``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்!'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்! | "Rahul Gandhi will be brought to the issue of abuse of power!" - Union Minister Anandakumar

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:05:30 (21/07/2018)

``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்!'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்!

``காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.   

ராகுல் காந்தி

மக்களவையில் நேற்று (20-ம் தேதி) மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். மேலும், உரையை முடித்த ராகுல் காந்தி, யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்தார். இந்தச் செயல் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ``பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது அவரை (மோடி) ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது, அவையின் மாண்பைக் குறைக்கும் செயல். அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பு'' என்றார். அதேபோல் பி.ஜே.பி-யின் பெண் எம்.பி-யான பாதல், “ `முன்னா பாய்' (இந்தி திரைப்படப் பெயர்) கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது உகந்த இடமில்லை” என்றார். அதேபோல் மற்றொரு பி.ஜே.பி. எம்.பி-யான கிரண் கெர், ``ராகுல் காந்தி பாலிவுட்டில் நடிக்கப் போகலாம்'' என்றார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமாரோ,  “ராகுல் வயதளவில் வளர்ந்துவிட்டாலும் அவர் குழந்தைபோல நடந்துகொள்கிறார்” என்றார்.  

நாடாளுமன்றம்

 

ஒருபுறம், பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், மறுபுறம், “அவர்மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று (20-ம் தேதி) மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி, அரசுக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய ராகுல் காந்தி, அரசுக்கெதிராக ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவை நடவடிக்கைகளை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், அவர் அளித்த ஒட்டுமொத்த தகவல்களும் தவறானவை. மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளையும் ஏற்க முடியாது. ஆகையால், அவர்மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என்றார்.

அதேபோல் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ``பிரதமர் நரேந்திர மோடி குறித்த விமர்சனத்தை ஏற்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சிறப்பான செயல்பாட்டுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் முன்வைக்க முடியாத நிலையில், உண்மையில்லாத சில கருத்துகளை அவர் முன்வைத்திருக்கிறார்'' என்று பதிவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க