Published:Updated:

தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!
தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

பிரீமியம் ஸ்டோரி

வெடித்துச் சிதறும் என்று தெரிந்தும், எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கும் தவறை நாம் தொடர்ந்து செய்கிறோம். சென்னை, தியாகராயர் நகர் சரவணா ஸ்டோர்ஸில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின்போது, அதன் ஊழியர்கள் இருவர் தீயில் கருகிப்  பலியாகினர். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அதே நகரில் ‘தி சென்னை சில்க்ஸ்’ வணிக வளாகத்தைத் தீயின் கோர நாக்குகள் விழுங்கி முடித்திருக்கிறது. ‘தீயணைப்புத் துறையினர் அலட்சியம் காட்டாமல் வேகமாக செயல்பட்டிருந்தால் இந்தச் சேதத்தைத் தடுத்திருக்கலாம்’ என ‘தி சென்னை சில்க்ஸ்’ நிர்வாகம் சொன்னதால், இந்த விபத்துக்கு யார் மீது பழி போடுவது என ஒவ்வொருவரும் காரணம் தேடுகிறார்கள்.

தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

இது ‘எதிர்பாராத’ விபத்தல்ல... கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக ஆர்வலர்கள் பலருடைய எச்சரிக்கைகளையும் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்திவரும் வணிகர்கள், அவர்களுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறை.

இந்தக் கட்டட விதிமீறல்கள் தொடர்பாக பல்லாண்டுகளாக நீதிமன்றப் படியேறிவரும் பொதுநல ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். ‘‘இப்போது தீ விபத்து நடந்திருக்கும் தெற்கு உஸ்மான் சாலையில் அரசு அதிகாரி
களையும் அரசியல்வாதிகளையும் துணைக்கு வைத்துக்கொண்டு விதிமீறல்களோடு பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுபோல், சட்டத் துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை இடித்துத் தள்ளவேண்டும் எனக் கோரி கடந்த 2006-லேயே நான் பொதுநல வழக்கு தொடர்ந்துவிட்டேன். இடிக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும்கூட அரசு எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. 2014-ம் ஆண்டில்கூட, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாததற்கு சென்னை காவல்துறை கமிஷனர் சொன்ன காரணம், ‘இங்கு 99 சதவிகிதக் கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டவையே. இவற்றை இடித்துத்தள்ள முயன்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்’ என்பதுதான்.

மவுலிவாக்கம் கட்டட விபத்தில், ஏரி என்று தெரிந்தும் அங்கே 11 மாடி கட்ட அனுமதி கொடுத்தது வீட்டு வசதித்துறை செயலாளரின் தவறு. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். சமீபத்தில் வடபழனியில் கட்டடம் இடிந்து விழுந்து நான்கு பேர் இறந்தனர். ஆனால், இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் யார், எப்படி அனுமதி கொடுத்தனர் என்று விசாரணை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. விபத்தில் இறந்து போனவர்களுக்கு நிவாரணம் கொடுத்து, பிரச்னையை முடித்துவிடுகிறது அரசாங்கம். தவறு செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தண்டிக்காமல் எதையும் மாற்ற முடியாது.

தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

அடிப்படை சட்ட விதிகளைப் பின்பற்றாமலும், அனுமதி வாங்காமலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பெயர்ப் பட்டியலை கடந்த 2013-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ வெளியிட்டது. அதில், சென்னை சில்க்ஸ் கட்டடமும் அடக்கம். இதே விபத்து பகல் நேரத்தில் நிகழ்ந்திருந்தால், தீயிலும் நெரிசலிலும் எத்தனை அப்பாவிகளின் உயிர் போயிருக்கும் என நினைக்கவே பதறுகிறது’’ என வருத்தத்துடன் சொல்கிறார் டிராஃபிக் ராமசாமி.

அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு விதிமுறைகள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கின்றன. கட்டடத்தின் மொத்த பரப்பில் 10 சதவிகிதம் திறந்தவெளிப் பரப்பாக விட வேண்டும். சாலையில் இருந்து ஆறு மீட்டர் தள்ளியே அடுக்குமாடிக் கட்டடம் எழும்ப வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் அருகில் செல்ல வசதியாக, கட்டடத்தின் பக்கவாட்டில் 20 அடி அகலத்துக்குப் பாதை விட வேண்டும். சாலையின் அகலத்தைப் போல ஒன்றரை மடங்கு உயரம் மட்டுமே கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கமுடியும். 40 அடி அகல சாலை என்றால், 60 அடி உயரம் மட்டுமே கட்டடம் எழுப்ப முடியும். இந்த விதிமுறைகளை எல்லாம் பின்பற்றும் கட்டடங்களுக்கு மட்டுமே மெட்ரோ வாட்டர், மின் இணைப்பு வசதி, கழிவுநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளைப் பெற முடியும்.

