Published:Updated:

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!
பிரீமியம் ஸ்டோரி
அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

Published:Updated:
அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!
பிரீமியம் ஸ்டோரி
அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

மார்ச் 13, காலை 10 மணி. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், வண்ணங்களைப் பூசிக் கொண்டு பெங்களூரு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. யோகேந்திர வசுபாலின் வீட்டிலும் அந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அந்த நேரத்தில் அவர் வீட்டுத் தொலைபேசிக்கு வந்த அழைப்பு, அந்தக் குடும்பத்தின் மொத்த உற்சாகத்தையும் கலைத்துப் போட்டது. அழைத்தது போலீஸ். “பண மோசடி குற்றத்துக்காக உங்களைக் கைதுசெய்ய தமிழ்நாட்டு போலீஸ் பெங்களூரு வந்திருக்கிறது. நீங்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் வாருங்கள்” என்றது அழைப்பு. அதைக் கேட்டதும் வசுபாலின் குடும்பம் பதற்றமானது. வசுபால் சென்னையில் உள்ள தனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டார். அவர் போலீஸிடம் பேசியபோது,  “ஆதித்யா என்பவர் வசுபால் மீது மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணமோசடி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் அவரைக் கைதுசெய்ய பெங்களூரு வந்துள்ளோம்” என்று கூறினர். “நாளை நானே வசுபாலை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து எங்கள் தரப்பு நியாயத்தை எழுத்துபூர்வமாக கொடுக்கிறோம்” என வழக்கறிஞர் சொன்னதும், போலீஸ் அதை ஏற்று சென்னை திரும்பிவிடுகிறது.

ஆனால், அடுத்த நாள் நிலைமை தலைகீழாகத் திரும்புகிறது. போலீஸ் ஸ்டேஷன் கிளம்பிய அவரை, வீட்டு வாசலிலேயே சுற்றி வளைத்துக் கைதுசெய்த போலீஸ், அவர் தரப்பு நியாயம் எதையும் சொல்வதற்கு வாய்ப்புக் கொடுக்காமல், நீதிமன்றத்தில் கூட்டிப் போய் நிறுத்தி, புழல் சிறையில் அடைத்துவிடுகிறது. வசுபாலின் கைது விவகாரத்தில் அதிர்ந்து போன, பே டிஎம், ஓலா உள்ளிட்ட ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உரிமையாளர்களும், தொழில் முனைவோர் அமைப்பான ‘டை’ (TiE) சென்னை கிளையும், அவருக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுத்தன. கர்நாடக மாநில ஐ.டி அமைச்சர் ப்ரியாங் கார்கே, தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை  அமைச்சர் மணிகண்டனிடம் வசுபாலுக்கு நியாயம் கிடைக்க உதவுமாறு பேசினார். அதன்பிறகு வசுபால் விவகாரம் வழக்கத்துக்கு மாறான ஒன்றாக விஸ்வரூபம் எடுத்தது; தொழில் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது; அந்த விவகாரத்துக்குப் பின்னால் இருந்த விஷயங்கள் வெளிவந்தன.

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

இன்றைய ஐ.டி இளைஞர்களை ‘ஸ்டார்ட் அப்’ என்ற மந்திரம் ஈர்க்கிறது. புதுமையான ஒரு கான்செப்ட்டை உருவாக்கி பிசினஸ் செய்பவையே ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள். இப்படி புதுமை முயற்சி செய்யும் இளைஞர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யவும், டாடா முதல் பலரும் தயாராக இருக்கிறார்கள். வசுபால், ‘ஸ்டேசில்லா’ (Stayzilla) என்ற ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தைத் தொடங்கினார். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல்களுக்குப் பதிலாக வீடுகளை ஆன்லைனில் புக் செய்து தரும் புதுமை நிறுவனம் இது. சுற்றுலாத் தலங்களில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர் களுடன் பேசி, அவர்களுடன் ஒப்பந்தம் போட்டார். இந்தியா முழுவதும் 30 ஆயிரம் வீட்டு உரிமையாளர்களை வசுபால் தன் தளத்தில் இணைத்தார். சுற்றுலா செல்பவர்கள், அவர்களுக்குப் பிடித்த வீடுகளைத் தேர்ந்தெடுத்துத் தங்கிக்கொள்ளலாம். இந்த கான்செப்ட்டைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட, நெக்ஸஸ் வென்சர்ஸ், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்கள் 3.4 கோடி டாலரை வசுபாலின் நிறுவனத்தில் முதலீடு செய்தன. இந்த நேரத்தில்தான் ஆதித்யா என்பவர் வசுபாலின் வாழ்க்கைக்குள் வருகிறார். அதுபற்றி வசுபாலிடமே கேட்டோம்.

