Published:Updated:

பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!
பிரீமியம் ஸ்டோரி
பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

ஜூ.வி லென்ஸ்

பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

ஜூ.வி லென்ஸ்

Published:Updated:
பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!
பிரீமியம் ஸ்டோரி
பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!
பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

பால் கலப்படம் தொடர்பாக நடந்துவரும் சர்ச்சை, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வருகிறது. தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதனால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள குற்றச்சாட்டுகள், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுக்குத் தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், தம்முடைய குற்றச்சாட்டை மேலும் அழுத்தமாக முன்வைத்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. “தனியார் பாலில் நூறு சதவிகிதம் கலப்படம் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பால் கெடாமல் இருப்பதற்காக, அதில் ரசாயனம் கலப்பது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தனியார் பாலில் கலப்படம் இல்லை என்பதைத் தனியார் நிறுவனங்கள் நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தனியார் பாலில் கலப்படம் உள்ளதா, இல்லையா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், ‘இந்தியாவின் 68 சதவிகிதப் பால் கலப்படமானது’ என்று கண்டறியப்பட்டது. பாலில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய, எளிய பரிசோதனைக் கருவிகளை அறிமுகம் செய்யுமாறு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-க்கு நுகர்வோர்ப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாலில் எந்த அளவுக்குக் கலப்படம் உள்ளது என்பதைக் கண்டறிய அந்த ஆணையம், சோதனை ஒன்றை மேற்கொண்டது. நாடு முழுவதும் 2,500 இடங்களில் இருந்து பால் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில், அதிர்ச்சிகரமான பல விவரங்கள் வெளியானதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஆஷிஷ் பகுகுணா, கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

‘‘பெரிய நிறுவனங்கள், உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைப் பெற்று, தரச் சான்று செய்கின்றன. அதில், கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறிய ரசாயனப் பரிசோதனை செய்கின்றன. பிறகு, பாலில் இருந்து நுண் கிருமிகள், கொழுப்பு நீக்கப்பட்டு, கலர் வாரியாகத் தேவையான அளவுக்குக் கொழுப்பு கலக்கப்பட்டு பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பாலில் 87 சதவிகிதம் நீர் உள்ளது. ஆனால், அடர்த்தி அதிகமுள்ள பால்தான் நல்லது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. மக்களின் இந்த மனநிலையை அறிந்து, பாலின் அடர்த்தியை அதிகமாக்குவதற்குக் கலப்படக்காரர்கள் பல புதிய வழிகளைக் கண்டறிந்தனர். பாலில் கலப்படம் தெரியாமல் இருப்பதற்காக ஸ்டார்ச், மைதா, குளுக்கோஸ், மரவள்ளிக் கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற பொருட்களைக் கலந்து அடர்த்தியைக் கூட்டுகின்றனர்.

இதைவிட இன்னும் ஆபத்தானது சிந்தடிக் பால். உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிந்தட்டிக் பால் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. சிந்தடிக் பால் என்பது பாலிலோ, பால் பவுடரிலோ தயாரிக்கப்படுவது அல்ல. ஒரு பெரிய கலவை டிரம்மில், வெந்நீரில் காஸ்டிக் சோடாவையும் யூரியாவையும் கலக்கின்றனர். இந்தக் கலவையை நன்கு வேகமாகக் கலக்கும்போது, வெண்ணிறப் பால் போன்ற ஒரு பொருள் உருவாகிறது. அதில், டிடெர்ஜென்ட் பவுடரைக் கலக்கின்றனர். அத்துடன், சில ரசாயனங்களையும் சேர்த்து நன்கு கலக்குகிறார்கள். கடைசியில், நிஜமான பால் தோற்றுப்போகும் அளவுக்கு சிந்தட்டிக் பால் கிடைக்கிறது. இந்தப் பாலை அருந்தினால், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் விரைவில் செயலிழந்துவிடும். இப்படி, உயிரையே பறிக்கும் எமனாக விளங்கும் சிந்தடிக் பால், தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதுதொடர்பாக, உரிய ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படவில்லை’’ என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

சிந்தட்டிக் பாலைக் கண்டறிவது சுலபமானதுதான். சிந்தட்டிக் பால், பார்ப்பதற்கு வெளுப்பாக இருக்கும். அதை சூடு செய்தாலோ, ஃப்ரிட்ஜில் வைத்தாலோ, வெளிர் மஞ்சளாக மாறிவிடும். சாதாரணப் பாலை, இரு விரல்களால் தொட்டுத் தடவினால், நீர் போல இருக்கும். ஆனால், சிந்தட்டிக் கலப்படப் பாலைத் தொட்டுத் தடவினால், சோப்பைத் தொட்டுத் தடவுவது போல இருக்கும். மேலும், யூரியா பரிசோதனைக்கு உட்படுத்தினால், சாதாரணப் பால் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறும். அதுவே, சிந்தட்டிக் பால் என்றால் அடர் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும்.

