Published:Updated:

கானம் பாடிய வானம்பாடி!

கானம் பாடிய வானம்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
News
கானம் பாடிய வானம்பாடி!

கானம் பாடிய வானம்பாடி!

‘வானம்பாடி’ கூட்டத்தில் கானம் பாடிய கவிக்கோ பறந்து போய்விட்டார். உலகக் கவிதைகளைத் தமிழர்க்கு அறிமுகப்படுத்துவதில் பெரு முனைப்பு காட்டிய கவியரசர் அப்துல் ரகுமான்.

ஜூனியர் விகடனில் 100 அத்தியாயங்களுக்கு மேல் அவர் தொடர்ந்து எழுதினார். தொடர் அல்ல அது... உலகக் கவிஞர்களின் அணிவகுப்பு!

ஒரு வாரம் வால்ட் விட்மன் என்றால் அடுத்த வாரம் கைபி ஆஸ்மி... அதற்கு அடுத்து இக்பால்... வாரா வாரம் ஆரவாரம். அந்தச் சமயத்தில் தமிழகத்தில் கவிஞர்கள் எண்ணிக்கையில் திடீரென சில சதவிகிதம் உயர்ந்திருக்கக் கூடும். ஹைகூவையும் கஜல்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் அவர்.

கானம் பாடிய வானம்பாடி!

நிறைய படிப்பதும் அளவாக எழுதுவதும் கவிக்கோவின் பழக்கம்.

புறத்திணை சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்.
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி.

இதற்கு அவர் வைத்த தலைப்பு, அந்தக் கவிதைக்கு மகுடம் சூட்டியது. தலைப்பு: தேர்தல்.

சுயம்வரம் என்பது அகத்திணை சம்பந்தப்பட்டது. கவிஞரோ, புறத்திணை சுயம்வரம் என்கிறார்.

மண்டபத்திலோ முழுக்க முழுக்க போலி நளன்கள்... தன் தலைவனைத் தேர்வு செய்ய வேண்டிய தமயந்தியோ பார்வையற்றவள். எப்படி நடக்கிறது பாருங்கள் தேர்தல்!

புராண இதிகாசங்களிலே, காலம் காலமாக மக்கள் கேட்டு செழுமை பெற்ற தொல்மரபுச் சிந்தனைகளிலே அவருக்கு அலாதி ஆர்வம் இருந்தது. அவருடைய புதுக்கவிதைகளிலே அந்தத் தொன்மங்களைப் பயன்படுத்தி புதிய அர்த்தங்களை விளைவித்தார். இந்த நளன் கவிதை அப்படியான முயற்சிதான்.

இன்னொரு பக்கம் பைபிள் வாசகத்தை அவர் இப்படிப் பிரயோகித்தார். கர்த்தரின் வார்த்தை மனிதனை உருவாக்கியது. அதை, ‘என் வார்த்தை மாம்சம் ஆனது’ எனச் சொல்வார்கள். ரகுமான் அதை இப்படிப் புரட்டுகிறார்.

என் மாம்சம் வார்த்தை ஆனது.
ரத்தம் எனது ஆறாவது விரல் வழியே
வழிகிறது.


‘‘நான் என்னையே உருக்கி கவிதைகள் படைக்கிறேன்... அப்படி என்னை உருக்கும்போது ரத்தம் வழியும் அல்லவா... அது என் ஆறாவது விரலான என் பேனாவின் மையாக வழிகிறது’’ என்கிறார்.

கானம் பாடிய வானம்பாடி!

ஒருமுறை ஸ்பென்சர் அருகே, சாலை ஓரத்தில் பழைய புத்தகக் கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருக்கிறார் அப்துல் ரகுமான். ஏதோ அரசியல் பிரமுகர் காரில் விரைகிறார். போலீஸ்காரர்கள் விறைப்பாக நின்று, அவருக்கு வழி ஏற்படுத்தித் தருகிறார்கள். சென்ற கார், திடீரென நிற்கிறது. அவசரமாக ஒருவர் காரில் இருந்து குதித்து ஓடிவந்து அப்துல் ரகுமானை அழைக்கிறார். காரிலே கருணாநிதி. அப்படியே நடுரோட்டில் நலம் விசாரித்துவிட்டுப் பறக்கிறார். புரவலர்களுக்கும் புலவர்களுக்குமான உறவின் தொடர்ச்சி போல இருந்தது அந்த நிகழ்ச்சி.