ஆனால், இந்த விதிமுறைகளை மீறி சென்னையில் சுமார் 32 ஆயிரம் கட்டடங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றமே ஒரு வழக்கில் குறிப்பிட்டது. ‘‘தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுமே அதிகாரத்தில் இருக்கும்போது இதுபோன்ற விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் வேலையைத்தான் செய்துவருகின்றன’’ என்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.ஜி.தேவசகாயம். மேலும், ‘‘விதிமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அரசாங்கமோ ‘இல்லையில்லை, இவற்றை வரன்முறைப்படுத்தி விடுகிறோம்’ என்று 1999-ம் ஆண்டே அரசாணை வெளியிட்டார்கள். அதாவது, சட்டவிரோத செயலுக்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்கும் வேலையைச் செய்தார்கள். அதன்பிறகும் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இதேபோல் அரசாணைகள் பிறப்பித்தார்கள். ஆனால், நீதிமன்றம், 1999-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மட்டுமே அனுமதித்தது. உடனே உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், ‘சென்னை வாழமுடியாத நகராக மாறிவருகிறது. எனவே, விதிமீறல்களைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்’ என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதைத் தொடர்ந்து ஒரு கண்காணிப்புக் கமிட்டியை அமைத்தார்கள்’’ என்றார் தேவசகாயம்.

தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

இந்தக் கண்காணிப்புக் கமிட்டியில் தேவசகாயமும் உறுப்பினர். இதில் ஆறு அரசு அதிகாரிகளும், ஆறு அரசு சாரா நபர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என நீதிமன்றம் சொன்னது. இந்தக் கமிட்டி அமைத்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை 61 முறை கூட்டம் நடந்திருக்கிறது. விளைவு... எதுவுமே இல்லை!

‘‘நாங்கள் தி.நகரில் சிறப்பு சர்வே செய்தோம். அதில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோட்டில் மட்டும் 62 வணிக நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டடங்களைக் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தீ விபத்துக்கு உள்ளாகியிருக்கும் ஏழு மாடிக் கட்டடமான சென்னை சில்க்ஸ், அதில் இரண்டு மாடிகளை அனுமதி இல்லாமல் கட்டியிருக்கிறது. இடவசதி, தீயணைப்பு வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்யப்பட்டாமலே இப்படி அடுக்குமாடிகளைக் கட்டியவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அப்போதும் கட்டடங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும்விதமாக, அரசாங்கமே 2007-ல் விதிவிலக்கு சட்டத்தைக் கொண்டுவந்து விட்டார்கள். உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது. அடுத்ததாக 2012-ம் ஆண்டில் இன்னொரு சட்டம் கொண்டுவந்தார்கள். இதற்கிடையில், ராஜேசுவரன் கமிட்டி, மோகன் கமிட்டி என்று வரிசையாக கமிட்டிகளை நியமித்தும் காப்பாற்றப் பார்க்கிறார்கள். ஆக, கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளைவிடவும் அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் அரசாங்கங்கள் முழுவீச்சில் செயல்படுகின்றன. இதற்கு மூலகாரணமாக இருப்பது லஞ்சம் மட்டும்தான்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேவசகாயம்.

விதிமீறல்கள் தொடர்பாகப் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், ‘‘இதெல்லாம் அரசியல்ரீதியான கருத்து. நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘தீ விபத்து விடியற்காலையில் நிகழ்ந்திருப்பதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் நலனுக்குச் சேதம் விளைவிக்கும் எந்தவொரு விதிமீறலையும் இந்த அரசாங்கம் அனுமதிக்காது. நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவுகளைப் பாரபட்சம் இல்லாமல் முழுமையாக நடைமுறைப்படுத்துவோம்’’ என்றார் வழக்கமான வார்த்தைகளில்.

எந்த இழப்பிலும் பாடம் கற்றுக்கொள்ள, அதிகார வர்க்கம் தயாராக இல்லை.

- த.கதிரவன்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தி நகர்... கமிட்டி அமைத்து காப்பாற்றப் பார்க்கும் அரசு!

‘‘தெரிந்தே அரசு தவறிழைத்தது!’’

‘தி.நகர் குடியிருப்போர் நலச் சங்க’த்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம். ‘‘2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தோம். அதில், தி.நகரில் உள்ள கட்டடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதா என்று ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தோம். அப்போது நீதிமன்றம், எந்தெந்த கட்டடங்களில் ஆய்வுசெய்ய வேண்டும் எனப் பட்டியல் கொடுங்கள் என்று கேட்டனர். அதன்படி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 15 கடைகளைச் சொன்னோம். எங்கள் மனுவின்படி தீயணைப்புத் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. 15 கடைகளிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்தது. அதற்கு அரசு தரப்பில் அளித்த பதிலில், ‘இப்போது அரசின் நிலைமை சரியில்லை. பிரச்னை சரியானதும் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். தெரிந்தே அரசு பெரும் தவறை இழைத்திருக்கிறது. அரசியல் நிலைமை சரியில்லை என்றால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாதா? அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பெரிய விபத்தை நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும்” என்றார்.

- கே.பாலசுப்ரமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு