Published:Updated:

நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?
பிரீமியம் ஸ்டோரி
நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

ஓவியம்: ஹாசிப்கான்

நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?
பிரீமியம் ஸ்டோரி
நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பதில் தவறு இல்லை.  ஆனால் இவர்கள் காக்க நினைக்கும் மாடுகள் எல்லாம் நம்மூர் மாடுகளா? நமது நாட்டு மாடுகளா? கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பல்வேறு வகை நாட்டு மாடுகள் இருந்தனவே! அவை எல்லாம் எங்கே போயின? எனில் எந்த மியூஸியத்தில் இருக்கின்றன?  நாட்டு வகை மாடுகளை எல்லாம் அழித்து ஒழித்துவிட்ட நிலையில், இப்போது மேற்குலக சீமை மாடுகளுக்கான நலன்களைத்தான் மத்திய அரசு பேசிக்கொண்டிருக்கிறது. இவர்கள் போற்றும் ‘கோ’மாதாக்கள் அந்நிய தேசத்தைச் சேர்ந்த ‘கோ’மாதாக்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

இனம் அழிந்தது போல!

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், காங்கேயம், பர்கூர் செம்மரை, உம்பளச்சேரி, பாலமலை, ஆலம்பாடி, மணப்பாறை என்று நூற்றுக்கணக்கான நாட்டுரக மாடுகள் ஏகப்பட்டவை இருந்தன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனிச் சிறப்பு இருந்தன. அந்தந்தப் பகுதியின் தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்ப இவை இருந்தன. அவற்றின் பாலில் மருத்துவ குணங்களும் இருந்தன. உழவுக்காக, பயணத்துக்காக இருந்த இந்த வகை நாட்டு மாடுகள் வெகுவாக அருகிப்போய்விட்டன.நகரங்கள் தொடங்கிக் கிராமங்கள் வரை, எங்கு நோக்கினாலும் மேற்கத்திய மாடுகளான ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸன் வகை மாடுகளே கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. அதைத்தான் மத்திய அரசு ‘கோ‘மாதா எனக் கொண்டாடி வருகிறது. நம் நாட்டு வகை மாடுகள் எல்லாம் அரிதான மாட்டு வகை பட்டியலுக்கு மாறிப்போனது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்  தேடினால், ஓர் இனம் அழிக்கப்படுவதைப் போல் நம் நாட்டுவகை மாடுகளும் அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.

நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

நாட்டு மாடுகளை அழித்தது எது?

முதல் காரணம் நமக்கு வந்த ‘பசுமை புரட்சி’. உணவு பஞ்சத்தில் இருந்து மீள, உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டிக் கொண்டு வரப்பட்டதுதான்  ‘பசுமை புரட்சி’ திட்டம். ஆனால் அந்த நோக்கத்தைத் தாண்டி பல இழப்புகளுக்கும் அது காரணம் ஆனது.

மாடுகளை நம்பியிருந்த கமலை நீர் இறைப்பு விவசாயம், இயந்திர மோட்டாரால் நின்று போனது. டிராக்டர்களின் வருகையால் ஏர் உழுத மாடுகளின் தேவைகளும் வேண்டாம் என்று ஆனது. குட்டை குட்டையான புதிய ரக நெற் பயிர்களின் விளைச்சல் மாட்டுத் தீவனச் சிக்கலை உருவாக்கியது. இப்படி எல்லாமும் சேர்ந்து, விவசாயிகளிடம் இருந்த பெருந்தொகை மாடுகளை இறைச்சி விற்பனைக்கு அனுப்பின. மாடு வளர்ப்பும் குறைந்து போனது.அடுத்து வந்த ‘வெண்மை புரட்சி’ நாட்டு வகை மாடுகளுக்கு பெரிதாக பாடை கட்டியது. எப்படி?

வெளிநாட்டு மாடுகளின் விந்தணுக்கள்!