‘பித்தன்’ என்ற தலைப்பில் வாழ்வின் முரண்சுவையை அவர் நிறைய எழுதினார். அதில் ஒன்று...

‘புத்தகங்களே
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்!’


இப்படி ஒரு வரியில் ஒரு முரண்சுவையைத் தட்டிவிட்டுப் போகக் கூடிய திறன் அவருக்கு இருந்தது.

கவியரங்கங்களில் அவருடைய கவிதைக்காகக் கூடிய கூட்டம் பெரிது. எல்லோரும் கவியரங்கத்துக்கு எழுதி வந்து கவிதையைப் படிக்கும் காலத்தில், அதை ஒரு கவிச் சொற்பொழிவாகச் செய்து நிகழ்த்துக்கலை போல மாற்றியவர் கவிக்கோ. கருணாநிதி தலைமையில் ஒரு கவியரங்கம். அப்துல் ரகுமான் அரங்கத்துக்குத் தாமதமாக வந்தார். கருணாநிதி வந்து வெகுநேரம் வரை அவர் வரவில்லை.

தலைமைக் கவிதை வாசித்தார் கருணாநிதி. ‘காக்க வைப்பதில் சிலருக்கு விருப்பம்.. தாமதமாக வந்தாலும் தங்கத் தமிழ் தருவார்’ என்ற ரீதியில் கவிதை வாயிலாகவே அப்துல் ரகுமானை கவிபாட அழைத்தார்.

ரகுமான் கவிதையை இப்படி ஆரம்பித்தார்.

‘ஏன்... காத்திருக்கக் கூடாதா?’

ஒரு வினாடி அதிர்ச்சி. சற்றே இடைவெளிவிட்டு கவிஞர் அடுத்த அடி பாடினார்.

‘எங்களை எல்லாம் நீங்கள் காத்திருக்கக் கூடாதா?’

அது கவியரங்கப் பொற்காலம். அடுத்து ஒரு கவியரங்கத்திலே அப்துல் ரகுமானைக் கருணாநிதி இப்படி அழைத்தார்:

‘வெற்றிபல பெற்று நான் விருது பெற வரும்போது
வெகுமானம் எதுவேண்டும் எனக்கேட்டால் அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்.’


இன்று, வெகுமானம் கேட்டவர் மௌனத்தில். வகை வகையாய் கவி பாடிய ரகுமானோ வானத்தில்!

- தமிழ்மகன்
படங்கள்: டிராட்ஸ்கி மருது

கவிக்கோவும் ஜூனியர் விகடனும்!


‘வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டு விட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?’


என்று குழந்தைத் தொழிலாளர் அவலத்தை சாடிய கவிக்கோ, தனது மகத்தான படைப்புகளை ஜூனியர் விகடன் வாசகர்களுக்கே விருந்தாக அளித்தார். ‘கரைகளே நதியாவதில்லை’, ‘அவளுக்கு நிலா என்று பெயர்’, ‘முட்டைவாசிகள்’, ‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’, ‘சொந்தச் சிறைகள்’, ‘இது சிறகுகளின் நேரம்’ என ஆறு மகத்தான தொடர்களை அவர் ஜூனியர் விகடனில் எழுதினார். கவிதைகளை மட்டுமின்றி, இந்த நீலவானத்துக்குக் கீழே இருக்கும் எல்லா விஷயங்கள் பற்றியும் நம் வாசகர்களோடு பகிர்ந்துகொண்டார். அவரின் மறைவு, நமக்குப் பேரிழப்பு!