வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (23/07/2018)

கடைசி தொடர்பு:10:24 (23/07/2018)

`டெல்லிக்குச் சென்ற கட்டிப்பிடி வைத்தியம்’ - கமலை கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்!

 ‘கட்டிப்பிடி வைத்தியத்தை டெல்லி வரை கொண்டு சென்றதுதான் கமலின் மிகப் பெரும் சாதனை’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயகுமார்

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `` டெல்லியில் நடைபெற்ற 28-வது ஜி.எஸ்.டி கூட்டத்துக்குப் பிறகு 50 பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. பல பொருள்களின் வரியைக் குறைக்க வேண்டும் என முன்னதாக தமிழக அரசு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேபோல் இந்தக் கூட்டத்திலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழிலாளர்களின் உற்பத்தி பெரிதும் குறைந்துவிட்டது. சிறு தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 20 லட்சம் ரூபாய் வரை தொழில் செய்பவர்கள் ஜி.எஸ்.டி-யில் வரமாட்டார்கள். மத்திய நிதியமைச்சரின் அறிக்கையைப் பெற்ற பிறகு அடுத்த கூட்டத்தில் இதைப் பற்றிய முடிவுகள் அறிவிக்கப்படும். வரி முறையில் மாற்றம் செய்தாலும் ஜி.எஸ்.டி கவுன்சிலில்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.  

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய 150 நாள் சாதனை என்னவென்றால் உயர்மட்டக் குழுவை செயற்குழுவாக மாற்றியதுதான். அவரைப் பற்றி பேசி நாங்கள் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கமலின் மற்றொரு மிகப் பெரிய சாதனை, கட்டிப்பிடி வைத்தியத்தைத் தமிழகத்திலிருந்து டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார் என்பதுதான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கமுடியாது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.