இது பற்றிக் கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் ராமச்சந்திரனிடம்  பேசினோம்.

“இந்த மாற்றங்கள் எல்லாம் 1970-களில் தொடங்கியது. அப்போது பால் மற்றும் இறைச்சி தட்டுப்பாடு இருந்தது. போதிய ஊட்டச்சத்து குறைவு என்ற சர்ச்சையும் எழுந்தது. அப்போதைய பால் உற்பத்தி 22 மில்லியன் டன்னாக இருந்தது. அன்றைய தேவைக்கு அது பற்றாக்குறையாக இருந்தது. அடுத்தடுத்த வளர்ச்சிக்கு ஏற்ப மாற்று திட்டங்கள் இருந்தால்தான் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்ற நிலை எழுந்தது. அதன்படி உள்நாட்டு மாட்டினங்களுடன், அதிகம் பால் தரக்கூடிய ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸன் ஆகிய வெளிநாட்டு மாடுகளின் விந்தணுக்களைச் சேர்த்து கருவூட்டல் செய்வது எனக் கொண்டு வந்தார்கள்.

அந்தக் கருவூட்டல் தொடர்ந்து நடந்தது. அதிலிருந்து பிறந்து வளர்ந்த மாடுகளில் இருந்தே அடுத்தடுத்தக் கருவூட்டலுக்கான விந்தணுக்களை எடுத்துப் பயன்படுத்தினார்கள். இன்று ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸன் வகை மாடுகளே இங்கு அதிகமாக இருக்கின்றன. அதே நேரத்தில் இன்றைய பால் உற்பத்தி 150 மில்லியன் டன்னாக  உயர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். மக்களின் பால்தேவை பூர்த்தியாகி இருக்கிறது என்ற கோணத்தையும் நான் மறுக்கவில்லை.
இப்போது, நமக்கான பாரம்பர்ய மாடுகள் எல்லாம் மறைந்து போயிருக்கின்றன. முன்பு பரவலாக இருந்த நாட்டு மாடுகள் இன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றன.இவற்றை மறுக்க முடியாது” என்றார்.

நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

‘‘கலப்பின பெருக்கம் கூடாது”

இந்த விவாதம் குறித்து ‘வானகம்’ அறங்காவலர்களில் ஒருவரும், பாரம்பர்ய மாடுகளின் வளர்ப்பு குறித்த களப்பணியில் இருப்பவருமான குமரவேலிடம் பேசினோம்.

‘‘பால் தேவைக்காக, பால் உற்பத்திக்காகத்தான்  இப்படியான மாற்றங்கள் நடந்தன என்கிறார்கள். முதலில் நமக்குப் பால் தேவையா? அது அத்தியாவசியமானதா என்ற கேள்வி முக்கியம். மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசிகளும் பால் பொருளை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவ தில்லை.  ஆடு, மாடு, கழுதை, குதிரை, ஒட்டகம், பன்றி என எந்தப் பால் கொடுக்கும் இனங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அது தன் குட்டிகளுக்கு வாழ்நாள் எல்லாம் பாலூட்டிக் கொண்டிருப்பதில்லை.பல் வளரும் வரைதான் கொடுக்கும். பிறகு எட்டி உதைத்து விரட்டிவிடும். இனி உனக்கான சத்துக்களை எல்லாம் புல் பூண்டுகளை மேய்ந்து எடுத்துக்கொள் என்ற இயற்கையின் நியதிதான் அது. மனிதர்களுக்கும் அப்படித்தான், குறிப்பிட்ட வயதில் தாய்ப்பால் மறக்கடிப்படும். அதன்பிறகு மற்ற பொருள்களில் இருந்து  கால்சியம், ஊட்டச் சத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயில் அதிகப்படியான சத்து உள்ளது. தாய்ப் பாலுக்கு இணையான சத்து தேங்காயில் இருந்துதான் கிடைக்கின்றது. அந்த புரிதலில் பார்த்தால் பாலின் தேவை இருக்காது. கலப்பின மாடுகளின் பெருக்கமும் இருக்காது.