‘‘2005-ல் ஆரம்பித்த இந்தத் தொழில், நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 2012-ல் ஆதித்யா என்னை அணுகினார். விளம்பரம் கொடுப்பது பற்றி பல ஐடியாக்களைச் சொல்வார். பிடித்திருந்ததால், அதுவரை வழக்கமாக விளம்பரம் கொடுக்கும் ‘கேம்பெய்ன் புராஜெக்ட்’ ஏஜென்சியை நிறுத்திவிட்டு ஆதித்யாவிடம் கொடுக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நாங்கள் கொடுத்த விளம்பர வேலைகளை ஆதித்யாவும் நன்றாகத்தான் செய்து கொடுத்தார். 2015-ல் ஒரு புது புராஜெக்ட்டுக்காக ஒரே நேரத்தில் 20 நகரங்களில் விளம்பரம் செய்யும் பொறுப்பை ஆதித்யாவிடம் ஒப்படைத்தோம். அதற்கு முன்பெல்லாம் விளம்பரம் கொடுக்கும்போது, எங்கள் வெப்சைட் பயங்கர பிசியாக இருக்கும். ஆனால் இந்தமுறை போதிய வரவேற்பு இல்லை. 

என்ன காரணம் என்று யோசித்து, ஆதித்யா கொடுத்த விளம்பரங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டினோம். மிடில் கிளாஸ் மக்களே எங்கள் இலக்கு. அவர்கள்தான் சுற்றுலா சென்று தங்குவார்கள். ஆனால், எங்களுடைய விளம்பர போர்டுகளை அவர் குடிசைப்பகுதியில் வைத்திருந்தார். அதாவது, குறைவான பணத்தைச் செலவழித்து குடிசைப்பகுதிகளில் போர்டை வைத்துவிட்டு, பிரதான சாலையில் வைத்த கட்டணத்தை அதற்கு வசூல் செய்வது அவர் திட்டமாக இருந்தது. ஒரு இடத்தில் வைத்த விளம்பரப் பலகையைப் பல கோணங்களில் படம் எடுத்து, அதைப் பல இடங்களில் வைத்ததாகக் கணக்குக் காட்டினார். 

நாங்கள் ஏமாற்றப்படுவது புரிந்ததும், உடனே எல்லா விளம்பரங்களையும் நிறுத்தச் சொன்னோம். இதையடுத்து, ஆதித்யாவின் ஜிக்சா அட்வர்டைசிங் கம்பெனியிடமிருந்து எனக்கு ஒரு இன்வாய்ஸ் வந்தது. உடனே ஆதித்யாவிடம், ‘விளம்பரம் செய்த இடங்களை நாங்கள் நேரில் பார்க்க வேண்டும். ஒரு விளம்பரப் பலகை வைக்க வேண்டுமானால், அதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும். போர்டு வைக்கப்படும் நிலத்தின் உரிமையாளரோடு ஒப்பந்தம் போட வேண்டும். அதற்கு செலுத்திய கட்டணத்துக்கான பில் இருக்கும். அவற்றை முறையாகக் கொடுத்தால் நாங்கள் கட்டணத்தைச்    செலுத்துகிறோம்’ என்று சொன்னோம். ஆனால் ஆதித்யா அவற்றைக் கொடுக்கவில்லை. அதனால் நாங்களும் பணம் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ஆதித்யாவின் நடவடிக்கைகள் மோசமாக மாறின. சில அரசியல்வாதிகள் நேரடியாக அலுவலகம் வந்து கத்தினார்கள். வட்டச் செயலாளரில் இருந்து, எம்.எல்.ஏ வரை எங்களை அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ‘ஆதித்யாதான் எங்களை ஏமாற்றி உள்ளார். நாங்கள் அவரை ஏமாற்றவில்லை. இது சிவில் வழக்கு. அதனால், நாங்கள் இதைச் சட்டப்படி தீர்த்துக்கொள்கிறோம்’ என்றோம். ஆனாலும், போன் மூலமாக, வாட்ஸ் அப் மூலமாகப் பல்வேறு தொந்தரவுகளையும், அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து கொடுத்து வந்தார். திடீரென ஒருநாள் போனில் அழைத்த ஆதித்யா, ‘பிராத்தல் கேஸ் போட்டு பொண்டாட்டிய உள்ள வெச்சிடுவேன்’ என்று மிரட்டினார். என் பார்ட்னரின் குழந்தையைப் பில்லி சூனியம் வைத்துக் கொன்றுவிடுவதாக மிரட்டினார். சூனியம் வைத்த போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார்.

இதை சட்டப்படி சந்திக்கவே நான் விரும்பினேன். ஆனால், அதற்குள் ஆதித்யா என் மீது பொய்ப்புகார் கொடுத்துவிட்டார். ஆதித்யா ஒரு பிரபலமான பத்திரிகையாளரின் மகன். ஜிக்சா கம்பெனிக்கு ஆதித்யாவின் அம்மாதான் உரிமையாளர். அந்த வகையில் அவர் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதனால்தான், சாதாரண ஒரு கொடுக்கல் - வாங்கல் பிரச்னையில் என்னைக் கைது செய்ய பெங்களூரு வரை போலீஸ் வந்தது. சிவில் வழக்கை கிரிமினல் விவகாரமாக மாற்றி இருக்கிறார்கள். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக் கிறேன். நான் வெளியே வந்து உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்த பிறகு எனக்கும், குடும்பத் தினருக்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. பில்லி சூனிய பொம்மைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

எங்களோடு ஐந்து மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள் இணைந்து செயல்படுகின்றன. அவ்வளவு நம்பகத் தன்மையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். எங்கள் நிறுவனம் இன்று முடங்கிக் கிடக்கிறது. இதிலிருந்து மீண்டு வரும் முயற்சிகளில் இருக்கிறேன்’’ என்றார் வசுபால்.

அரசியல் மிரட்டல்... பில்லி சூனியம்... - கலங்கும் ‘ஸ்டார்ட் அப்’ இளைஞர்!

இது தொடர்பாக ஆதித்யாவிடம் பேசினோம். ‘‘வசுபால் சொல்தெல்லாம் சுத்த பொய். அவர் எங்களுக்குத் தர வேண்டிய பணம் 1 கோடியே 70 லட்ச ரூபாய். அதை ஜனவரி மாதமே தந்துவிடுவதாகச் சொன்னார். அப்போது எல்லாம், எங்கள் வேலைகளில் அவர் எந்தக் குறையும் சொல்லவில்லை. ஆனால், திடீரென பிப்ரவரி மாதம் கம்பெனியை மூடுவதாக அறிவித்து, புதிய மாடலில் மீண்டும் பிசினஸ் ஆரம்பிக்கப்படும் என்று  தனது பிளாக்கில் மட்டும் எழுதிவிட்டு பெங்களூரு போய்விட்டார். அதன் பின்னர்தான் அவர் மீது புகார் செய்தோம். சிவில் வழக்கு பிரச்னை, கம்பெனியை மூடிவிட்டு போனதால்தான் கிரிமினல் வழக்காகப் பதிவானது. அதில் கைது செய்யப்பட்ட பிறகே, நாங்கள் ஏமாற்றி விட்டதாக மீடியாக்களிடம் பேசி வருகிறார். 

நாங்கள் ஸ்டேசில்லாவுக்கு இரண்டு வகையான விளம்பரங்கள் செய்தோம். ஒன்று, விமானப் பயணிகளின் பேக்கேஜ்களில் மாட்டும் ‘டேக்’குகளில் செய்யும் விளம்பரம். இரண்டாவது, தெருக்களில் வைக்கும் விளம்பரப் பலகைகள். நாங்கள் விளம்பரப் பலகைகளில் அவரை ஏமாற்றி விட்டதாக மட்டுமே சொல்லி வருகிறார். ஆனால் ஏர்போர்ட் பேக்கேஜ் டேக்குகளைப் பற்றி அவர் பேசுவதே இல்லை. விமானத்தில் பயணம் செய்யும் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், அவர்களுடைய பேக்கேஜ் டேக்கில் ஸ்டேசில்லாவின் பெயர் இருந்ததா... இல்லையா? என்று. அவருக்கு விளம்பரப் பலகைகளில்தானே பிரச்னை. பேக்கேஜ் டேக்குக்கான பணம் ரூ. 1.1 கோடியைத் தர வேண்டியதுதானே?

இரண்டு வருடங்களுக்கும் மேலாக இணைந்து பிசினஸ் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் எங்களுக்குத் தர வேண்டிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வந்தார். அதன் பிறகு கொடுக்கவே இல்லை. இந்த ரூ. 1.7 கோடி, மூன்று மாதத்துக்கான பணம். பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போயே போலீஸ் புகார் கொடுத்தோம். போன் செய்து மிரட்டுவதாகவும், மோசமாகப் பேசுவதாகவும் வசுபால் சொல்வதெல்லாம் பொய். இவரைப் போன்ற ஆட்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்தி எதுவும் செய்வார்கள். எங்கள் தரப்பு ஆதாரங்களை எல்லாம் நாங்கள் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறோம். அவற்றை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் பேசியபோது, ‘‘ஆதித்யா ஒரு புகார் கொடுத்தார். அதில் முதல்கட்ட விசாரணை நடத்தியபோது, வசுபால் மேல் இருந்த தவறுகள் தெரியவந்தன. அவர் தரப்பைக் கேட்க நாம் அழைத்தபோது, அவர் நான் பெங்களூருவில் இருக்கிறேன் என்று சொன்னார். விசாரணைக்கு வாருங்கள் என்று அழைத்தபோது, அவரிடம் இருந்து சரியான பதில் இல்லை. தொடர்ந்து இரண்டு மூன்று முறை விசாரணைக்கு அழைத்த போதும் அவர் வரவில்லை. அவருடைய வழக்கறிஞர் தரப்பில் இருந்தும் சரியான பதில் வரவில்லை. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை என்றால் இதை சிவில் வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிறுவனத்தைத் தொடங்கிவிட்டு திடீரென மூடிவிட்டுச் சென்றால், அதை சிவில் வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், பல மாதங் களாக அந்த நிறுவனத்தில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்துதான் வசுபாலைக் கைதுசெய்தோம்’’ என்றனர்.

- ஜோ.ஸ்டாலின், ஜெ.சரவணன்