Published:Updated:

“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”

“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”
பிரீமியம் ஸ்டோரி
“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”

மெரினாவில் கொந்தளித்த தமிழ் உணர்வாளர்கள்

“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”

மெரினாவில் கொந்தளித்த தமிழ் உணர்வாளர்கள்

Published:Updated:
“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”
பிரீமியம் ஸ்டோரி
“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”

ஜெயலலிதாவுக்கு இதில் உடன்பாடா இல்லையா என்றெல்லாம் தெரியாது... ஆனால், அவர் உயிரோடு இருந்தவரை எந்த இடையூறும் இல்லாமல், ஆண்டு தோறும் மே மாதத்தில் இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மெரினாவில் ஒன்றுகூடினார்கள்; முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மெழுகுவத்தி ஏந்தி அமைதியாக அனுசரித்தார்கள். ஆனால், ‘ஜெ ஆன்மாவின் வழிகாட்டுதல்படி நடக்கும் ஆட்சி’ என்று சொல்லும் இந்த அரசு, இந்த முறை மெரினாவில் தமிழ் உணர் வாளர்கள் ஒருவரைக்கூட அனுமதிக்க வில்லை. அனுமதி மறுத்தது மட்டுமல்ல... அஞ்சலி செலுத்த முயன்றவர்களைக் கைதுசெய்து வழக்கு களையும் பதிந்திருக்கிறது.

“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”

மெரினாவில் நடந்தது என்ன? 

‘மே 21-ம் தேதி மாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு அனுசரிப்பு’ என மே 17 இயக்கம் அறிவித்திருந்தாலும், காலை முதலே மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால், குடும்பம் குடும்பமாகச் சுற்றுலா வந்தவர்களையும் போலீஸார் விடாமல் விசாரிக்கத் தொடங்கினர். கறுப்புச் சட்டை அணிந்திருந்தவர்கள் மீதே போலீஸாரின் குறி இருந்தது. கறுப்புச் சட்டை அணிந்து வந்த இளைஞர்களை எந்த விசாரணையும் இல்லாமல், கைதுசெய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். சுற்றுலா வந்த இளைஞர்கள், “சார்... நாங்க சண்டேங்கிறதுனால சும்மா பீச்சுக்கு வந்தோம் சார்... இங்கு என்ன நடக்குதுன்னுகூட எங்களுக்குத் தெரியாது...” என்று கதறிப் பார்த்தனர். அந்த வார்த்தைகளைக் காதில் வாங்காமல், ‘கடமையைச் செய்தது’ காவல் துறை.

மாலை 5.30 மணி அளவில், கண்ணகி சிலை அருகே உள்ள நடைபாதையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தலைமையில் ஓவியர் வீரசந்தானம் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் ஊர்வலமாக வர, அவர்களை மெரினாவுக்குள் அனுமதிக்காமல், குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றினார்கள் போலீஸார். கோபமடைந்த உணர்வாளர்கள், “நாங்கள் என்ன ஆயுதத்துடனா வந்தோம்? மெழுகு வத்தியுடன்தானே வந்தோம். அதற்கே இந்த அரசு அஞ்சுகிறதென்றால், இது நிச்சயம் தமிழர்களுக்கான அரசு இல்லை” என கோஷம் போடத் தொடங்கினார்கள்.

“இது எம் பண்பாடு!”

நம்மிடம் பேசிய திருமுருகன், “இறந்தவர்களுக்கு நீர்நிலை அருகில், நினைவேந்துவது மரபாக இருந்து வருகிறது. இது உலகமெங்கும் நடக்கிறது. இது நம் அடிப்படை உரிமை. இந்த உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை ஐ.நா சபையும் வரையறை செய்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஏழு வருடங்களாக மெரினா கடற்கரையில் அமைதியாக நிகழ்ந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தைத் தடை செய்தது மட்டுமல்லாமல், எங்கள் மீது வன்முறையையும் ஏவி, கைது செய்திருக்கிறார்கள். இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் நெருங்கிய பங்காளி பி.ஜே.பி-யின் கைப்பாவையாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. அதிபயங்கர ஆயுதங்களை நாங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆமாம்.... மெழுகுவத்தி போன்ற ‘அதிபயங்கர ஆயுதங்கள்’ எங்கள் கைகளில் இருந்தது உண்மைதான்’’ என்றார் கோபமும் கொந்தளிப்புமாக.

நினைவேந்தலில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “பாரதிய ஜனதா கட்சியின்  வழிகாட்டுதலின்படியே இந்த நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பி.ஜே.பி-யின் தமிழர் விரோதப்போக்குக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இது. மெரினாவில் ஒன்றுகூடி எம் சொந்தங்களுக்காக அஞ்சலி செலுத்துவது எம் பண்பாட்டு உரிமை. அந்த உரிமையை நிச்சயம் வென்றெடுப்போம்” என்றார். 

“பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்!”

‘‘உளவியல் யுத்தம் நடத்துகிறார்கள்!’’

கண்ணகி சிலை அருகே இந்தக் கைது களேபரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, திருவள்ளுவர் சிலை அருகே சில இளைஞர்கள் கூடினர். தங்கள் கைப்பையில் இருந்து பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்தை எடுத்து திருவள்ளுவர் சிலைக்குக் கீழே வைத்து, மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தத் தகவல் பரவியதும், மெரினாவில் ஆங்காங்கே கூடியிருந்த மற்ற இளைஞர்களும் ஓடி வர... சிறிது நேரத்தில் அங்கே  பெருங்கூட்டம் திரண்டது. பின், பெரும் எண்ணிக்கையில் வந்த போலீஸார், அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க காஞ்சிபுரத்திலிருந்து வந்த கமலாம்மா, “அமைதியாக மெழுகுவத்திதானே ஏந்துகிறோம் என்று அனுமதி கேட்டோம். பேய்தான் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும். நடப்பது பேய் ஆட்சி, அதனால்தான் மெழுகுவத்தி வெளிச்சத்துக்கு இந்த அரசுகள் அஞ்சுகின்றன. ஆனால், பேயால் பல நாள் வாழ முடியாது. எட்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை அரசு தமிழ் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தியதென்றால், நம் அரசு அதற்கான நினைவேந்தலையும் நடத்தவிடாமல், நினைவுகள்மீது ஓர் உளவியல் யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது” என்றார்.

இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது தமிழக அரசு?

- மு.நியாஸ் அகமது
படம்: சு.ஸ்ரீனிவாசுலு