Published:Updated:

புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!

புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!

புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!

“இமயமலையைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது, இரும்பைவிட வலிமையானது, தேனைவிட இனிப்பானது” - இப்படித்தான் சீனாவுடனான தங்கள் நாட்டு உறவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்டு வந்தார்கள். அந்த உறவின் உச்சகட்ட நெருக்கம்தான் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் (China-Pakistan Economic Corridor). இந்தியாவுக்குப் பிடிக்காத, இந்தியாவுக்கு எரிச்சல் தருகிற எதையும் உற்சாகமாகச் செய்யும் பாகிஸ்தான். சீனாவும் அப்படியே! (இரண்டு தேசங்களும் இணையும் இந்தத் திட்டம், இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தளவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பது பற்றி கடந்த ஜூ.வி இதழில் குறிப்பிட்டிருந்தோம்.)

அதனாலேயே இந்தத் திட்டத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். “இந்தப் புதிய பொருளாதார வழித்தடத் திட்டம் மூலம் வரும் சீன முதலீடுகளால், பாகிஸ்தானின் பொருளாதாரம் புத்துயிர் பெறும். தன்னுடைய பாதுகாப்புப் பிரச்னைகளிலிருந்து பாகிஸ்தானால் மீண்டுவர முடியுமென்றால், CPEC திட்டம் உண்மையிலேயே பாகிஸ்தானுக்குத் துணிந்து விளையாடிப் பார்க்கிற ஒரு மாற்று ஆட்டம்தான்” என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!

நவாஸ் ஷெரீப் இப்படிச் சொல்லி வந்தாலும், ‘‘இந்தத் திட்டத்தின் பின்னணியில் சீனாவுக்கு இருக்கும் உள்நோக்கத்தைக் கணிப்பதற்குப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள்” எனக் கவலை தெரிவிக்கின்றனர் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.   

‘‘இந்தத் திட்டம், பாகிஸ்தானைப் பெரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடும். சீனாவின் காலனி நாடாக பாகிஸ்தானை ஆக்கிவிடும். சீனாவுக்குத்தான் இந்தத் திட்டத்தின் முழுப் பலனும் கிடைக்கும்’’ என்று பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக, இத்திட்டத்தின் முழு வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘‘அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு, பாகிஸ்தானில் எத்தகைய நடவடிக்கைகளுக்கு சீனா முன்னுரிமை அளிக்கப்போகிறது என்ற விவரங்கள் திட்ட வரைவில் பக்காவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும்போது சீனாவின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

‘பயிர்கள் சாகுபடிக்கான வெவ்வேறு வகையான விதைகள் உற்பத்தி முதல் நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் வரையிலான வேளாண் பணிகளை ‘செயல்படுத்திக் காட்டும் திட்டம்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், சீன நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்படும். ‘சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு’ என்ற பெயரில் பெஷாவர் தொடங்கி கராச்சி வரை சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட்கள் என பல இடங்களில் 24 மணி நேர வீடியோ கேமரா பதிவுகளுடன் கூடிய கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். சீன கலாசாரத்தைப் பாகிஸ்தானில் பரவலாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளை, சீனத் தொலைக்காட்சிகளுடன் இணைந்து பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப ஏதுவாக, ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் வசதி பாகிஸ்தான் முழுவதும் ஏற்படுத்தப்படும் என்பது உட்பட பல திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் விதமாக,  பாகிஸ்தானின் உள்நாட்டுப் பொருளாதாரம் இதுவரை திறந்துவிடப்படவில்லை. ஆனால், சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், தற்போது அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தானின் சில இடங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள், செல்போன்கள் போன்றவற்றின் விற்பனைக்காக சில சீன நிறுவனங்கள் கடைவிரித்து, தங்களுக்கான சந்தையை ஏற்படுத்தி விட்டன. 

புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!

மேலும், பாகிஸ்தானில் பல்வேறு வேளாண் திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்துடன், தனக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் செயல்படும் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் தலமாகவும் பாகிஸ்தானைப் பயன்படுத்த இத்திட்டம் வழிவகுத்துள்ளது.

