Published:Updated:

ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!

ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!

ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!

ந்தியாவில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்பனை செய்யவும், கொல்லவும் மத்திய அரசு தடை விதித்தது.

ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!

பசுவை வைத்து பி.ஜே.பி நாட்டுக்குள் முன்னெடுத்த மாட்டரசியல் முன்பெல்லாம், இந்தியாவின் வடக்கில் மட்டும் லேசான அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தற்போது தெற்கிலும் அது பிரளயத்தைக் கிளப்பத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் மூன்று நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள், இந்த விஷயம் குறித்த வெவ்வேறு பார்வைகளைத் தந்துள்ளன.

‘‘அரசியலமைப்புக்கு எதிரானது!’’


‘மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, அந்தத் தடையை நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. “இந்தியாவில் 1960-ல் மத்திய அரசு உருவாக்கிய விலங்குகள் வதைத் தடை சட்டத்தின் பின்னணியை ஆராயும்போது, மனுதாரர்கள் சொல்வதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணவு என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதில் தலையிடும் வகையில் மத்திய அரசு தடைகளை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தத் தடை, சட்டங்கள் மூலம் ஏற்படுத்தப் படவில்லை. மாறாக, நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது. விலங்குகள் வதைத் தடுப்பு என்ற நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியலில் உள்ளது. அதே நேரத்தில் விலங்குகளைப் பலியிடுவது மாநில அரசின் தனிப்பட்டியலில் உள்ளது. இந்தப் பின்னணியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதி, நம் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்று பார்க்க வேண்டியதுள்ளது. இதனால் மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டியது அவசியம்” எனக் கூறி, 4 வார கால இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!

‘‘நீங்கள் சாப்பிடுவதை யார் தடுத்தது?”

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை கேட்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கைத் தாக்கல் செய்தவர் கேரள இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி.ஜி.சுனில். அந்த மனுவை கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவ்நீதி பிரசாத் சிங், நீதிபதி ராஜா விஜயராகவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

“மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ல் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மட்டுமே செய்யப் பட்டுள்ளன. அதில் மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை விதிக்கப் படவில்லை. மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் எந்தத் தடையும் விதிக்கப் படவில்லை. மாறாக, மாடு விற்பனை சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் மட்டுமே வகுக்கப்பட்டுள்ளன. விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் மாடுகள், கன்றுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு விற்பனை செய்ய மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டுச் சந்தைகளில் விற்க மட்டுமே இந்த விதி தடை விதிக்கிறது. வீட்டிலோ, மற்ற இடங்களிலோ விற்பதில் தடை இல்லை. தனிமனிதர்கள் மாட்டுக்கறி விற்கவோ, சாப்பிடவோ இது தடை போடவில்லை. நீங்கள் மாட்டு இறைச்சி விற்பதையோ, சாப்பிடுவதையோ யார் தடுத்தது?” என்று கேட்ட நீதிபதிகள், ‘‘சென்னை உயர் நீதிமன்றம் ஏன் இதற்குத் தடை விதித்தது?” என்று ஆச்சர்யமும் தெரிவித்தனர். 

‘‘பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்!”

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை தொடர்பான வழக்கு அல்ல. மாறாக, ஜெய்ப்பூரில் உள்ள கோசாலை ஒன்றில் பசுக்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பதற்கான வழக்கு. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, “பசு ஒரு மருத்துவ ஆலயம் போன்றது. பசுவின் கோமியம் அமிர்தம். கோமியத்தில் கங்கை வாசம் செய்கிறது. 10 கிராம் பசு நெய்யில் ஒரு டன் ஆக்சிஜன் கிடைக்கிறது. இவ்வளவு புனிதமான பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுக்களைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இப்படி வெவ்வேறு தீர்ப்புகளும் பரிந்துரைகளும் இந்த விவகாரத்தை மேலும் கிளறிவிட்டுள்ளன. மாட்டை வைத்து நாட்டுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் இன்னும் ஓயவில்லை. ஒரு மாட்டை வைத்தே ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்தலாம் என்பது பி.ஜே.பி, இந்திய அரசியலுக்கு அளித்துள்ள புது யுக்தி.

- ஜோ.ஸ்டாலின்

‘‘மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!’’

றைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது. இதற்காக வழக்கறிஞர் செல்வகோமதி மற்றும் ஆசிக் இலாஹி பாபு ஆகியோர் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், செல்வகோமதி சுத்த சைவம். மதுரையில் செயல்பட்டுவரும், ‘சமூக சட்டக்கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை’யின் மேலாண்மை அறங்காவலராக இருக்கும் செல்வகோமதி, குடும்ப வன்முறை தொடர்பாக ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘சுமங்கலித் திட்டம்’ தொடர்பான புகார் குறித்து ஆய்வுசெய்ய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் இடம்பெற்றவர்.

ஒரு பசு... மூன்று தீர்ப்புகள்!

“நான் என்ன சாப்பிடுகிறேன் என்பது என்னுடைய உரிமை. என்னை ‘நான்வெஜ்’ சாப்பிடச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அசைவ உணவு உண்பவர்களை, சைவ உணவுக்கு மாறச்சொல்வது ஒரு வன்முறையே. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மிகமோசமானவை. அது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது மட்டுமல்ல, அப்பட்டமான மனித உரிமை மீறலும் ஆகும். ஏழை விவசாயிகள், கால்நடை விற்பனையாளர்கள், இறைச்சிக் கடைக்காரர்கள், இறைச்சி உண்ணும் பெரும்பான்மை மக்கள் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்” என்கிறார் செல்வகோமதி.
செல்வகோமதி தரப்பில், இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கானிடம் பேசினோம். “விலங்குகள் சந்தையில், விற்பனை தொடர்பான  ஒழுங்குமுறையை மாநில அரசுதான் கொண்டு வரமுடியும். மத்திய அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை. மேலும், சட்டம் இயற்றும் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய விதிகளை மத்திய அரசு இதில் கடைப்பிடிக்கவில்லை. பலதரப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை மற்றும் உணவு விஷயங்களில் மத்திய அரசு, தன் அதிகாரத்தைச் செலுத்தக்கூடாது. இது மக்களிடையே பாகுபாட்டையும், பகையையும் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. தனிமனித உணவுத்தேர்வை மத்திய அரசு தடுக்கக் கூடாது. இதுபோன்ற பல விஷயங்களை, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை எடுத்துக் கூறினோம்” என்றார்.

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்