Published:Updated:

மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் விளையாட்டு!

மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் விளையாட்டு!

Published:Updated:
மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி
மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

த்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ்வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு, நேரு யுவ கேந்திரா. இதில் மாவட்ட அளவில் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டிய  ஒரு பதவிக்கு, தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வார்களா? அப்படி ஓர் அபத்தமான செயலை மத்திய அரசு செய்கிறது என்பதுதான் வேதனை. ‘‘அதுமட்டுமில்லை... செயல்படா தன்மை, காலியிடங்கள் நிரப்பப்படாதது என இந்த அமைப்பு, தாறுமாறாகச் சிதைந்து போயிருக்கிறது’’ எனப் புகார்ப் பட்டியல் நீள்கிறது.

இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தற்சார்புள்ள வாழ்க்கைக்கு வழிகாட்ட மத்திய அரசால் 1972-ல் தொடங்கப்பட்டது நேரு யுவ கேந்திரா அமைப்பு (என்.ஒய்.கே). இதன் செயல்பாட்டுக்கு என ஒவ்வோராண்டும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. மாவட்ட அளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவார்கள். சுகாதாரம், கல்வி சார்ந்த விழிப்பு உணர்வை உருவாக்கும் வகையில் போட்டிகள் நடத்துவது, இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சிகளை வழங்குவது, விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, தனிப்பயிற்சி மையங்களை உருவாக்குவது போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, மாணவர்களுக் கான கல்வி உதவித்தொகைகளையும் வழங்குகிறது இந்த அமைப்பு. உலக அளவில் மிகப் பெரும் இளைஞர் நெட்வொர்க் காக இருக்கும் நேரு யுவ கேந்திரா, அண்மைக்காலமாகப் பெரும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி சில கேள்விகளை எழுப்பி பெற்ற தகவல்கள், இந்த அமைப்பின் சீர்குலைவை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

1992-ம் ஆண்டுக்குப் பிறகு 24 வருடங்களாக இந்த அமைப்புக்கு ஊழியர்கள் நியமனம் செய்யப்படவே இல்லை. மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மட்டும் இந்திய அளவில் 623 பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால், 281 பேர் மட்டுமே இப்போது பணியாற்றுகிறார்கள். 688 கிளார்க் பணியிடங்களில் 222 இடங்கள் காலி. 18 மாநில இயக்குநர் பணியிடங்களில் ஏழு இடங்கள் காலி. நான்கு இயக்குநர் பணியிடங் களில் இருவர் மட்டுமே உள்ளனர். அக்கவுன்ட்ஸ் ஆபீஸர், நிர்வாக அதிகாரி, பிரிவு அதிகாரி, ஜூனியர் கம்ப்யூட்டர் புரோக்ராமர், நூலகர், தணிக்கையாளர், இளநிலைக் கணக்காளர் என பெரும்பாலான பணியிடங்கள் காலியாகத்தான் உள்ளன.

இந்தச்சூழலில், மாவட்ட அளவில் 300 திட்ட ஒருங்கிணைப் பாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது நேரு யுவ கேந்திரா. அந்த அறிவிப்பும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எஸ்.எஸ்.சி., யு.பி.எஸ்.சி என மத்திய அரசுக்குத் தேவையான அதிகாரிகளையும் ஊழியர்களையும் தேர்வு செய்ய பல அமைப்புகள் இருந்தும், இந்தப் பணியை அவுட்சோர்ஸிங் செய்து, ஆட்களைத் தேர்வுசெய்யும் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் வழங்கியிருக்கிறது அந்த அமைப்பு. இதற்காக டெண்டரும் கோரியுள்ளது மத்திய அரசு.

