராக வருகின்றனர். தடையை மீறி கறுப்புப் கொடி காட்டப்படும் என்று கூறிய தி.மு.க தொண்டர்களால் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதனால், அரசு  மகளிர் கல்லூரி சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாவட்ட எஸ்.பி-க்கள், 1500 போலீஸார் எனப் புதுக்கோட்டை நகரம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், தி.மு.க-வினர் ஆளுநரின் வருகைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், அவர்களின் வருகையை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க சார்பில் காவி கலர் பலூன்கள் பறக்கவிட்டு ஆதரவு தெரிவிக்க ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க இளைஞரணியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபன் இளங்கோவன், ஆளுநர் வருகையையொட்டி கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தயிருக்கும், தி.மு.க நிர்வாகிகளை முன்கூட்டியே கைதுசெய்யக்கோரி, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் தனது ஆதரவாளர்களுடன் புகார் கொடுத்ததால் கூடுதல் பரபரப்பு நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு