Published:Updated:

ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?

ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?
பிரீமியம் ஸ்டோரி
ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?

ப.திருமாவேலன்

ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?

ப.திருமாவேலன்

Published:Updated:
ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?
பிரீமியம் ஸ்டோரி
ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?

சாமிகளில் சாந்த சொரூபியான விநாயகரையே விதவிதமாய் மாற்றி அவர் ஊர்வலத்தை விபரீதமான விவகாரம் ஆக்கியதைப் போல -

உயிரினங்களில் சாந்தமான பசுவையே பயமுறுத்தும் பகீர் உயிரினமாக ஆக்கி விட்டார்கள்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு உயிரினங்களின் மீது இவ்வளவு திடீர்ப் பாசம் ஏன் வந்தது? பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை மட்டுமே கொல்லக் கூடாது என்றால் ஆடுகள் என்ன அத்வானி கோஷ்டியா... கோழிகள் என்ன ஜோஷி கோஷ்டியா? அவை செத்தால், கொல்லப்பட்டால், கொலை செய்யப்பட்டால் பாவம் இல்லையா?  பசுவின், ஒட்டகத்தின் கழுத்தில் வடிவது ரத்தம் என்றால் ஆட்டின், கோழியின் கழுத்தில் வடிவது தக்காளிச் சட்னியா? நரேந்திர மோடியிடம் இருப்பது நேசம் அல்ல. உயிரினப் பாசமும் அல்ல. இந்து பாசமும்கூட அல்ல. நாற்காலி பாசம்.

மூன்று ஆண்டுகள் பிரதமர் நாற்காலியில் முழுமையாக உட்கார்ந்து முடித்திருக்கிறார் நரேந்திர மோடி. ‘மூன்று ஆண்டுகளில் என்னப்பா செய்தாய்’ என்று யாராவது கேட்கிறார்களா இன்று? ‘ஏன் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது?’ என்றுதான் எல்லாப் பக்கமும் கேட்கிறது என்றால், எல்லாரையும், திசை திருப்ப, பசுவைப் பயன்படுத்துகிறார் பிரதமர். இதனை ‘ராஜதந்திரம்’ என்று அறிவிலிகள் சொல்வார்கள். இதைத்தான் சாணக்கிய சாஸ்திரம் சொல்கிறது. ‘மன்னனைக் குற்றம் சாட்டி மக்கள் பேசிக் கொண்டிருந்தால், ஏதாவது ஒரு மரத்தில் ஒருவனை இருட்டில் ஏற்றி விட்டு கத்தச் சொல். மறுநாள் காலை முதல் மக்கள் அதைப் பற்றியே பேசுவார்கள். எதையும் திசை திருப்பு’.  இப்போது நாம் மாட்டிறைச்சி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.

ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?

பசுவை இத்தனை ஆண்டுகள் காப்பாற்றியது சட்டங்கள் அல்ல. மக்கள். அதுவும் விவசாய பெருமக்கள். குறிப்பாக கிராமப்புற மக்கள். கோமாதா, குலமாதா என்று சொல்லி இந்து தேசியத்தின் சின்னமாக பசுவும், காளையும் உருவகப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே மண்ணோடும், விவசாயத்தோடும், உழைப்போடும் மக்களோடும் உடன் வந்தவை அவை. பசுவைக் காப்பாற்றுவது இந்துக்களைக் காப்பாற்றுவது, காளையைக் காப்பாற்றுவது கடவுளைக் காப்பாற்றுவது என்று இன்று பிரச்சாரம் செய்பவர்கள் வேதிய காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை வேதங்களில் படிக்க வேண்டும்.

ரிக், யசூர், சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்களும் யாகங்களைப்பற்றி விவரிக்கின்றன. கோஸவம், ஐந்த்ரபசு, வாயவீய ஸ்வேதபசு, காம்ய பசு, வத்ஸோ பகரணம், அஷ்டதச பசுவிதானம், ஏகாதசீன பசுவிதானம்,  க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா, உபாகரண மந்திரம், கவ்ய பசுவிதானம், ரிஷபரவம்பன விதானம், ஆதித்ய தேவ நாகபசு... ஆகிய யாகங்களில் என்ன செய்யப்பட்டது எது பலியிடப்பட்டது என்பதைப் பார்க்கவும். ‘யாகத்தில் பலியிடப்பட்ட பசு ஸ்வர்க்கத்தை அடைகிறது’ என்று சொன்னது யார்? நெய் கலந்த மாட்டு மாமிசத்தை சிலாகித்து எழுதியது யார்? இவை அனைத்தையும் பார்த்து விட்டு பசுப் பாதுகாப்புக்காரர்கள் கிளம்ப வேண்டும். இந்த உயிர்க் கொலையை எதிர்த்துக் கிளம்பியதுதான் சமணமும் பவுத்தமும்.  உயிர்க்கொலை கூடாது என்ற கருத்துக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட செல்வாக்கைப் பார்த்து, வேதிய மதமும் ‘உயிர்க்கொலை கூடாது’ என்று சைவம் ஆனது.