மூன்று வருடங்கள் சமூக சேவையில் அனுபவம் உள்ள, 25 முதல் 35 வயது வரையுள்ள பட்டதாரிகளை, டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கும். இந்தப் பணி, ஓராண்டுக்கானது. திறன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். மாதச் சம்பளம் முப்பத்தைந் தாயிரம் ரூபாய். நான்காயிரம் ரூபாய் பயணப்படி. டெண்டர் எடுக்கும் நிறுவனம், ஒரு மாவட்டத்துக்கு மூன்று பேர் வீதம் மொத்தம் 900 பேரைத் தேர்வு செய்து நேரு யுவ கேந்திராவுக்குப் பரிந்துரைக்கும். மூன்று பேரில் ஒருவரை, நேர்முகத்தேர்வு மூலம் நேரு யுவ கேந்திரா தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள். இந்தத் தேர்வுக்கான நடைமுறைகள் எதுவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எழுத்துத்தேர்வு எதுவும் இல்லை.   

மாவட்ட அளவில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளோடு இணைந்து பணியாற்றும் ஓர் அதிகாரி பொறுப்புக்கு இப்படி தனியார்மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைத் தேர்வுசெய்ய வேண்டிய நிலை ஏன் வந்தது? இதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி. “கோடிக்கணக்கான இளைஞர்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கும் நேரத்தில், இப்படிக் கொல்லைப்புற வழியாக ஆள் எடுப்பது அநியாயம். பணியாளர்களைத் தேர்வுசெய்யும் அரசு அமைப்புகள் மீதே குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் காலம் இது. தனியார் நிறுவனங்கள் கையில், ஊழியர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பைக் கொடுத்தால் அது முறைகேட்டுக்கே வழி வகுக்கும். இது நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடக்காது. பெரும் பணம் கைமாற வாய்ப்பிருக்கிறது. நேரு யுவ கேந்திராவில் எப்போதுமே அரசு விதிமுறைகளை வளைத்து, அவர்களுக்கு ஏற்றமாதிரி ஊழியர்களைத் தேர்வுசெய்து கொள்வார்கள். உள்நோக்கத்தோடு திட்டமிட்டு குறுக்கு வழியில் நியமனம் செய்யும் முயற்சி இது” என்கிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் பாலா.

நேரு யுவ கேந்திரா அகில இந்திய முன்னாள் துணைத் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், ‘‘நேரு யுவ கேந்திரா எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ, அந்தப் பாதையைவிட்டு விலகிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி நேரடியாக நேரு யுவ கேந்திராதான் பணி நியமனங்களைச் செய்து வந்தது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்புதான் இந்த டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினால், நான் அவர்களோடு நிற்பேன்” என்கிறார்.

மத்திய அரசு வேலைக்கு தனியார் நிறுவனம் ஆள் எடுக்கிறது! - ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி

நேரு யுவ கேந்திரா மீதான குற்றச்சாட்டுகள் பற்றி சென்னையில் மாநில இயக்குநர் பொறுப்பு வகிக்கும் சதீஷிடம் கேட்டோம். “இதுபற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. நான்கூட எங்கள் இணையதளத்தைப் பார்த்துத்தான் இப்படி நியமனம் நடக்கப்போவதைத் தெரிந்துகொண்டேன். இதுபற்றிய முடிவுகளை டெல்லியில்தான் எடுக்கிறார்கள். நீங்கள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும்” என்றார்.

டெல்லி, ஸ்கோப் மினாரில் உள்ள நேரு யுவ கேந்திரா தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். நம் கேள்விகளை அவர்கள் தொடர்ந்து தவிர்த்தபடி இருந்தனர்.

மக்கள்தொகையில் சரிபாதிக்கு மேல் இளைஞர்களைக்கொண்ட ஒரு தேசத்தில், இளைஞர்களின் நலனுக்காக மத்திய அரசு நடத்தும் ஓர் அமைப்பு சீர்குலைந்து கிடப்பதும், பணி நியமனத்தைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும் நியாயமில்லை. இதை மத்திய அரசு உணர வேண்டும். இல்லையெனில் இளைஞர்கள் உணர்த்துவார்கள்.

- சுஜிதா