இதனால், “பாகிஸ்தானின் பெரும்பான்மையான வேளாண் நிலங்கள், விரைவிலேயே  சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்” என்று எச்சரிக்கிறார், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலப் பொருளாதார நிபுணரான கியாசிர் பெங்காலி. பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் தொடர்பான மாநாட்டுக்கு முன்னர், கராச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில்தான் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

வேளாண்துறை கதை இதுவென்றால், தொழில் துறைக்காக, பாகிஸ்தான் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ‘மேற்கு மற்றும் வடமேற்கு மண்டலம் தாதுக்களைப் பிரித்தெடுக்கவும், மத்திய மண்டலம் ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் சிமென்ட் உற்பத்திக்காகவும், தெற்கு மண்டலம் (கராச்சி துறைமுகம் உள்ள பகுதி) பெட்ரோகெமிக்கல், இரும்பு மற்றும் ஸ்டீல், பொறியியல் எந்திரங்கள் உற்பத்தி போன்றவற்றுக்காகவும் பயன்படுத்தப்படும்’ என அந்தத் திட்ட வரைவில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தத் திட்டம் முழுக்கவே, ‘பாகிஸ்தானைச்  சீனா   எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’ என்பதாகவே இருக்கிறது.

சரி, இந்தத் திட்டத்தினால் பாகிஸ்தானுக்கு சிறிதும் பலன் இல்லையா என்று கேட்டால், ‘இருக்கு... ஆனா இல்லை’ என்ற பாணியில்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் வரும் சீன முதலீடுகளால், பாகிஸ்தானின் பொருளாதாரம் புத்துயிர் பெறும். அதே சமயம், சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை எந்த அளவுக்குத் தனது தொழில் வளர்ச்சிக்குப் பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பொருளாதார வளர்ச்சி அமையும்.

புலி வாலைப் பிடித்துள்ள பாகிஸ்தான்!

“பாகிஸ்தான் - சீனா இடையேயான நட்புறவு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், முதலில் தேச நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். விளைவுகளை யோசிக்காமல் சீனாவைப்  பாகிஸ்தானுக்குள் ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால், எதிர்காலத்தில் பாகிஸ்தான், இன்னொருமுறை கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்துக்குள் செல்வதுபோன்று அமைந்து விடும்” என எச்சரித்துள்ளார், திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரான தாஹிர் மஷாதி.

இந்நிலையில், இந்தப் பொருளாதாரத் திட்டத்துக்குப் பாகிஸ்தானின் பங்காக, உள்ளூர் நிதியைப் பயன்படுத்தியது ஏன் என்று பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இது, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும் என்றும், இந்தச் சுமையைப் பாகிஸ்தானால் தாங்க முடியாது என்றும் எச்சரித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டம் தொடர்புடைய மின் திட்டங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைச் சீனாதான் நிர்ணயிக்கும் என்பதால், அந்தக் கட்டணம் ஏழை மக்களால் தாங்கமுடியாததாக இருக்கும் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, ‘‘ஆரம்பத்தில், பாகிஸ்தானுக்குள் செய்யப்படும் அபரிமிதமான அந்நிய முதலீடுகளால், கிடைக்கிற பொருளாதார முன்னேற்றம் நல்ல பலன்களை அளிக்கும். ஆனால், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், அதில் கிடைக்கும் லாபத்தை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்துச் சென்றுவிடுவர். அத்துடன் இத்திட்டத்துக்காக வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது, அது பாகிஸ்தானுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்’’ என சர்வதேச நிதியம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சீனர்கள் வருவதற்கு விசா போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை; ஆனால், பாகிஸ்தானியர்கள் இப்படி சீனாவுக்குள் நுழைய முடியாது. இந்தமாதிரி எல்லா வகையிலும் சீனாவுக்குச் சாதகமாகவும், பாகிஸ்தானுக்குப் பாதகமாகவும் இருக்கிறது இந்தத் திட்டம்.

இப்படி தொடக்கத்திலேயே பல திசைகளில் இருந்தும் எச்சரிக்கைகளும், கவலைகளும் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. ஆனாலும், இத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான் பின்வாங்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அவ்வாறு செய்தால், அது சீனாவைப் பகைத்துக்கொள்வதற்குச் சமம். எனவே, புலி வாலைப் பிடித்த கதையாகத் தவித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். 

- பா.முகிலன்