ஆரிய சமாஜ் ஆரம்பித்த தயானந்த சரஸ்வதி, 1879 ல் வீட்டு விலங்குகளைப் பாதுகாக்கும் முதல் சரணாலயத்தையும், கோ ரக்ஷண சபாவையும் ஆக்ராவில் அமைத்தார். இதுதான் தொடக்கம். பசு புனிதம் ஆனது. பசு தரும் பால், தயிர், வெண்ணெய், சாணம், சிறுநீர் ஆகிய ஐந்தின் கலவையான பஞ்சகவ்யம், தூய்மையின் அடையாளம் ஆனது. பசுவை உண்ணும் முஸ்லிம்கள், இந்துவின் இன எதிரிகள் ஆனார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில்,  ‘முஸ்லிம்களோடு சேர்ந்து போராட வேண்டுமானால் பசு பாதுகாப்பு என்பதை நிபந்தனை ஆக ஆக்க வேண்டும்’ என்று காந்தியிடம் நிபந்தனை விதித்தார்கள் சிலர். ‘பசு பாதுகாப்பு முக்கியம்தான். அதற்காக அதை இந்திய விடுதலைக்கு நிபந்தனையாக விதிக்கக் கூடாது’ என்ற காந்தி, ‘வெளிச்சந்தையில் விற்கப்படும் அனைத்து  பசுக்களையும் அரசு விலை கொடுத்து வாங்க வேண்டும், பெரு நகரங்களில் பண்ணைகள் நிறுவி நியாயவிலையில் பால் வழங்க வேண்டும், அரசின் கட்டுப்பாட்டில் தோல் பதனிடும் ஆலைகள் இருக்க வேண்டும், மேய்ச்சல் நிலங்களை அரசு உருவாக்க வேண்டும்’ என்றார். காந்தியைக் கொன்றதோடு கொலையானது இவையும்.

பசு பாதுகாப்பு மசோதா விவாதம் நடந்த போது (1955ல்), ‘‘நான் பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளவும் விரும்புவேன். ஆனால் இதற்கு ஒப்புதல் தர மாட்டேன். பொருளியலையும் விவசாயத்தையும் புரிந்துகொள்ளாதவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், கால்நடைச் செல்வத்தை அழிக்கக் கூடிய முன்னெடுப்புகளில் இறங்காதீர் என்பதே” என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் சொன்னார். காந்தி ஏன் தனது வாரிசாக நேருவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அப்போது நிரூபித்தார். அதன்பிறகு பிரதமர் ஆன இந்திராவை, பெண் என்பதாலேயே இவர்களுக்குப் பிடிக்காமல் போனது. ‘பசு வதையைத் தடை செய்ய வேண்டும்’ என்று 1966ல் டெல்லியில் நடத்தப்பட்ட பேரணியின்போது ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில், ஜந்தர்மந்தர் அருகே இருந்த பெருந்தலைவர் காமராசர் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அவர் அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர். படுக்கை அறையில் இருந்து வெளியேறிய காமராசர், வேலைக்காரர்கள் தங்குமிடத்துக்கு ஓடிச் சென்று தப்பினார். அன்றைய அமைச்சர் ரகுராமையா வீடும் தாக்கப்பட்டது. மொத்தம் 8 பேரைக் கொலை செய்த கலவரமாக அது மாறியது.

மிருக வதைத் தடைச்சட்டம் 1960ல் இருந்து இருக்கிறது. ஆனால் மிருக ஏற்றுமதியும் தடங்கல் இல்லாமல் நடக்கத்தான் செய்தது. இந்தியாவில் ஜனசங்கம் பங்கெடுத்த அரசு (1977-80) இருந்துள்ளது. பிஜேபி ஆதரவு (1989-91) அரசும் இருந்துள்ளது. 1998 முதல் 2004 வரை பிஜேபி-யின் நேரடி ஆட்சியும் இருந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரதமர் ஆகிவிட்டார் நரேந்திர மோடி. இப்போதுதான் புது ஞானோதயம் வந்துள்ளது. மிருக வதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள்2017-ஐ    வெளியிட்டுள்ளார்கள். காளை, பசு, எருமை, ஒட்டகம், கன்று போன்றவைகளை இறைச்சிக்காக வாங்கவோ விற்கவோ கூடாது. விற்பவரும், வாங்குபவரும் ஐந்து கடித நகல்களுடன் வர வேண்டும். அதாவது இனி விற்பனையே செய்ய முடியாது என்பதுதான் உண்மையாக இருக்கப் போகிறது. குஜராத்தில் இப்படி விற்றால் ஆயுள் தண்டனை. நாடு முழுவதும் அப்படி போடுவதற்கு மோடியின் கருணை தடுக்கிறது. இனிமேல் மாடு வளர்க்க முடியாது. கூடாது என்பதுதான் இதன் இறுதி நோக்கமாக இருக்க முடியும்.

ஆடுகள் அத்வானி கோஷ்டியா? - கோழிகள் ஜோஷி கோஷ்டியா?

பல்லாயிரம் கோடி ரூபாயை எந்த ஆவணங்களும் இல்லாமல் கடன் கொடுப்பார்கள். ‘நான் திவால் ஆகி விட்டேன்’ என்றால் எந்த ஆவணங்களும் இல்லாமல் கடன் தள்ளுபடி செய்வார்கள். எலும்பும், தோலுமான பசுவை விற்க வேண்டுமானால் ‘டாக்குமென்ட்’ வேண்டும். இந்த ‘அடமென்ட்’க்கு பெயர் ஆட்சியா?

மது தடை செய்யப்படவில்லை. சிகரெட் தடைசெய்யப்படவில்லை. எல்லா போதைப் பொருள்களும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புழக்கத்தில் இருக்கின்றன. விபசாரம், தடையின்றி நடக்கிறது. 4,000 ரூபாய்தான் ஓர் ஆள் ஒரு நாளைக்கு வங்கியில் இருந்து எடுக்க முடியும் என்ற நேரத்தில் 89 கோடிக்கு 2,000 ரூபாய் நோட்டு பங்கிடப்படுகிறது. இதைப் பற்றிய வெட்கமே ஓர் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

மழை இல்லை. விவசாயம் இல்லை. உற்பத்தியே இல்லை. உற்பத்திப் பரப்பு குறைந்து விட்டது. தற்கொலை செய்கிறான் விவசாயி. பிரதமர் அலுவலகத் தெரு உட்பட தலைநகர் தெருக்களில் கோவணம் இல்லாமல் ஓடுகிறான் விவசாயி. ‘காவிரி மேலாண்மை வாரியம் போடு’ என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும், அதைச் சட்டத்தின் பேரால் ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் அமைக்கவில்லை. வறட்சி நிவாரணம் தருவதில் கர்நாடகாவுக்கு ஒரு கணக்கு, தமிழகத்துக்கு ஒரு கணக்கு... இவற்றைப்பற்றி எல்லாம் நினைக்க ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை.

‘கோ மாதா, குல மாதா’ என்று சொல்லிக்கொண்ட இந்தியாவுக்குத்தான், இறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் பிரேசிலுக்கு அடுத்ததாக இரண்டாவது இடம். அதைப் பற்றிய கூச்சமே இல்லை.

ஒரே இந்து மதத்துக்குள் ஓராயிரம் சாதிகள். இதற்குள் லட்சக்கணக்கான உட்பிரிவுகள். ஒரு சாதி, இன்னொரு சாதியோடு சேருவது இல்லை. கோயிலுக்குள் விடுவது இல்லை. வடம் பிடிக்க விடுவது இல்லை. காதலிக்க விடுவது இல்லை. கல்யாணம் செய்ய விடுவது இல்லை. நாட்டில் நடப்பது இரண்டு சாதிகளுக்குள் நடக்கும் சண்டை அல்ல. ஒரே மதத்துக்குள் நடக்கும் சண்டை. பசு நேசர்கள் பார்வை இந்தப் பக்கம் விழுவதே இல்லை. ஏனென்றால் எது உணர்ச்சியூட்ட, வெறியூட்ட பயன்படுமோ அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வோட்டு அரசியலின் வேட்டைப் பாணி. பசு பாதுகாப்பு என்ற பெயரால் மனிதம் வேட்டையாடப்படுகிறது.

ஏன் மீனை விட்டு விட்டீர்கள், அது மச்சாவதாரம் அல்லவா? ஏன் சேவலைக் கண்டு கொள்ள மறுக்கிறீர்கள், முருகனுக்குத் தொடர்பு உண்டே?