நாம் காக்கப் போவது அந்நிய மாடுகளையா?

அதே போன்று வடநாட்டுப் பக்கம் உள்ள சாஹிவால், கிர் வகை மாடுகளின் விந்தணுக்களைக் கொண்டு வந்து இங்குள்ள நாட்டு மாடுகளில் கருவூட்டல் செய்வதாக இருந்தாலும் அது சரிவராது. அந்த வகை மாடுகளின் விலை அதிகமாக உள்ளது. ஒவ்வொன்றும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ளது. அப்படி என்றால் பாலை என்ன விலைக்கு விற்க முடியும்? இதிலும் சிக்கல் உள்ளது. ஆக மாடு வளர்ப்பு பாலுக்காக மட்டுமே என்பதைக் கைவிடவேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வளரும் மாடுகளை அந்தந்தப் பகுதிகளிலேயே வளர்க்க வேண்டும். ஈரோடு பகுதியில் உள்ள மாடுகளை மதுரை பகுதியில் வளர்க்கக் கூடாது. அந்தந்தச் சூழல் வேறு. இந்தியா முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் இருந்த நாட்டு வகை மாடுகளை அந்தந்தப் பகுதிகளிலேயே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். மத்திய மாநில கால்நடை பராமரிப்புத் துறை, அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இருக்கின்ற மேலை நாட்டு மாடுகளைக் காப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை” என்றார்.

நாட்டு மாடுகளை மீட்க வேண்டும்.

சுதந்திரத்துக்கு முன்பு குஜராத்தில் இருந்த பாவ்நகர் மகாராஜா, பிரேசில் நாட்டுக்கு கிர் வகை மாடுகளைப் பரிசாக அளித்தார்.அதனை பிரேசில் பயன்படுத்திக் கொண்டது. இப்போது கிர் வகை மாடுகளுக்கான விந்தணுக்களை பிரேசிலிடம் இருந்து குஜராத் அரசு வாங்கப் போகிறது.

அமெரிக்கா, இறைச்சிக்காக பிராமன் என்ற மாட்டை உருவாக்கி இருக்கிறது. பல்வேறு வகை மாடுகளில் இருந்து உருவாக்கப்பட்ட அந்த பிராமன் இறைச்சி மாடுகளில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு வகை மாட்டினங்களும் அடக்கம். பிரேசில் நாட்டினர், ஆந்திராவைச் சேர்ந்த ஓங்கோல் ரக மாடுகளை தங்கள் நாட்டுக்குக் கொண்டுசென்று, தற்போது அதிக மாட்டிறைச்சி கொடுக்கக்கூடிய இனமாக மாற்றியிருக்கிறார்கள்.

அந்த வகையில் நாமும் சில மாற்றங்களைக் கொண்டு வந்து நம் பாரம்பர்ய மாட்டு வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று 2008-ல் தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க கொள்கை முடிவுகளைப் புதிதாகக் கொண்டு வந்தார்கள். அதன்படி உம்பளச்சேரி, காங்கேயம் வகை மாடுகளைப் பண்ணைகளில் வளர்த்து, அதன் விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு செயற்கை முறை கருவூட்டலுக்காக வழங்கப்பட்டு வருவதோடு, தொடர்ந்து பல முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆக இருக்கின்ற மேலை நாட்டு வகை மாடுகளைக் காக்க கொள்கை முடிவுகள் என்பதை விட்டுவிட்டு, இந்த மண்ணிற்கு உண்டான பாரம்பர்ய மாடுகளைக் காப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசு கவனம் செலுத்தட்டும்.

கோமாதாவும் அந்நிய கோமாதாவாக இருக்கக்கூடாதல்லவா?

- பா.ஏகலைவன்