Published:Updated:

``நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்” - முதல்வருக்கு ஆ.ராசா சவால்!

``நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்” - முதல்வருக்கு ஆ.ராசா சவால்!
``நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்” - முதல்வருக்கு ஆ.ராசா சவால்!

``வருமான வரி கட்டாததால்தான் செய்யாத்துரை வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு நடந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். வருமான வரி கட்டாததால்தான் செய்யாத்துரை வீட்டில் ரெய்டா? ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும், தங்க நகைகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ரசீதுகளை  வழங்கி விளக்கம் அளிக்க முடியுமா? அப்படி வழங்கிவிட்டால் நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடியில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, ``பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆவேசமாகப் பேசினார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. கடந்த 4 வருடத்தில் 9 முறை மட்டுமே நாடாளுமன்ற அவைக்கு வந்துள்ளார் மோடி. பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர்ரெட்டி என்பதைப் போல, முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர்தான் தற்போது வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருக்கும் செய்யாத்துரை.

செய்யாத்துரை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் பழனிசாமியிடம் கேட்டபோது, ``இது ஊழல் செய்யப்பட்டதற்கான ரெய்டு அல்ல. வருமான வரியைக் கட்டாமல் விட்டதால்தான் இந்தச் சோதனைகளும் வழக்குகளும்” என்றார் அவர். சாதாரண ஒரு காலனி வீடு கட்டினால்கூட, ஒப்பந்தக்காரருக்கு அந்தப் பணம் காசோலையாகத்தான் வழங்கப்படும். ஒரு பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரான செய்யாத்துரைக்கு மட்டும் ஒப்பந்தப் பணிக்கான பணம், காசோலையாக வழங்கப்படாமல் பணமாகவா வழங்கப்பட்டிருக்க முடியும்?

செய்யாத்துரை வீட்டிலும், அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட ரூ.200 கோடி பணத்துக்கு வங்கிக் கணக்கில் இருந்து சரியான கணக்கையும்,  தங்க நகைக்கு முறையான ரசீதையும் அதற்கான விளக்கத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வழங்க முடியுமா? அப்படி வழங்கிவிட்டால் நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்கிறேன்.  

குட்கா வழக்கில் யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தார் என்பதற்கான டைரி சிக்கியதும், அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு  மூன்று முறை விசாரணைக்காக ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், அவர் மீது எவ்விதமான சட்டரீதியான நடவடிக்கையும்  இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்காக தி.மு.க.-வும் கலைஞரும் ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை என்கிறார் எடப்பாடி. 

கடந்த 1971-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, வாரியம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க.தான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதும், இடைக்காலத் தடையாக தண்ணீர் வழங்கிட சட்டப் போராட்டம் நடத்தியதும் தி.மு.க.தான். அதன்பிறகு 1991 முதல் 1996 வரையில் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு கடிதமாவது எழுதியிருப்பாரா?” என்றவர் இறுதியாக,

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மக்கள் மீது திட்டமிட்டே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு துப்பாக்கிச்சூட்டுக்கு முன்னர் செய்ய வேண்டிய எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. லென்ஸ் பொருத்தப்பட்டத் துப்பாக்கி மூலம் போராட்டத்தை முன்னெடுத்தவர், ஒருங்கிணைப்புச் செய்தவர் எனக் குறி பார்த்துச் சுடப்பட்டுள்ளனர். ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவூட்டி உள்ளது. இது ஜனநாயக வன்முறைச் சம்பவம்” என்றார்.