Published:Updated:

பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

மகனுக்கு செக்... அப்பாவுக்கு பக்!ஓவியம்: ஹாசிப்கான்

பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

மகனுக்கு செக்... அப்பாவுக்கு பக்!ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்
பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

மிழகத்தில் அதிரடிகளை அரங்கேற்றும் வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால், சசிகலா குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல... முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள். ரெய்டுகள், வழக்குகள், சம்மன்கள், கைதுகள் எல்லாம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகே, சசிகலா குடும்பத்தைச் சிதைக்க ஆரம்பித்தன. ஆனால், இவை எல்லாம், சிதம்பரத்தின் குடும்பத்தை 2014-ம் ஆண்டில் இருந்தே துரத்தத் தொடங்கிவிட்டன.

நண்பர்கள்... கார்த்தி சிதம்பரம்...  ப.சிதம்பரம்!


2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி ஆட்சி அமைந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற நேரத்தில் நேரடியாக சிதம்பரமும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும் குறிவைக்கப்படவில்லை. மாறாக, கார்த்தியின் நண்பர்கள்தான் குறிவைக்கப்பட்டனர். அதன் மூலம், கார்த்தி சிக்கவைக்கப்பட்டார். அதிலிருந்து சிதம்பரத்துக்குச் சிக்கல் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதை மிக அலட்சியமாகவும், சமயங்களில் ஆவேசமாகவும், தேவைப்பட்டால் உருக்கமாகவும் எதிர்கொண்ட ப.சிதம்பரம், தற்போது பின்வாங்க ஆரம்பித்துள்ளார்.

‘2 ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்குத் தொடர்பு உண்டு’ என்று முதன்முதலில் திரி கொளுத்திப் போட்டவர் சுப்பிரமணியன் சுவாமிதான். உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதை விசாரித்த சி.பி.ஐ, ‘2ஜி ஊழல் வழக்கில்   ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உண்டு’ எனக் கூறியது. ஆனால் கீழ் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.ஐ, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் 2 ஜி பிரதான வழக்கில், ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குப் பாதகமாக வெளியானால், அதன்பிறகு சிதம்பரத்துக்கும் சிக்கல் அதிகரிக்கக்கூடும். 

பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

எம்.எஸ்.ராவ் குற்றச்சாட்டும் சிதம்பரத்தின் மௌனமும்!

2015 ஜூன் 15-ம் தேதி சென்னை மத்திய வருமானவரித் துறை ஆணையர் எம்.எஸ்.ராவ், தனக்கு வழங்கப்பட்ட டிரான்ஸ்ஃபர் ஆணையை எதிர்த்து, டெல்லியில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘ஜே.டி குழுமம் என்ற நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஏராளமான ஆதாரங்களைக் கைப்பற்றினர். அந்த ஆதாரங்களை முதல் கட்டமாகப் பரிசீலித்தபோது, ஜே.டி குழுமம், தமிழகத்தில் புகழ்பெற்ற வாசன் கண் மருத்துவமனையுடன் பல பணப் பரிவர்த்தனைகள் நடத்தியிருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து சோதனையைத் தீவிரப்படுத்தியதில், ஜே.டி குழுமம் 223 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக வாசன் கண் மருத்துவமனை நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது தெரியவந்தது. ஆனால், இந்த ஆதாரங்கள் சிக்கியும்கூட, ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அந்தத் துறைக்கு கீழே வரும் வருமானவரித் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூட்டாகச் சேர்ந்து, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். நான் இதில் தீவிரம் காட்டினேன். வாசன் கண் மருத்துவமனையின் உண்மையான உரிமையாளராக உள்ள கார்த்தி சிதம்பரம், அவருடைய தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன் காரணமாகத்தான் எனக்கு இந்தப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்” எனத் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மத்தியத் தீர்ப்பாயம், எம்.எஸ்.ராவின் பணியிட மாறுதலுக்குத் தடை விதித்துள்ளது.

‘‘என் நெஞ்சில் கத்தியால் குத்துங்கள்!’’

“ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில், மலேசியாவில் இருந்துவந்த பணம், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் மூலம்தான் கைமாறியது. எனவே, சிதம்பரம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று 2012-ல் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் விவகாரத்தைக் கிளப்பினார். அப்போது அற்குப் பதிலளித்துப் பேசிய சிதம்பரம், “என் நேர்மையைச் சந்தேகிப்பதற்குப் பதில்... கத்தியால் என் நெஞ்சில் குத்துங்கள்” என்றார். அதன்பிறகு பல ஆண்டுகள் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்தது. 2017 பிப்ரவரியில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. தயாநிதி மாறன், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தற்காலிகமாக நிம்மதி அடைந்தனர். ஆனால், தற்போது அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல் முறையீடு செய்துள்ளது.

பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

குடும்பத்தைக் குறிவைக்கிறது பி.ஜே.பி!

வருமானவரித் துறை அதிகாரி எம்.எஸ்.ராவ் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஜே.டி. குழுமம் என்பது ஜே.தினகரன் என்பவருக்குச் சொந்தமானது. நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழில்களை இந்த நிறுவனம் நடத்திவருகிறது. கார்த்தி சிதம்பரத்துடன் உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு இந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது. அதற்குக் கைமாறாக கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வாசன் ஹெல்த் கேர், அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட், ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது” எனக் குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றி ஆரம்பத்தில் சர்ச்சைகள் எழுந்தபோது, ‘‘இந்த நிறுவனங்களுக்கும் என் குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என்று சிதம்பரம் மறுத்தார்.

அதுவரையில் சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஆதாரங்களும் சிக்காமல்தான் இருந்தன. ஆனால், 2015-க்குப் பிறகு, அமலாக்கத் துறை வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திலும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடத்தியபோது பல ஆதாரங்கள் சிக்கின. ஜே.டி குழுமத்திடம் இருந்து பெற்ற பங்குகளை அதிக விலை வைத்து விற்பனை செய்து, இந்த இரண்டு நிறுவனங்களும் லாபம் ஈட்டியதும் தெரிய வந்தது. அதோடு இந்த நிறுவனங்களுக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் இருந்த தொடர்புகளும் தெரிய வந்தன.

அப்போது வருமானவரித் துறை, அமலாக்கத் துறை என இரண்டு துறைகளும் ஒரே நேரத்தில் கார்த்திச் சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தின. உடனே சிதம்பரம், “என்னைக் குறி வையுங்கள்... என் மகனையும் அவருடைய நண்பர்களையும் ஏன் குறி வைக்கிறீர்கள்?” என்று மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளித்தார். ஆரம்பத்தில் ‘‘இந்த நிறுவனங்களோடு எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என்று சொன்ன சிதம்பரம், இந்த ஆதாரங்கள் வெளியானதும், “நான் இந்தப் பிரச்னையைச் சட்டப்படி சந்திப்பேன்” என்று பின்வாங்கினார்.

பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ்

ஐ.என்.எக்ஸ் விவகாரம்

2017 மே 16-ம் தேதி சி.பி.ஐ, கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு, கார்த்தி தொடர்புடைய நிறுவனம் உதவியது. அதற்குப் பிரதிபலனாக, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மூன்றரை கோடி ரூபாய் வரை கொடுத்தது என்றும், அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கு பதில் சொன்ன சிதம்பரம், “பி.ஜே.பி அரசுக்கு எதிராக வட இந்திய ஊடகம் ஒன்றில் கட்டுரை எழுதுவதால், என் குரலை ஒடுக்க நினைக்கிறது” என அறிக்கை விடுத்தார். அதைத்தாண்டி, இந்த நிறுவனங்களோடு தங்கள் குடும்பத்துக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

இதற்கு முன்பு நடந்த ரெய்டுகளில் எல்லாம் கார்த்தியின் நண்பர்களும் கார்த்தியும்தான் சிக்கலில் மாட்டினர். ஆனால், ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் எழுந்துள்ள சிக்கல், சிதம்பரத்தை நோக்கித் திரும்பத் தொடங்கி உள்ளது. இப்படி ஒவ்வொருமுறை கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து சி.பி.ஐ-யும் அமலாக்கத் துறையும் ரெய்டு நடத்தும்போது, புதுப்புது ஊழல்கள், முறைகேடுகள், அவை தொடர்புடைய ஆவணங்கள் வெளிவருகின்றன. அவை எதற்கும் தெளிவான விளக்கம் சொல்லாத சிதம்பரம், பி.ஜே.பி அரசை மட்டும் பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டிப் பின்வாங்குகிறார்.

- ஜோ.ஸ்டாலின்
படம்: மீ.நிவேதன்