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டி வரும் நிலையில்,“தனியார் நிறுவனங்களிடம் பணம் வாங்குவதற்காக இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் எழுப்பி வருகிறார்”என்று தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். கூடவே, “ஆவின் பால் தரமானதா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். ஆவின் பாலில் கலப்படம் நடப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திண்டிவனம் அருகே ஆவின் பாலை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்றை மடக்கிய போலீஸார், டேங்கரில் உள்ள பாலைத் திருடி, அதில் தண்ணீரைக் கலப்படம் செய்யும் ஒரு கும்பலைக் கைதுசெய்தனர். அந்த டேங்கர், ஜெயலலிதா பேரவையின் தென் சென்னை தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் வைத்தியநாதனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். உச்ச நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்ற வைத்தியநாதன், ‘ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடக்கின்றன’ என்பது உட்பட ஆவினுக்கு எதிராகப் பலக் குற்றச்சாட்டுகளைக் கிளப்பினார். தற்போது, பாலில் கலப்படம் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ள நிலையில், வைத்தியநாதனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

பாலில்... மைதா, குளுக்கோஸ், ஜவ்வரிசி, மரவள்ளிக் கிழங்கு!

“ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்களே?”

“ஆவின் நிறுவனத்தில் நடக்கிற பல முறைகேடுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பலத் தகவல்களைப் பெற்றேன். அதில், எனக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக, 2012-ம் ஆண்டு மண்டகொளத்தூர் பி.எம்.சி சங்கத்தில் இருந்து சென்னைக்கு டேங்கரில் (எண் 6059) அனுப்பப்பட்ட 9,200 லிட்டர் பாலின் தரம் குறைவாக இருந்ததால், அது வேலூர் ஆவினுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. ஆவின் பாலில் இருக்கவேண்டிய அமிலத்தன்மை அளவு 0.155  எனத் தரக்கட்டுப்பாட்டு அலுவலரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பாலில், .0418 என அமிலத்தன்மை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமில அளவைக் குறைப்பதற்குக் கார உப்புகளை (காஸ்டிங் சோடா அல்லது ப்ளீச்சிங் பவுடர்) சேர்க்கும்போதுதான், அமில அளவு குறையும். இதன் மூலம், இந்த ஒன்றியம் பாலில் கார உப்புகளைச் சேர்த்துள்ளது நிரூபணம் ஆகிறது. இவ்வகையான கார உப்புகள் மனிதர்களுக்குப் புற்றுநோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் வருவதற்குக் காரணமாகின்றன. இது, உணவுப் பாதுகாப்புக்  கொள்கைக்கு மீறிய செயலாகும் என்று விசாரணை அதிகாரி தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். மூன்று மாத காலகட்டத்துக்குள், சுமார் 1,35,305 லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பப்பட்டு, அது தரமில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வெளியே தெரிந்தது இது ஒன்றுதான். தமிழகத்தின் பலப் பகுதிகளில், இப்படி நிறைய முறைகேடுகள் நடக்கின்றன.”

“வேறு என்ன முறைகேடுகள் நடக்கின்றன?”

“2012-ம் ஆண்டு வேலூர் ஆவினில் குளிரூட்டும் இயந்திரம் பழுதடைந்தது விட்டது. புதிய இயந்திரம் வாங்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும், புதிய இயந்திரம் வாங்கப்படவில்லை. இந்த இயந்திரம் கெட்டுப்போனதால், பாலில் சுத்தம்,சுகாதாரம் இல்லாத தண்ணீர் கலப்பதால், பால் கெட்டுப் போய் உள்ளது. இயந்திரம் பழுதடைந்த  விவரம் ஆபரேட்டரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் அதிகாரியின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.”

“ஆவின்பால் விநியோகத்தில் முறைகேடுகள் நடக்கின்றனவா?”

“அதிகாலையில் முகவர்கள் வந்து பாலை எடுக்கும் வரையில் தெருவில் அநாதையாக பெட்டிகளில் ஆவின் பாக்கெட்கள் இருக்கும். இதன் காரணமாக பால் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. பல இடங்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்ற உடன் பால் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லப்படுவது இதனால்தான்.”

“ஆவின் பாக்கெட் சில நேரங்களில் உடைந்து விடுகிறதே?”

“ஆவின் பாலை பேக்கேஜ் செய்யும் பாலிதீன் கவரின் அடர்த்தி (திக்னஸ்) குறைவாக இருப்பதை வாங்குகின்றனர். அதனால்தான் அடிக்கடி பால் பாக்கெட்கள் உடைந்து விடுகின்றன. கிண்டியில் உள்ள ஒரே நிறுவனத்தில் இருந்து மீண்டும், மீண்டும் பாலிதீன் பிலிம் கொள்முதல் செய்கின்றனர். இதை என்னால் நிரூபிக்க முடியும். அரசே பாலிதீன் கவருக்கான பிலிம் தயாரிக்கலாம் என்று சொன்னேன். அதிக விலை கொடுத்து தரம் குறைந்த பாலிதீன் பாக்கெட்கள் வாங்குவதால், ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் நஷ்டம் ஆகிறது. இவற்றையெல்லாம் நான் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இதில் பலருக்குத் தொடர்பு இருப்பதை ஆளும் கட்சியில் இருக்கும் நான் தட்டிக்கேட்டதால்தான் பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.”

உயிர் தரும் பாலில் கலப்படம் இருப்பதை அமைச்சரே சொல்லி இருக்கிறார். சொல்வதோடு அவரது கடமை முடிந்துவிடுகிறதா? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு?

- கே.பாலசுப்பிரமணி, பா.பிரவீன்குமார்
படம்: கே.ஜெரோம்