வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (20/07/2018)

கடைசி தொடர்பு:16:09 (20/07/2018)

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கு மாரடைப்பு - போராட்டம் நடத்திய அ.ம.மு.க-வினர்..!

தஞ்சாவூர் அருகே காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மான முறையில் இறந்த சம்பவத்தைக் கண்டித்து அ.ம.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமமுக

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள பழவேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசெல்வம். இவர் தொடர்ந்து மூன்று முறை அப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்துள்ளார். அ.தி.மு.க-வில் இருந்த இவர் அதிலிருந்து விலகி அ.ம.மு.க-வில் சேர்ந்தவருக்கு அதில் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பும் கொடுத்தார் தினகரன். இந்நிலையில் சமீபத்தில் போலீஸார் குமாரசெல்வத்தை  விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸாரே அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்ததோடு குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று குமாரசெல்வம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். டி.டி.வி அணிக்குச் சென்றதால் அ.தி.மு.க-வின் மதுக்கூர் ஒன்றிய செயலாளர் செந்தில் இவர் மீது கோபத்தில் இருந்ததாகவும் அவரின் தூண்டுதலின் பேரில் போலீஸார் குமாரசெல்வத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர் எனவும் குமாரசெல்வம் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

குமாரசெல்வம் உயிரிழந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அவரின் உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். அ.ம.மு.க-வின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் குவிந்தனர். அப்போது இவரின் இறப்புக்குக் காரணமான மதுக்கூர் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், எஸ்.ஐ மகேந்திரன் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் மீது வழக்கு கொடுத்ததோடு அவர்களை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்களுக்கு எதிராகக் கோஷமிட்டனர். மேலும், ரவுடி பட்டியலில் இருக்கும் துரை.செந்திலை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரசெல்வம்இது குறித்து குமாரசெல்வம் உறவினர்களிடம் பேசினோம், ``குமாரசெல்வம் மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். இவருக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. ஓர் அடிதடி வழக்கில் கடந்த 14-ம்தேதி இவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உங்க தம்பி சிவக்குமார் மீதுதான் புகார் இருக்கு அவரை கொண்டு வந்து விட்டுவிடுங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். பின்னர், 16-ம் தேதி தன் தம்பி சிவக்குமரை அழைத்துக்கொண்டு சென்று காவல் நிலையத்தில் விட்டு விடுகிறார். அவரை ரிமாண்டும் செய்து விட்டனர். மீண்டும் 17-ம் தேதி குமாரசெல்வம் வீட்டுக்கு வந்த போலீஸார் உங்க மேல் பிசிஆர்கேஸ் இருக்கு வாங்க என அழைத்திருக்கின்றனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். அப்போதே எனக்கு நெஞ்சுவலியாக இருக்கிறது விட்டுவிடுங்கள் எனக் கூறியதை கேட்காமல் அழைத்துக்கொண்டுச் சென்றனர். இதைப் பார்த்த அவரின் மனைவியும் மயக்கம் அடைந்து அதே இடத்தில் விழுந்துவிட்டார்.

காவல் நிலையத்தில் ஆளுங்கட்சி நிர்பந்தம் எனக் கூறி அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு அதிகளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் போலீஸாரே அவரை சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து சேர்த்தனர். பிறகு மாலைக்கு மேல் அவர் மனைவிக்குத் தகவல் கொடுத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்துவிட்டார். தினகரன் அணிக்குச் சென்ற ஒரே காரணத்துக்காகவே பல வழிகளில் அவருக்கு தொல்லை கொடுத்து அவர் இறக்கும் அளவுக்குக் கொண்டு வந்துவிட்டனர். காக்க வேண்டிய கவல்துறையும் ரவுடி பட்டியலில் உள்ள ஆளும்கட்சி பிரமுகரான செந்திலின் பேச்சை கேட்டு இப்படி செய்து விட்டனர். இவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க